NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணிநிரந்தரத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள்


குறைந்த அளவிலான ஊதியத்துடன் பணியாற்றி வரும் தங்களுக்கு மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல ஊதியத்தை நிர்ணயம் செய்து,
பணிப் பாதுகாப்பு வழங்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 3,344 கௌரவ விரிவுரையாளர்கள்.
தமிழகத்தில் கிராமப்புற மாணவ, மாணவிகளின் உயர்கல்வி ஆதாரமாக இருப்பது அரசுக் கல்லூரிகள். அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிப் பிரிவு கல்லூரிகளைக் காட்டிலும் குறைந்தளவில் அரசு நிர்ணயித்த கட்டணம் மற்றும் இதரக் கல்லூரிகளில் இல்லாத படிப்புகள் அரசுக் கல்லூரிகளில் மட்டுமே இருப்பது தான் கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 84 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இக்கல்லூரிகளில் தமிழ், ஆங்கில இலக்கியம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளாதாரம், வரலாறு, கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல், வணிக மேலாண்மை என பல்வேறு படிப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக அந்தந்த கல்லூரிகளில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களில் ஏற்படும் காலியிடங்கள் அல்லது சம்பந்தப்பட்ட துறைப் பேராசிரியர்களின் பணி ஓய்வுக்குப் பிறகு நிரப்பப்படாமல் இருந்த இடங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழங்குவதில் தடையேதும் இல்லாத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அரசுக் கல்லூரிகளில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் நடைமுறையில் இருந்து வருகிறது. இவர்கள் சுழற்சி 1, சுழற்சி 2 (ஷிப்ட் 1,2) என்ற முறையில் கல்லூரிகளில் வகுப்பு எடுத்து வருகின்றனர்.
தொடக்கத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் மாணவ, மாணவிகளுக்கு வகுப்பெடுக்கும் காலத்தை கணக்கிட்டு (1 மணி நேரத்துக்கு என்று கட்டணம் நிர்ணயம்) ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர், மாதம் ரூ.4,000 என்ற தொகுப்பூதியத்தின் கீழ் ஊதியம் வழங்கப்பட்டது.
ரூ.4,000}த்திலிருந்து ரூ. 6,000 ஆக உயர்த்தப்பட்ட ஊதியம், கௌரவ விரிவுரையாளர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ரு.10,000 என்று 2011 ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் விதி எண் 110}ன் கீழ் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பின்படி கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.
பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்புத் தேவை : முதலில் முதுநிலைக் கல்வித் தகுதியாகக் கொண்டு கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் எம்.பில் ஆக கல்வித் தகுதி உயர்த்தப்பட்டு, தற்போது முனைவர் பட்டம், சிலெட் } நெட் தேர்வு முடித்தவர்கள் வரை கௌரவ விரிவுரையாளர்களாக அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர்.
அரசுக் கல்லூரிகளில் நிரந்தரப் பணியிடங்களில் விரிவுரையாளர்கள் முதல் பேராசிரியர்கள் வரையிலான பணியை கௌரவ விரிவுரையாளர்களும் செய்து வருகிறோம். கல்வித் தகுதியிலும் சிறப்பு பெற்றுத்தான் விளங்கி வருகிறோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில், அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் ஏதோ காரணங்களால் அந்த நடவடிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது என்று கவலையுடன் தெரிவிக்கின்றனர் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள்.
ஏற்கெனவே கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வந்தவர்களுக்கு கடந்த 2003} 04 ஆம் ஆண்டில் சிறப்புத் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள். அதேபோல், தற்போதைய அதிமுக ஆட்சியிலும் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்திருந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இதை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்கின்றனர் கௌரவ விரிவுரையாளர்கள்.
12 மாதங்களும் பணி, ஊதியமோ 10 மாதங்களுக்குத்தான்: கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெறும் காலங்களில் மட்டும் எங்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் கல்லூரிக்கு நாங்கள் வந்தாலும் ஊதியம் கிடையாது. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இந்த நிலையை மாற்றிட வேண்டும்.
அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ25,000 (எம்.பில் முடித்தவர்களுக்கு), ரூ.30,000 ( பி,எச்.டி. முடித்தவர்களுக்கு) நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வழிகாட்டுதல்களைத் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் அந்த உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. மேலும், பணிப் பாதுகாப்பும் இல்லாத நிலைதான் நிலவி வருகிறது.
இந்த கோரிக்கையை எல்லாம் அரசு கவனத்துடன்பரிசீலித்து உரிய நடவடிக்கையை செய்யும் என நம்புகிறோம். மாணவ, மாணவிகளுக்குக் கல்வி கற்பிக்கும் எங்களின் பல ஆண்டுகாலக் கோரிக்கை எப்போது நிறைவேறும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்கின்றனர் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive