NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கற்பது கற்கண்டா? கசப்பா?byஉதயசங்கர்


                 கற்றலின் இனிமை என்ற செயல்முறைக்கல்விமுறைக்கு முன்னோடி கிஜூபாய் பகேக. இன்றும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இந்த முறை உவப்பானதாகத் தெரியவில்லை. 
           கையில் பிரம்பு இல்லாமல் குழந்தைகளுடன் சமமாக உட்கார்ந்து விளையாட்டாகக் கல்வி போதிக்கும் முறை அவர்களுக்கு அச்சலாத்தியாக இருக்கிறது. ஆசிரியர் என்றால் ஒரு பயம் வேண்டாமா? என்ற எண்ணம் அவர்கள் மனதில் வேரோடியிருக்கிறது. குழந்தைகளைப் பயமுறுத்தியே தாங்கள் அவர்களை விட உயர்ந்தவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள், என்ற அதிகாரத்தை நிலைநிறுத்த நினைக்கிறார்கள். அன்பே உருவான குழந்தைகள் தாய், தந்தைக்குப்பிறகு ஆசிரியர்களிடமே அதிக அன்பு செலுத்துகிறார்கள். பரிசுத்தமான, எதிர்பார்ப்பில்லாத அந்த அன்பை ஆசிரியர்கள் தங்களுடைய கடுமையான அடக்குமுறையினால் அலட்சியம் செய்கிறார்கள்.
 
           குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குப்பதில் தாழ்வுமனப்பான்மையை விதைக்கின்றனர். இதையெல்லாம் மாற்றவேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் கிஜூபாய் பகேக. 1885-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி குஜராத்தில் பிறந்த கிஜூபாய் பகேக முதலில் ஒரு வழக்கறிஞராகத் தொழில் செய்தார். பின்னர் வழக்கறிஞர் தொழிலைத் துறந்து தொண்டுள்ளம் நிறைந்த ஆசியராகப் பணியாற்றினார். 
 
          குழந்தைகளுக்குக் கல்விகற்கும் முறைமை குறித்து இந்த அளவுக்கு ஆழமாகச் சிந்தித்துச் செயல்பட்டவர் இந்தியாவிலேயே கிஜூபாய் பகேக ஒருவர் தான்.கல்விமுறைமை குறித்து அவருடைய புரட்சிகரமான அணுகுமுறை காரணமாக குழந்தைகளின் காந்தி என்று அன்பாக அழைக்கப்பட்டவர். தனியாகவும் மற்ற கல்வியாளர்களுடன் சேர்ந்தும் இருநூறுக்கும் மேற்பட்ட கல்வி நூல்களை எழுதியுள்ளார். 1939-ஆம் ஆண்டு தனது ஐம்பத்திநாலாவது வயதில் இயற்கை எய்தினார் கிஜூபாய் பகேக. அவருடைய “ பகல் கனவு” என்ற நூல் எல்லோரும் படிக்கவேண்டிய புத்தகம்.

           பகல் கனவு ஒரு கதை தான். ஆனால் அந்தக் கதையின் வழியே கிஜூபாய் தன் செயல்வழிக்கல்வி முறையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ஆம். லட்சுமிசங்கர் என்ற ஆசிரியர் கல்வி அதிகாரியிடம் அநுமதி வாங்கி ஒரு பள்ளிக்கூடத்தின் ஒரு வகுப்பை தன்னுடைய பரிசோதனை முயற்சிக்காக எடுத்துக் கொள்கிறார். அந்தப்பள்ளிக்கூடத்தில் பிரம்பின் ஆட்சியே நடந்து கொண்டிருக்கிறது. அவர் எடுத்துக் கொண்டிருந்த வகுப்பில் இருந்த மாணவர்கள் முதல் நாள் அவரை ஏமாற்றி விடுகிறார்கள். அந்தக் குழந்தைகளை வசியப்படுத்தும் கலையை மறுநாள் கண்டுபிடித்து விடுகிறார் ஆசிரியர் லட்சுமிசங்கர். கதை பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா? குழந்தைகள் அவருடைய கதை சொல்லும் கலையில் மயங்கிவிடுகிறார்கள். அதிலிருந்து துவங்குகிறது அவருடைய பரிசோதனை முயற்சி. வெறும் பாடப்புத்தகங்களை மட்டுமே மனனம் செய்து கொண்டிருந்த குழந்தைகள் விளையாட்டாய் எழுத்துகளைக் கற்றுக் கொள்கிறார்கள். விளையாட்டாய் வாக்கியங்களை அமைப்பதற்குக் கற்றுக் கொள்கிறார்கள். கதைப்புத்தகங்களை வாசிக்கிறார்கள். தாங்கள் சுத்தமாக இருப்பதற்குக் கற்றுக்கொள்கிறார்கள்.பாடல்கள் பாடுவதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். படம் வரைவதற்குக் கற்றுக் கொள்கிறார்கள். நாடகம் போடுவதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். மரம் ஏறக்கற்றுக்கொள்கிறார்கள். கவிதையையும் கற்றுக்கொள்கிறார்கள். தம்மையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்யக்கொள்கிறார்கள். பொம்மைகள் செய்யக் கற்றுக் கொள்கிறார்கள்.கவிதை எழுதக் கற்றுக்கொள்கிறார்கள். எல்லாவற்றையும் விளையாட்டாகவே கற்றுக் கொள்கிறார்கள்.

               இத்துடன் மொழிப்பயிற்சி, இலக்கணம், வரலாறு, பூகோளம், கணிதம், என்று எல்லாப்பாடங்களையும் கற்றுக் கொள்கிறார்கள். வழக்கமான மனனக்கல்வி முறையில் அல்லாமல் குழந்தைகளே மனம் ஒன்றி ஈடுபாட்டுடன் விளையாட்டாய் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். ரேங்க் இல்லை. கெட்டிக்காரன் என்றோ மோசமானவன் என்றோ யாரும் இல்லை. எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள். எனவே போட்டி, பொறாமை, இல்லை. தேர்வில் வகுப்பே பாஸாகிறது. ஒரு இனிய கனவைப் போல இந்தக் கதை விரிந்து செல்கிறது. எத்தனை முறை படித்தாலும் ஆர்வம் குன்றாத இந்தப்புத்தகம் குழந்தைகளின் கல்விமுறை குறித்த நம்முடைய எண்ணங்களை அப்படியே புரட்டிப் போடுகிறது. வாசித்து முடிக்கும்போது இப்படி ஒரு பள்ளி, இப்படி ஒரு வகுப்பு, இப்படி ஒரு ஆசிரியர் நமக்குக் கிடைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வரும். சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் கிஜூபாய் கண்ட கனவு இன்னும் பகல் கனவாகவே இருக்கிறது.
 
           மேலோட்டமான சிறு சீர்திருத்தங்களுக்கே பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. அதுவும் கல்வியை அரசாங்கம் கைகழுவ முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கல்வியைக் கொள்ளை லாபம் அடிக்கும் உற்பத்திசாதனமாக தனியார் பள்ளிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கிஜூபாயின் பகல் கனவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. எல்லோரும் வாசித்து நமது கல்விமுறை குறித்து ஆழ்ந்த பரிசீலனை செய்யவேண்டும். அதற்கான திசைவழியில் எல்லோரும் நடந்து செல்லவேண்டும். அப்போது தான் எதிர்காலக்குழந்தைகளாவது நம்மைச் சபிக்காமலிருப்பார்கள்
நன்றி-இளைஞர் முழக்கம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive