தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி கடந்த ஜன.7-ல் நடைபெறவிருந்த கட்டாயத் தமிழ் தகுதித்தேர்வு புயல், மழை காரணமாக பிப்.4-க்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த கட்டாயத் தமிழ் தகுதித்தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள்பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமேபிரதான தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கட்டாயத் தமிழ்தகுதித்தேர்வில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரியும், இதுதொடர்பாக அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரியும் மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், கடந்த 2016-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில், அரசுப் பணிக்கு தகுதிபெற்று தமிழ் மொழியில் தகுதிபெற்றிருக்காவிட்டால், பணி நியமனத்துக்குப் பின் 2 ஆண்டுகளில் தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, போட்டித் தேர்விலேயே தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொழி சிறுபான்மையினர் அரசு பணியை பெறுவதில் பாதிப்பு ஏற்படும். எனவேமொழி சிறுபான்மையின விண்ணப்பதாரர்கள் தமிழ் தகுதித்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும், என கோரப்பட்டிருந்தது.
ஓராண்டு அவகாசம் வேண்டும்: இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.இளங்கோ, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் மற்றும் மொழி சிறுபான்மையின விண்ணப்பதாரர்கள் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் ஓராண்டாவது அவகாசம் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் ஆகியோர் இதுதொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. அதன் அடிப்படையில்தான் இந்தபோட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த தேர்வை 41 ஆயிரத்து 485 விண்ணப்பதாரர்கள் எழுதவுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது தேர்வு நடைமுறைகளை பாதிக்கும். எனவே மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று விலக்கு அளிக்க முடியாது. இதுதொடர்பாக தமிழக அரசுதான் முடிவு செய்ய முடியும். இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியோர் வரும் மார்ச் 7-க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...