PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST EDUCATIONAL TAMIL NEWS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

தேவைதானா ஆசிரியர் தகுதித் தேர்வு? - முனைவர் மணி.கணேசன்


         மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபால கிருஷ்ண கோகலே 1910-ஆம் ஆண்டிலேயே இலவச கட்டாயக் கல்விக்காகக் கொடுத்த குரல் பல்வேறு படிநிலைகளைக் கடந்து அண்மையில்தான் மத்திய அரசால் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 என ஜம்மு-காஷ்மீர் தவிர நாடு முழுவதும் ஏப்ரல்1, 2010 முதல் நடைமுறைப்படுத்தப் பெற்றுள்ளது. 
 
           இச்சட்டம் பள்ளி வயது மாணவர் சேர்க்கையில் கட்டுப்பாடின்மை மற்றும் உறுதி செய்தல், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் செய்யவேண்டிய பணிகள், ஆசிரியரின் கல்வி உள்ளிட்ட தகுதிகளை முறைப்படுத்துதல் போன்றவற்றை விளக்கி வரையறை செய்கின்றது.
 
           நாட்டை கல்வியின் வாயிலாக வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல இவ் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஒரு மைல்கல்லாக விளங்கும் என்பது உறுதியெனலாம். ஏனெனில், கல்வியில் மிகவும் பின்தங்கிய பீகார், உத்திர பிரதேசம், இராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு இதுவோர் வரப்பிரசாதமாகும். இம்மாநிலங்களில் வாழும் மக்களிடையே அறியாமை, மூடத்தனம், சாதிய ஒடுக்குமுறைகள், கல்வி குறித்த போதிய அக்கறை மற்றும் விழிப்புணர்வின்மை, உரிய கல்வித்தகுதி மற்றும் பயிற்சி பெறாத ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கற்பித்தல் முதலான காரணிகளால் நாட்டின் தேசிய எழுத்தறிவு விழுக்காடு பெருமளவு வீழ்ச்சியுற்றதற்கு அடிப்படைகளாகும்.
 
          குறிப்பாக, பல மாநிலங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் போதிய கல்வித் தகுதியின்றி, தினக்கூலிகளாகவும் மாணவரிடம் கற்றல்-கற்பித்தலைத் திறம்பட கையாளத்தக்க குழந்தைக் கல்வி உளவியல் பற்றிய அறிவாற்றல் நிரம்பப் பெறாதவர்களாகவும் காணப்படுகின்றனர். அவர்களது பணியினை முறைப்படுத்திட, முறையான ஊதியம் வழங்கிட ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
 
         தமிழ்நாட்டைப் பொருத்தவரை இடைநிலை, பட்டதாரி, தலைமையாசிரியர்களுக்கு அவரவர் நிலைக்கேற்ப கல்வித்தகுதிகள் முறையே அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அவ்வப்போது ஆசிரியர் நியமனங்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் காலிப்பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன.
 
         அதுபோல், தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் 34, 180, நடுநிலைப் பள்ளிகள் 9, 938, உயர்நிலைப் பள்ளிகள் 4, 574, மேனிலைப் பள்ளிகள் 5, 030 என மொத்தம் 53, 722 அரசுப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் தொன்றுதொட்டு தகுதிவாய்ந்த ஆசிரியர் பெருமக்களே பணிபுரிந்து வருகின்றனர்.
 
         இவர்களுக்கு இளங்கலை, முதுகலைப் பட்டம் வழங்க பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்குழு அனுமதியளித்த அரசு, தனியார் கலை மற்றும் கல்வியியல் கல்லூரிகளும் ஆசிரியர் பட்டய பயிற்சியினைச் செவ்வனே தர தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தாரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்வேறு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும் தேவைக்கு அதிகமாகவே இங்குள்ளன. மேனிலைக் கல்வி, பட்டப்படிப்பு முடித்த சிறப்புமிக்க மாணவர்களை நல்ல தகுதி வாய்ந்த ஆசிரியர்களாக உருவாக்குவதைத் தம் தலையாயப் பணியாக இவை கொண்டுள்ளன.
 
         இதுதவிர, இன்று பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், அறிஞர்கள், தலைவர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் முதலானோரை திறம்பட உருவாக்கிய பெருமை வெறும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆதாரப் பயிற்சி பெற்று ஆசிரியப் பணியாற்றிவர்களையே சாரும். நவீன உலக வளர்ச்சி, கால மாற்றத்திற்கேற்ப, இன்று ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கான இடைநிலையாசிரியர் பணிக்கு மேனிலைக் கல்வி தேர்ச்சி, ஆசிரியர் பட்டயப் பயிற்சி ஆகியன அடிப்படை ஆசிரியர் கல்வித் தகுதிகளாக உள்ளன.
 
           அதுபோல், ஆறு முதல் பத்து வகுப்புகள் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், பதினொன்று மற்றும் பன்னிரண்டு வகுப்புப் பாட முதுகலையாசிரியர்களுக்கு முறையே இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளோடு பதின்பருவ மாணவர் உளவியலை உள்ளடக்கிய இளங்கலைக் கல்வியியல் பட்டப்படிப்பை முதன்மைத் தகுதிகளாகக் கொண்டுள்ளனர். ஆதலால்தான், ஆசிரியர் கல்வியினைக் கல்வியாளர்கள் மருத்துவம், பொறியியல் போன்று ஒரு தொழிற்கல்விப் படிப்பு(Pசழகநளளழையெட ஊழரசளந) என்கின்றனர்.
 
         இத்தகு சூழ்நிலையில், ஆசிரியர் பணிக்குத் தம்மை அரசு வகுத்திருக்கும் அடிப்படைக் கல்வி மற்றும் பயிற்சியில் முழுத்தகுதியும் திறனும் ஏற்படுத்திக் கொண்ட ஒருவருக்கு மீண்டும் ஒரு தகுதித் தேர்வு என்பது ஏற்புடையதாக அமையவில்லை. அதனால்தான், அண்மையில் மத்திய, மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை அனைத்து ஆசிரியர் சங்கங்களும் சீரிய கல்விச் சிந்தனையாளர்களும் எதிர்த்து வருகின்றனர். இந்தியக் குடிமைப்பணிகள், உயர் அலுவலக, தொழில்நுட்பப் பணிகள், மருத்துவம், பொறியியல் சார்ந்த தொழிற்கல்விப் பணிகள் போன்றவற்றில் இதே நடைமுறையினைப் பின்பற்ற இயலுமா எனும் வினா இயற்கையாக எழுகின்றது.
 
          தமிழில் ஒரு பழமொழியுண்டு. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்கோவில் ஆண்டி. அதுமாதிரிதான் ஆசிரியர் பணி ஆகிவிட்டது. இதில் மேலும் வருந்தத்தக்க சேதி என்னவென்றால் ஒருசில கல்வியாளர்களும் ஊடகங்களும் கல்வியின்மேல் திடீர் பற்றுக்கொண்டவர்களும் ஆசிரியர்களுக்குக் கட்டாயம் இத்தகுதித் தேர்வு தேவையென்று முழங்குவதுதான். அதனைச் சரியென்றே வைத்துக்கொண்டாலும் மேற்சுட்டப்பெற்ற கல்வித் தகுதிகளும் உளவியல் சார்ந்த பயிற்சி முறைகளும் வீண் என்றல்லவா ஆகிவிடும்.
 
          ஒரு நபர் ஒரு பதவிக்குத் தம்மை எத்தனைத் தடவைதான் தகுதிப்படுத்திக் கொள்வது?இதற்கு அறிவார்ந்த இந்தச் சமுதாயம்தான் நல்ல பதில் கூற வேண்டும். எல்லாவகை மனித சமூகத்திலும் அவர்கள் சார்ந்த துறைகளிலும் உள்ள பத்து விழுக்காட்டினர் ஆற்றும்பணியில் அவ்வப்போது தகுதிக்குன்றிக் காணப்படுதல் உலக இயல்பு. அதேபோல், ஒவ்வொரு துறையிலும் அதே அளவு விழுக்காட்டினர் மீத்திறன் மிக்கவர்களாகச் சமுதாய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உழைப்போரும் இந்நாட்டில் இருக்கவே செய்கின்றனர். மீதமுள்ளோருக்கு அவ்வப்போது உரிய, உகந்த புத்துணர்வு மற்றும் வலுவூட்டல் பயிற்சியளிப்பதன் மூலமாகத் திறன் குன்றாதவர்களாகக் காக்க முடியும். இதுவே நடப்பு உண்மையாகும். இதைவிடுத்து, ஒரேயொரு தகுதித் தேர்வின் வாயிலாக முழுத்தகுதியையும் மின்னல் வேகத்தில் வரவழைத்திட முடியும் என்று நம்புதல் முயற்கொம்பே எனலாம்.
 
          ஆசிரியப் பணியென்பது பன்முகத் திறன் சார்ந்தது. வேறெந்த பணிக்கும் இத்தகு தனித்திறன், தனித்துவம் தேவைப்படுவதில்லை. பரந்த அறிவு, கற்பித்தல் நுணுக்கம், உளவியல் திறன், சமயோசிதப் புத்தி, பிரச்சினைகளை உடன் தீர்க்கும் சாதுர்யம், ஓவியம், இசை, பாட்டு, நடிப்பு, நடனம், விளையாட்டு ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி, சிறந்த மொழியாளுமை, நல்ல உச்சரிப்பு, படைப்பாற்றல் சிந்தனை, தாய்மைப் பண்பு, தேர்ந்த வழிகாட்டும் குணம், ஆற்றொழுக்கான பேச்சுத்திறமை, அழகிய, தெளிவான கையெழுத்து, மாணவர் உடல், உளச் சிக்கல்களை உடன் நிவர்த்திச் செய்யும் மருத்துவம் சார்ந்த தயாள குணம் முதலான பண்புகள் ஒரு தொடக்கக் கல்வி ஆசிரியருக்கே தேவைப்படும் பட்சத்தில் ஏனையோர் நிலையினைச் சொல்லத் தேவையில்லை. இவையனைத்தும் ஒரே தேர்வில் கிட்டிவிடுமா என்ன?
 
             இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தான் சர்வரோக நிவாரணியென்றால் அத்தகையோர் இதற்குமுன் பெற்ற ஆசிரியர் பணிநியமனத் தகுதிக்கான பட்டய, பட்டப்படிப்புகளின் நிலை கேள்விக்குறியதாகி விடும். வேண்டுமானால் இப்படிப்புகளை அளிக்கும் கல்வி நிறுவனங்கள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றை இழுத்து மூடிவிட்டு முறையே மேனிலைக்கல்வித் தேர்ச்சி, இளங்கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கல்லூரி ஆசிரியர்களுக்குரிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு மாதிரி இவ்வாசிரியர் தகுதித் தேர்வினையும் நடத்த முயல்வதே சாலச்சிறந்தது.
இதன் மூலமாகப் பல்வேறு கால, பண விரயங்களை ஏழை, எளிய, அடித்தட்டு, நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த முதல்தலைமுறை பட்டதாரி மாணவர்கள் தவிர்த்திட வழியேற்படும். அதன்பின் அரசு அலுவலர்களுக்கு அடிப்படை நிர்வாகப் பயிற்சி வழங்குவதுபோல், பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்குக் குறுகிய கால அளவில் பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வி உளவியலில் நல்ல பயிற்சி தந்து திறன்மேம்பாடு அடையச் செய்யலாம்.
 
             இங்கு இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. நடந்து முடிந்த இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றோரின் மிகமிகக் குறைந்த எண்ணிக்கை பெருமளவில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், அதனைப் பன்முக நோக்கில் ஆய்ந்தறியாமல் உணர்ச்சி மேலோங்கக் கீழ்த்தரமாக விமர்சிப்பதும் விவாதிப்பதும் மிகுந்த மனவேதனையளிக்கக் கூடிய சேதியாகும். ஏனெனில், தேர்வு நடைமுறைகளில் முறைபடுத்தப்பட வேண்டியவை நிரம்ப உள்ளன.
 
