மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளை தீர்மானிக்கும் 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-வது ஊதியக் குழுவை உருவாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தக் குழு நியமன தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையத்தின் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐஎம் (பெங்களூர்) பேராசிரியர் புலக் கோஷ் பகுதிநேர உறுப்பினராகவும், பெட்ரோலியத் துறை செயலாளர் பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் நிதியின் தேவை, வளர்ச்சிச் செலவுகள் மற்றும் நலத்திட்டங்களுக்கு போதுமான நிதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான தேவை, பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் நிதியில்லாத செலவு, மாநில நிதி நிலைமையில் குழுவின் பரிந்துரைகளின் தாக்கம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தற்போதைய ஊதிய அமைப்பு, சலுகைகள் மற்றும் பணி நிலைமைகள் ஆகிய காரணிகளை கருத்தில் கொண்டு 8-வது சம்பளக் குழு அதன் பரிந்துரைகளை வழங்கும்.
8-வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவர் எனத் தெரிகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...