Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மெளனப் புரட்சி ஏற்படுத்தும் ஆசிரியர்கள்

5733 
ஆசிரியர்களுக்குத் தரப்படும் மரியாதை சமூகத்தில் எந்தப் பொறுப்பில் இருப்பவர்களையும் விடக் கண்டிப்பாக அதிகமாகத்தான் இருக்க முடியும். குருகுலக் கல்வி முறையில் இருந்து வகுப்பறை கல்விக்கு மாறிய பின்பும் மாறாதது ஆசிரியர் மட்டுமே. கிராமங்களில் உள்ள ஓராசிரியர் பள்ளி முதல் மாநகரங்களில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் அவர்கள் நடந்துகொள்ளும் முறையை வைத்துத்தான் மரியாதையும் கெüரவமும் கிடைக்கிறது.
 
ஆனால், கண்டிப்பாக எந்தவொரு ஆசிரியரும் தன் மாணவர்களில் பலருக்கு முன்னுதாரணமாகத்தான் இருக்கிறார். மிகச் சிறந்த ஆசிரியர்களுக்கு இந்த சமுதாயம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாணவரும் உரிய மரியாதையை வழங்கியே வந்துள்ளனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆசிரியரான சிவசுப்பிரமணிய ஐயர், பறவை பறப்பது தொடர்பான பாடம் எடுத்தாராம். அது அப்துல் கலாமுக்குப் புரியாததால் ராமேசுவரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று நேரடியாக செயல்விளக்கமளித்தாராம். இது அப்துல் கலாமின் நெஞ்சை விட்டு என்றுமே அகலவில்லை. இதை தன்னுடைய "அக்னிச் சிறகுகள்' புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் அப்துல் கலாம்.

இப்போதும் கிராமப்புறங்களில் உள்ள பலருக்கும் அங்குள்ள ஆசிரியர்தான் அனைத்தும் அறிந்தவர். நல்லது-கெட்டது அனைத்துக்கும் அவர்தான். முன்பெல்லாம் ஆசிரியர்களின் அனைத்துத் தேவைகளையும் கிராமத்தினரே பூர்த்தி செய்வார்கள். இப்போதும் சில கிராமங்களில் அதுபோல உள்ளது.

மேட்டூர் பகுதியில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருக்கு வீடு கட்டித் தந்துள்ளனர் கிராமப்புறத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள். இப்போதும் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு ஓசையின்றி உதவி வரும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் ஏராளம் ஏராளம்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்த ஏழை விவசாயியின் 2 மகன்கள், ஒரு மகள் மூவரும் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். அவர்கள் மூவரும் படிப்பில் சிறக்கவும் நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறவும் தேவையான பயிற்சிகளை அளித்தது அவர்களின் பள்ளி ஆசிரியர்களே. தேவையான பண உதவியையும் அந்த ஆசிரியர்களே செய்துள்ளனர்.

இவை வெளியில் தெரியவந்த சில நற்காரியங்கள் மட்டுமே. ஆனால், கண்ணுக்குத் தெரியாத பல்வேறு உதவிகளையும் செய்து கொடுத்துக் கொண்டு சப்தமில்லாமல் மெüனப் புரட்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

பெற்றோர் சொல்வதைவிட ஆசிரியர்கள் சொல்வதே சரி என்பதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படும் குழந்தைகள் இருக்கின்றனர்.

வகுப்பறை கல்வியைத் தாண்டி வாழ்க்கைக் கல்வியையும் பக்குவமாக மாணவ, மாணவியருக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள்தான் இன்றைய தேவை. அவ்வாறு கற்றுத் தரும் ஆசிரியர்களைத்தான் மாணவ சமுதாயம் போற்றி, உரிய மரியாதையையும் தருகிறது.

வாழ்க்கைக் கல்வியின் அடிப்படையான ஒழுக்கம், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை, சகிப்புத் தன்மை ஆகியவற்றை கற்றுத் தந்து சமுதாயத்தின் மிக முக்கிய அங்கமாக ஒரு மாணவனை மாற்றுவதற்கு ஆசிரியர்களுக்கு அசாத்திய திறமையும் தன்னம்பிக்கையும் வேண்டும்.

நமது நாட்டின் மிகச் சிறந்த தத்துவ மேதைகளில் ஒருவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைத்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். அவரும் மிகச் சிறந்த ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் சேவையாற்றினார்.

உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்ட இன்றைய காலச் சூழலில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும் வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதற்கேற்ப அவர்களும் தங்களை மாற்றிக் கொண்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதுவும் கரோனா தீ நுண்மி உலகை ஆட்டிப் படைத்து உலக இயக்கமே நின்றுவிட்ட நிலையில் கற்பித்தல் பணியிலும் மிகப் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இதற்குத் தேவையான அறிதிறன் பேசிகளை தங்கள் மாணவர்களுக்கு வாங்கித் தந்த ஆசிரியர்கள் பல ஆயிரம் பேர். தங்கள் மாணவ, மாணவியர் மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பமும் பசியால் வாடக் கூடாது என நினைத்து உணவுப் பொருள்களை வாங்கித் தந்த ஆசிரியர்களை மாணவ சமுதாயம் என்றுமே மறக்காது.

உலகின் எந்த மூலைக்கு ஆசிரியர் சென்றாலும் ஏதாவது ஒரு மாணவருக்கு கண்டிப்பாக ஆசிரியரைத் தெரிந்து உதவி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அதைத் தங்கள் பெருமையாகக் கொள்ளும் மாணவர்கள் இருக்கிறார்கள்.

உலகின் பெரிய பணக்காரருக்கும் சாதாரண வாழ்க்கை வாழ்பவருக்கும் இருக்கும் ஒரே பிணைப்பு, இளம் வயதில் தனக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த ஆசிரியர் மட்டுமே. ஆசிரியர்கள் எனும் அருந்தவம் இல்லாத மனித வாழ்வே இருக்க முடியாது. இந்தத் தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் ஆசிரியர்கள் மிகச் சிறந்த பணியாற்றுகின்றனர். அவர்கள் மாணவர்கள் மனதில் விதைக்கும் விதை, விருட்சமாய் செழித்து வளர்வதில் ஒன்றாக இருப்பது ஒவ்வொரு தேசத்தின் எதிர்காலம்.

சிறந்த ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை ஏற்றிவிடும் ஏணியாகத்தான் அப்போதும் இருந்தனர்; இப்போதும் உள்ளனர்; எப்போதும் இருப்பர். தங்கள் மாணவர்கள் எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் பெருமைப்படுவார்களே தவிர பொறாமைப்படாதவர்கள் - பொறாமைப்படத் தெரியாதவர்கள் ஆசிரியர்கள்தான். பல கோடி ஆசிரியர்கள் இருந்தாலும் தங்கள் மாணவர்களுக்கு பாடத்தைத் தாண்டி வாழ்க்கைக் கல்வியைத் கற்றுத் தரும் ஆசிரியர்களால்தான் இந்த உலகம் உயிர்ப்போடிருக்கிறது.

மாணவர்களின் நலன்களை முன்னிறுத்தி தன்னலம் பாராமல் கற்றுத் தந்து மெüனப் புரட்சியை ஏற்படுத்தி மாணவர்களின் நலனையும் தேசத்தின் நலனையும் கருத்தில் கொண்டு உழைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive