போலீஸ் உடையில் வீடியோ காலில் மிரட்டல்
ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.30 லட்சத்தை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் உடையில் வீடியோ காலில் தோன்றி, டிஜிட்டல் கைது செய்துள்ளதாக மிரட்டி இந்த மோசடி நடைபெற்றுள்ளது.
குமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த 63 வயது ஓய்வுபெற்ற ஆசிரியரின் செல்போன் எண்ணுக்கு ஒரு வீடியோ கால் வந்தது.
மறுமுனையில் பேசியவர் போலீஸ் அதிகாரி உடையில் தோன்றி, "நான் மும்பை போலீஸ் அதிகாரி. உங்களது வங்கி கணக்கில் இருந்து சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதால், தற்போது உங்களை வீட்டு காவலில் (டிஜிட்டல் கைது) வைத்துள்ளோம்" என்று கூறி போலியான பிடியாணையை காட்டி மிரட்டியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய ஆசிரியர், மர்ம ஆசாமிக்கு தனது வங்கி கணக்கு விவரங்களை அனுப்பினார். மேலும், வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பும்படியும், அந்த பணத்தை ரிசர்வ் வங்கியில் கொடுத்து சரிபார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிடுவதாகவும் கூறி நம்ப வைத்துள்ளார்.
பயத்தில் இருந்த ஆசிரியர் உடனே தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.30 லட்சத்தை மர்ம ஆசாமி கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பினார்.
பணம் அனுப்பிய சிறிது நேரத்தில் மர்ம ஆசாமி வீடியோ கால் அழைப்பை துண்டித்துவிட்டார். அந்த எண்ணை மீண்டும் அழைத்தபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.
அப்போதுதான் மர்ம ஆசாமி தன்னை ஏமாற்றி மோசடி செய்தது முதியவருக்கு தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...