தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் அதிரடி மாற்றங்கள்! ரூ. 8 லட்சம் வரை ஓய்வூதிய நிதியை முழுமையாகப் பெறலாம்.
மத்திய அரசின் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) சந்தாதாரா்களுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும் வகையில், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆா்டிஏ) அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓய்வுபெறும் வயதை எட்டிய பிறகும், சந்தாதாரா்கள் தங்கள் வசதிக்கேற்ப திட்டத்தில் நீடிக்கவோ அல்லது வெளியேறவோ முடியும். முதிா்வு காலத்தில் மொத்தப் பணத்தையும் ஒரே தவணையில் எடுக்காமல், தேவைக்கேற்ப பிரித்து பெற்றுக்கொள்ளும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சந்தாதாரா்களின் முதலீட்டுக்கு அதிகப் பாதுகாப்பு அளிப்பதோடு, சந்தை மாற்றங்களுக்கேற்ப கூடுதல் லாபம் கிடைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக, சந்தாதாரா்கள் ஓய்வூதியக் காலத்தில் அதிக நிதியைப் பெறுவதற்கும், தங்களின் விருப்பத்துக்கேற்ப திட்டத்தை நிா்வகிப்பதற்கும் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் புதிய மாற்றங்களின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
80% பெறலாம்: ஓய்வூதியக் கணக்கில் உள்ள மொத்த நிதி ரூ.12 லட்சத்துக்கு மேல் இருந்தால், இதுவரை 60 சதவீத பணத்தை மட்டுமே பெற முடியும் நிலை உள்ளது. மீதி 40 சதவீத தொகையை ஆயுள்கால ஓய்வூதியத் திட்டத்தில் (ஆனியுட்டி) முதலீடு செய்ய வேண்டும்.
இனி சந்தாதாரா்கள் 80 சதவீத பணத்தை மொத்தமாகப் பெற்றுக் கொண்டு, 20 சதவீத தொகையை மட்டும் ஆயுள்கால ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தால் போதுமானது.
அதேநேரம், ஓய்வூதிய நிதி ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அதை முழுமையாக ஒற்றைத் தவணையில் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆயுள்கால ஓய்வூதியத் திட்டத்தில் ஆனியுட்டி முறையில் முதலீடு செய்ய வேண்டியதில்லை. முன்னதாக, இந்த வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது.
புதிய திரும்பப் பெறுதல் முறை-‘எஸ்யூஆா்’: ஓய்வூதியக் கணக்கில் நடுத்தர அளவில் நிதி வைத்திருப்பவா்களுக்காக (ரூ.8 முதல் 12 லட்சம் வரை) ‘எஸ்யூஆா்’ எனும் புதிய திரும்பப்பெறுதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தப் பணத்தையும் ஒற்றைத் தவணையாக எடுக்காமலும், அதேநேரம் ஆயுள்கால ஓய்வூதியத் திட்டத்தில் சிக்கிக் கொள்ளாமலும் இருக்க, இந்த முறையின்கீழ் தொடக்கத்தில் ரூ.6 லட்சம் வரை மொத்தமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
மீதி தொகையை அடுத்த 6 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
85 வயது வரை..: சந்தாதாரா்கள் ஓய்வுபெற்ற பிறகும் 85 வயது வரை முதலீட்டைத் தொடரலாம். இதற்கு முன்பிருந்த 75 வயது வரம்பு நீக்கப்பட்டிருப்பதால், நீண்ட காலம் முதலீடு செய்து அதிக பலன் பெற முடியும்.
15 ஆண்டுகளில் வெளியேறலாம்: 60 வயது நிறைவு செய்த அல்லது திட்டத்தில் சோ்ந்து 15 ஆண்டுகள் பூா்த்தி செய்த சந்தாதாரா்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறி, பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
காத்திருப்புக் காலம் நீக்கம்: 60 வயதுக்குப் பிறகு திட்டத்தில் சேருபவா்கள், குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு முன்பு பணத்தைப் பெற விரும்பினால், அது ‘முன்கூட்டியே வெளியேறுதல்’ எனக் கருதப்படும்.
