NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ் வழியில் படித்து சாதித்தது பெருமை: சி.ஏ., மாணவி நெகிழ்ச்சி


         "பள்ளிக் கல்வியை தமிழ் வழியில் படித்து, "சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்" தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,' என, மும்பையில் ஆட்டோ ஓட்டும் தமிழகத்தை சேர்ந்தவரின் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

      விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 53; ஆட்டோ டிரைவர். மும்பையில், மலாட் எஸ்.பி., கான்சால் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள், 45, மகள்கள் மகாலட்சுமி, 27, பிரேமா, 25, மகன் தன்ராஜ், 23. மகாலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்டது.

        கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெரிய கொள்ளியூரில் விவசாய கூலிவேலை செய்து வந்த ஜெயக்குமார், போதிய வருவாய் கிடைக்காததால், தன் மைத்துனர் குப்புசாமி என்பவர் ஆதரவுடன், 1990ம் ஆண்டு, மும்பைக்கு பிழைப்பு தேடி சென்றார். துணி நெசவு செய்யும் ஆலையில் பணிபுரிந்தார். அதிலும் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால், ஆட்டோ ஓட்டுனரானார்.

           அதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு, சொந்தமாக ஆட்டோ வாங்கி, தன் குழந்தைகளை படிக்க வைத்தார். இத்தனை சிரமமான சூழலுக்கு இடையே படித்த, இவரது இரண்டாவது மகள் பிரேமா, "சார்ட்டட் அக்கவுன்டன்ட்" தேர்வில், 800க்கு, 607 மதிப்பெண்கள் எடுத்து, அகில இந்திய அளவில், முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

       இதுகுறித்து, பிரேமா கூறியதாவது: என் வெற்றியை பெற்றோரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இல்லை என்றால், என்னால், இச்சாதனையை பெற்று இருக்க முடியாது. வறுமையான சூழலிலும், எங்களை படிக்க வைக்க வேண்டும், என்று பல தியாகங்களை செய்தனர்.

         ஒன்று முதல், 7ம் வகுப்பு வரை, மலாடு நகராட்சி பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்தேன். ஆங்கில பாடத்தை தவிர்த்து, மற்ற அனைத்து பாடங்களையும், தமிழில் தான் கற்றேன். அதன்பின், மலாடு செகன்டரி பள்ளியில், 8 முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடத்தை தவிர மற்ற பாடங்களை, ஆங்கில மீடியத்தில் படித்தேன்.

          என்.எல்., காலேஜில், பிளஸ் 2 முடித்து, நாகின்தாஸ் கண்டவாலி கல்லூரியில், பி.காம்., முடித்தேன். அதன்பின் மும்பை பல்கலையில் எம்.காம்., பட்டம் பெற்றேன். எனக்கு திருமண ஏற்பாடுகளை செய்த போது, அக்கவுன்டன்ட் படிப்பில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற, என் விருப்பத்தை தந்தையிடம் கூறினேன். அதை மறுக்காமல், அதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.

         என் தம்பி தன்ராஜும், பி.காம்., முடித்து, சி.ஏ., தேர்வை எழுத விரும்பியதால், இருவரும் சேர்ந்தே படித்தோம். மலாட் பகுதியில் வாடகை குடியிருப்பில் உள்ள எங்கள் வீடு சிறியது. அதில் நாங்கள் இருவரும், இரவில் கண் விழித்து படிக்க தேவையான வசதிகளை, என் தாய் ஏற்படுத்தி தந்தார். "டிவி&' இணைப்பை துண்டித்து, படிப்பிற்கு உதவி செய்தனர்.

         எங்களின் முயற்சிக்கு ஆசிரியர்களும் பல உதவிகளை செய்தனர். சி.ஏ., படிப்பில் இந்திய அளவில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் எனக்குள் இருந்தது. இதில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றது, என் பெற்றோரின் தியாகத்திற்கும், என் விடா முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன்.

           தன்ராஜூம் சி.ஏ., படிப்பில் தேர்ச்சியடைந்தது, இரட்டிப்பு மகிழ்ச்சி. மிகுந்த ஏழ்மையான நிலையில், மும்பைக்கு பிழைப்பு தேடி வந்த போது, ஆதரவு அளித்த என் தாய்மாமன்கள் உதவியை மறக்க முடியாது. தமிழ் மீடியத்தில் படித்த நான், சி.ஏ., படிப்பில் சாதனை படைத்ததை பெருமையாக கருதுகிறேன்.

             தாய் மொழியான தமிழும், சொந்த ஊரும் என் அடையாளங்கள் என்பதை மறக்க மாட்டேன். சூழ்நிலை எப்படி இருந்தாலும், சரியான வகையில் முயன்றால் வெற்றி கிடைக்கும் என்பதை அனுபவப் பூர்வமாக தெரிந்து கொண்டேன். நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, விரைவில் என் தந்தைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

           படிக்க ஆர்வம் இருந்தும், பணமின்றி கஷ்டப்படும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் உதவி செய்ய விரும்புகிறேன். சி.ஏ., படிப்பில் சாதிப்பதற்கான முறைகளை, இப்படிப்பை தேர்வு செய்து படிப்பவர்களுக்கு கூறி, வழிகாட்ட தயாராக இருக்கிறேன். இவ்வாறு, சாதனையாளர் பிரேமா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மாணவிக்கு ரூ.10 லட்சம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: அனைவராலும் வெற்றி பெறுவதே கடினம் என கூறும், சார்ட்டட் அக்கவுண்டன்ட் இறுதித் தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று பிரேமா, சாதனை படைத்துள்ளார்.

              சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, நிதித்துறையில் உயரிய கல்வியாக கூறப்படும், சி.ஏ., தேர்வில், முதலிடம் பெற்ற பிரேமாவிற்கு பாராட்டுக்கள். பிரேமாவிற்கு, தமிழக அரசின் சார்பில், 10 லட்சம் ரூபாய், ஊக்கத் தொகை வழங்கப்படும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive