அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனை கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும் முதல்கட்டமாக ரூ.6.09 கோடி மதிப்பீட்டில் 15 இயந்திரவியல் ஆய்வகங்கள் நிறுவப்பட்டு உள்ளன.
கற்றல், கற்பித்தல் மற்றும் திட்டமிடல் போன்ற செயல்முறைகளை மேம்படுத்துவதற்கு தகவல் தொழில்நுட்பம் ஒரு முக்கிய ஊக்கியாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும், அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளும் நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளைப் போல, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கும் நோக்கில், முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 654 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.41.85 கோடி மதிப்பீட்டில் 654 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அடையாறு குமார ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில், 654 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்துவைத்தார்.
தொடர்ந்து அப்பள்ளியில் நிறுவப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பார்வையிட்டார். இந்த உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் காணொலி, ஒலி மற்றும் டிஜிட்டல் கருவிகள் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றலை எளிமையாக்கிப் பாடப் புத்தக உள்ளடக்கத்தை விரைவாகவும், ஆர்வமாகவும் கற்றுக்கொள்ள உதவும்.
மேலும் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரவியல் மற்றும் குறியிடல் (Coding) தொடர்பான டிஎன் ஸ்பார்க் (TN SPARK) போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் துணைபுரியும்.
தொடக்க விழாவில், எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி, கூடுதல் இயக்குநர் எஸ்.உமா, பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் பி.வி.பி.முத்துக்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...