           முதலாவதாக, பாடத்திட்டப் பகுப்புமுறையானது அடிப்படை, முதன்மைப் பாடம் சார்ந்தவர்களுக்கு ஏற்புடையதாகவோ, பொருத்தப்பாடுடையதாகவோ அமைந்திடவில்லை. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் போதிய நாட்டமும் பயிற்சியும் இல்லாதப் பட்டதாரிகளுக்கு அத்தகைய பாடங்களை வலிந்து திணிப்பதே தேர்ச்சி விழுக்காடு உயராததற்கு மூலகாரணமாகும். இத்தகையோருக்கு அவர்கள்தம் பட்டப்படிப்பில் பயின்ற முதன்மைப் பாடத்தில் நடைமுறையில் உள்ளவற்றைக் காட்டிலும் மேலும் கூடுதலான வினாக்கள் கேட்கப்படுவதும் சேர்க்கப்படுவதும் இன்றியமையாதது. பல்துறை சார்ந்த அறிவென்பது பெரும்பாலோனோர்க்குக் கைவராத கலையாகும். தொடர் பயிற்சியும் விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படும். அதற்கு இத்தேர்வால் உதவிச் செய்யவியலாது.
அடுத்ததாக, எந்தவொரு தேர்விற்கும் முன்மாதிரி வழிகாட்டி நூல்கள், மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் பாட நூல்கள் ஆகியவற்றை வெளிச் சந்தைகளில் தாராளமாகக் கிடைக்கத் தக்க வகையில் அரசு செய்திடுதல் நல்லது. மேலும், குடிமைப்பணி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்விற்கு அரசால் அளிக்கப்படும் இலவசப் பயிற்சியினை ஆசிரியர் தகுதித் தேர்விற்கும் நீட்டிக்கப்படுதல் நற்பலனையளிக்கும். பரிச்சயமில்லாதவரை நாம் ஒன்றும் தகுதிப்படுத்திடவில்லை. முன்னரே முழுத்தகுதியை எட்டிவிட்ட ஒரு நபரைத்தான் நாம் மீளத் தகுதிப் பெற வலுவூட்ட முனைகின்றோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
          தவிர, ஊக்க மதிப்பெண்களாக இடைநிலையாசிரியர்களுக்கு மேனிலைக் கல்வித் தேர்ச்சிக்கு 15, ஆசிரியர் பட்டயக்கல்விக்கு 25, ஆசிரியர் தகுதித் தேர்விற்கு 60 என்றும், பட்டதாரியாசிரியர்களுக்கு மேனிலைக் கல்வித் தேர்ச்சிக்கு 10, இளங்கலைப் பட்டத்திற்கு 15, இளங்கல்வியியல் பட்டத்திற்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்விற்கு 60 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றுள் தகுதித் தேர்வு உட்பட அனைத்திற்கும் ஏனைய தேர்வுகளில் பின்பற்றப்படும் முன்னுரிமைகள், சலுகைகள் போன்றன பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் அவர்தம் வாரிசுகள், கணவனால் கைவிடப்பட்டோர், கைம்பெண்கள், அனாதைகள் ஆகியோருக்குக் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அதுவே சமூக நீதியுமாகும். இதுகுறித்து விரைந்து நடவடிக்கையெடுத்தல் என்பது அவசியத் தேவை எனலாம்.
 
          அதுபோல், தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் மிகக் கடினமானதாகவும் கணிதத்தை முழுமையாகச் செய்துமுடித்துப் பிறவற்றை எழுதிமுடிக்க மிகமிக விரைவாக எழுதியபோதிலும் உரிய நேரத்திற்குள் தேர்வைத் திறம்படச் செய்திட இயலவில்லை என்றே தேர்வெழுதிய பலரும் வருத்தத்தோடு தெரிவிப்பதை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், கணிதத்தை முதன்மைப் பாடமாகவும் அதிக மதிப்பெண் எடுத்துப் படித்தவர்களுக்கே சிரமமென்றால் மற்றவர்களின் நிலையினை எடுத்துக்கூற வேண்டிய அவசியமில்லை. பத்தாம் வகுப்பு அளவில் கற்ற கணிதம் வெகுகாலம் கடந்து இப்போது அவர்களுக்கு உதவும் என்று நம்புவது சரியல்ல. மொழிப்பாடங்களும் அவற்றின் இலக்கணங்களும் அவ்வாறே. பல சமயங்களில், இவை குருட்டு அதிர்ஷ்டத்திற்கே வழிவகுக்கும்.
 
           இவை போன்ற எண்ணற்ற சிக்கல்கள் காரணமாக அடிப்படையில் தகுதிப் பெற்று விளங்கும் ஒருவருக்கு மீளவும் ஒரு தகுதித் தேர்வு என்பது கூடுதல் மனச்சுமையையும் சோர்வையும் அவநம்பிக்கையையும் மனஅமைதியையும் இழந்து மாணவர்கள் தவிக்கும் துர்பாக்கிய சூழலை இத்தேர்வுமுறை உண்டாக்கியுள்ளது. முறையான ஆசிரியர் தகுதியினை அடைந்தவர்க்கு தேவைதானா தகுதித் தேர்வு என்பதை அரசு தாயுள்ளத்தோடு ஆழ்ந்து சிந்திக்க முயல வேண்டும். அதைவிடுத்து, சட்டப்படி செயல்படுத்தப்படுகிறது என்று தட்டிக்கழிக்க அரசு இயந்திரம் முயற்சிப்பது நல்ல நடைமுறையாகாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பலதடவை பல்வேறு சூழல், வளர்ச்சி, தேவை காரணமாக மனிதாபிமானத்தோடு திருத்தப்பட்டிருக்கின்றது. இக்கல்வி உரிமைச் சட்டத்திலும் அதுபோன்ற ஒரு திருத்தத்தை வருங்கால ஓர் ஆசிரியர் சமுதாயம் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்நோக்குவதில் நியாயம் இருக்கவே செய்கின்றது. ஏனெனில், நியாயம் எந்நாளும் தோற்பதில்லை. 
- முனைவர் மணி.கணேசன்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog Archive

Group