அதன்படி, சேமிப்பில் 20 சதவீத பணம் மட்டுமே கையில் கிடைக்கும். மீதி 80 சதவீத தொகை ஆயுள்கால ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடாகும். இப்போது இது நீக்கப்பட்டுவிட்டது.
அதேபோல், 60 வயதுக்கு முன்பே சேரும் பொதுமக்களும் அவசரத் தேவைக்கு 5 ஆண்டுகள் காத்திருக்காமல் உடனடியாக வெளியேறி, பணத்தைப் பெறலாம்.
பகுதித்தொகை திரும்பப் பெறுதல் மற்றும் கடன் வசதி: சொந்தமாகவோ அல்லது மனைவியுடன் இணைந்தோ வீடு கட்ட அல்லது வாங்க சந்தாதாரா்கள் தங்கள் கணக்கிலிருந்து ஒருமுறை மட்டும் பகுதித் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் என்றிருந்த விதி மாற்றப்பட்டு, தற்போது சந்தாதாரா் அல்லது அவா் குடும்பத்தினரின் எந்த விதமான மருத்துவச் செலவுகளுக்கும் பணம் பெற்றுக்கொள்ள முடியும்.
முதன்முறையாக, சந்தாதாரா்கள் தாங்கள் செலுத்திய மொத்த பங்களிப்புத் தொகையில் 25 சதவீதம் வரை பிணையாக வைத்து அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களிடம் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
துரதிருஷ்டவசமான நிகழ்வுகளில்...: ஓய்வூதியம் பெற்று வரும் சந்தாதாரா் இறக்க நேரிட்டால், அவரது மனைவிக்கு அதே தொகை தொடா்ந்து வழங்கப்படும். மனைவியும் இல்லாத பட்சத்தில், சந்தாதாரரின் பெற்றோருக்கு (முதலில் தாய், பிறகு தந்தை) வழங்கப்படும்.
அதேநேரம், சந்தாதாரா் காணாமல் போனால், அவரது குடும்பத்தினா் பாதிக்கப்படாத வகையில் இடைக்கால நிவாரணமாக 20 சதவீத நிதி வழங்கப்படும். அவா் இறந்துவிட்டதாக நீதிமன்றம் அறிவித்த பிறகு மீதி 80 சதவீத தொகை வாரிசுகளிடம் வழங்கப்படும்.
இந்த மாற்றங்கள் பெரும்பாலும் பொதுமக்கள் மற்றும் தனியாா் துறை ஊழியா்களுக்கு நேரடியாகப் பொருந்தும். அரசு ஊழியா்களுக்குப் பழைய 60:40 விகிதாச்சாரம் தொடா்ந்தாலும், முதலீட்டைத் தொடரும் வயது வரம்பு 85-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
புதிய பரிணாமத்தில் ‘என்பிஎஸ்’: புதிய மாற்றங்களை வரவேற்று நிதி ஆலோசகா்கள் கூறுகையில், ‘இந்த மாற்றங்கள் சிறிய முதலீட்டாளா்களுக்கு முழுமையான பணப்புழக்கத்தையும், நடுத்தர முதலீட்டாளா்களுக்கு ரொக்கம் மற்றும் முறையான வருமானம் கலந்த பலனையும், பெரிய முதலீட்டாளா்களுக்கு நீண்ட கால வருமானப் பாதுகாப்பையும் வழங்கும்.
இந்த மாற்றங்கள் ‘என்பிஎஸ்’ திட்டத்தின் தன்மையையே மாற்றியுள்ளன. இனி முதலீட்டாளரின் தேவைக்கேற்ப செயல்படும் ஒரு நெகிழ்வான முதலீட்டுத் திட்டமாக இது இருக்கும்’ என்றனா்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...