Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசியல் தலையீடுகளற்ற நல்லாசிரியர் விருதே தேவை

 1001462731 

அரசியல் தலையீடுகளற்ற நல்லாசிரியர் விருதே தேவை!

செப்டம்பர் மாதம் ஆசிரியர்களுக்கான மாதமாகும். ஆம், ஆசிரியர் நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் காலமிது. செப்டம்பர் 5 அன்று மாநில தலைநகரில் மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 380 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்களுக்கு டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெறும். 

வெள்ளி பதக்க விருதுடன் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் சான்றிதழும் மாபெரும் மேடையில் வழங்கப்பெறுவது குறிப்பிடத்தக்கது. தன்னலமற்ற உழைப்பிற்கு கிடைத்த மரியாதையாக ஆசிரியர்கள் நினைந்து நினைந்து மகிழ்ந்த பொழுதுகள் பெருமையும் பெருமிதமும் மிக்கவையாக இருந்தது ஒரு காலம். நல்ல நபருக்கு, சரியான காலத்தில் அரசால் உரிய, உகந்த, உன்னத அங்கீகாரம் வழங்கிப் பெருமைப்படுத்தியதை யாரும் விமர்சிக்க முன்வந்தது என்பது மிக மிக சொற்பமாகும். 

ஒரு கொள்ளுப்பையின் பின்னால் ஓடும் குதிரை போல அதிகாரமிக்க மேலிடத்துப் பரிந்துரை நோக்கிப் போனதும் ஓரிருவர் வேண்டுமானால் இருக்கலாம். ஆசிரியர் கற்றல் கற்பித்தல் சார்ந்த தனித்திறமைகள், மாணவர்கள் நலனில் அதீத அக்கறை, பள்ளி மேம்பாடு, சமுதாய முன்னேற்றத்தில் பங்களிப்பு முதலானவை சார்ந்து சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்களால் உற்றுநோக்கி, விருப்பு வெறுப்பிற்கு இடங்கொடாமல் உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மந்தன அறிக்கையின் அடிப்படையில் நல்லாசிரியர் விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர். இதில் அரசியல் தலையீடுகள் மற்றும் குறுக்கீடுகள் என்பது பெருமளவில் இருந்ததாக வெளிப்படையாகத் தெரிந்ததில்லை.விரல் விட்டு எண்ணக்கூடிய பொறுமலும் பெருமூச்சும் இருந்தது என்பதும் ஓர் அரசல்புரசலே ஆகும். ஓரிரு நாள்களில் அதுவும் கடந்து போய் விடும். அதன்பின் அரசால் அறிவிக்கப்பட்ட 'அந்த நல்லாசிரியர்' தம் எஞ்சிய வாழ்நாள் முழுதும் ஆசிரியர் சமூகத்தாலும் பொது மக்களாலும் உயர் அலுவலர்களாலும் அரசியல்வாதிகளாலும் மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டது அறியத்தக்கது. வீட்டிலும் குடும்பத்திலும் தனி மரியாதை தான்.

இத்தகைய பெருமைமிகு நல்லாசிரியர் விருது என்பது மலிவான ஒன்றாக மலிந்து போனது வேதனைக்குரியது. தக்க திறமையும் தகுதியும் அனுபவமும் உள்ளோர் ஒருவித முகச்சுளிப்புடன் நமக்கும் நல்லாசிரியர் விருதிற்கும் சம்பந்தமில்லை என்று ஓரமாக ஒதுங்கிச் செல்லும் நோக்கும் போக்கும் அண்மையில் காணக் கிடைப்பது துரதிர்ஷ்டவசமானது. அரசியல் சார்ந்த பரிந்துரை கடிதம் இல்லா முன்மொழிவுகள் குப்பையிலே என்பது போல் நல்லாசிரியர் விருது தேர்வு ஆகிவிட்டது. இதில் அதிக பரிந்துரை கடிதங்கள் வாங்கி வைத்திருப்பவர்கள் பாக்கியசாலிகள் ஆவார்கள். கல்வி மேலாண்மைத் தகவல் மையம் வழியே இணைய வழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்துவதும் சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்ட அளவில் நாள் கணக்கில் சற்றேறக்குறைய ஒரு மணி நேரம் கால அளவு நேர்காணல் நிகழ்த்துவதும் உள்ளிட்ட அனைத்தும் மிகவும் சிறப்பானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நிகழ்வது பாராட்டுக்குரியது ஆகும். அதன்பின் நிகழும் திரைமறைவு வேலைகள் தாம் மிகவும் வருந்தத்தக்கவையாக உள்ளன. வலியது வாழும் என்னும் உயிரியல் சார்ந்த கூற்றுக்கேற்ப வலியவர்கள் விருதாளர்கள் ஆகின்றார்கள். அதாவது அங்குசம் வாங்க யானையளவு மெனக்கெடல் நிகழ்த்துவதைப் பார்க்கவே பயமாக இருக்கிறது! விருதைப் பெறுவதற்கும் வாங்குவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதன் காரணமாக விருதின் மேலுள்ள மரியாதை நாளுக்கு நாள் குறைந்து வருவது வேதனைக்குரியது. இதில் பலரும் மலையளவு மெனக்கெட்டு அலைந்து திரிந்து ஆள்வைத்து அனைத்து பலத்தையும் உபயோகப்படுத்தி வாங்கிய நல்லாசிரியர் விருதை வெளிப்படையாகக் கூற முடியாமலும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள முடியாமலும் தேள் கொட்டியதைச் சொல்ல முடியாமல் திணறும் நபரைப் போல தவிப்பதைப் பார்க்கவே பரிதாபமாக உள்ளது. 

இந்த நிலை மாற்றப்பட வேண்டியது அவசர அவசியம் ஆகும். நல்லாசிரியர் விருதில் அரசியல் கலப்பது ஆரோக்கியமானதலல்ல. குறிப்பிட்ட அந்த 400 பேரைத் தவிர ஏனையோர் அங்கலாய்ப்பதும் அவநம்பிக்கை கொள்வதும் அதன் எதிர்வினையாக எதிர் முகாமில் தஞ்சம் புகுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடக் கூடும். ஆசிரியர்களுக்கென்று ஓர் அரசியல் உண்டு. அஃது அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியலாகும். நல்லோர் நழுவ யாருக்கு வேண்டும் இந்த அரசியல் சுண்டலும் சுரண்டலும். அரசியல் தலையீடுகளற்ற, குறுக்கீடுகளற்ற நல்லாசிரியர் விருதே ஆசிரியர் நாளன்று ஆசிரியர்களுக்குத் தேவை!

எழுத்தாளர் மணி கணேசன் 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive