NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'ஆவரேஜ்' உற்பத்தி மையங்களாகும் அரசுப் பள்ளிகள்!

 
         ஆசிரியர்கள் கலந்தாலோசனைக் கூட்டம். பத்தாம் வகுப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை எப்படி முன்னேற்றுவது என்பதைப்பற்றிய கூட்டம் அது. பாடவாரியாக ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கிறார் தலைமையாசிரியர் .
 
           தமிழ் ஆசிரியர் தன்னுடைய அணுகுமுறையைக் கூற, "அதெல்லாம் சரிவராது, நான் சொல்வதைக் கேளுங்க.. இப்படி பண்ணுங்க..." என்று அவர் சில வழிமுறைகளை கூறுகிறார்.

          அடுத்து ஆங்கில ஆசிரியரின் முறை அவர் தன் வழிமுறையாக எந்தெந்த கேள்விகளை மிகவும் பின்தங்கிய மாணவர்களால் படிக்க முடியுமோ அதை மட்டுமே அவர்களுக்கு தான் சிறப்பு பயிற்சியளிப்பதாக கூற, அவற்றை கேட்டு விட்டு இதெல்லாம் எப்படி தமிழ் மீடியம் பயிலும் மாணவர்களுக்கு ஒத்துவரும் என்று அவரே சிலவற்றை கூறுகிறார்.
அடுத்து கணித ஆசிரியை தன் பங்குக்கு தான் தன் வகுப்பை மூன்றாக, மிகவும் பின்தங்கிய மாணவர்கள்,பின்தங்கிய மாணவர்கள், நன்கு படிக்கும் மாணவர்கள் என்று பிரித்து அவரவர்க்கு தகுந்த வகையில் கணக்குகளைக்கொடுத்து போடச் சொல்வதாக கூற, "அதெப்படி வகுப்பை மூன்றாகப் பிரிப்பது.. இரண்டாக மட்டுமே பிரிக்க வேண்டும்" என்று அவரை இடைமறிக்கிறார் தலைமை ஆசிரியர்.
"அப்படி பிரித்தால் தான் உங்களுக்கு ரிசல்ட் வரும்" என்று அவர் கூற அப்படி பிரித்து கவனிக்காமல் விட்டதால் 80 மதிப்பெண் வாங்கிய மாணவன் 40 மதிப்பெண் பெற்றிருக்கிறார். இது எனக்கு கவலையாக இருக்கிறது என்று ஆசிரியை வருத்தப்பட, "அதை பற்றியெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க.. நமக்கு எல்லோரும் பாஸ் ஆனால் போதும்.. ஏனென்றால் CEO கேட்பது அதை தான்" என்று முடித்துவிட்டு அடுத்த ஆசிரியரிடம் பார்வையை செலுத்தினார்.
தலைமை ஆசிரியர் ஒரு மனநிலையில் வந்திருக்கிறார் அவர் நாம் சொல்லும் எதையும் கேட்கப்போவதில்லை எதற்காக வீணே சொல்லிக்கொண்டிருப்பது என்று மற்றவர்கள் அமைதி காக்க, 'ஆலோசனைக் கூட்டம்' என்ற பெயரில் அனைத்து ஆலோசனைகளையும் தானே வழங்கிவிட்டு கூட்டத்தை முடிக்கிறார் தலைமை ஆசிரியர்!
இப்படித்தான் நடக்கின்றன பெரும்பாலான ஆசிரியர் கூட்டங்கள்! இப்படி எதையும் செய்யவோ சொல்லவோ அனுமதிக்காமல் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு, மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறவில்லை, மாநில சராசரியை எட்டிப்பிடிக்கவில்லை என்று குறை கூறுவதால் என்ன பயன்?
அப்படியெனில் இதற்கெல்லாம் தலைமையாசிரியர்தான் காரணமா எனில், தலைமை ஆசிரியரை நாம் இங்கு குறை கூற முடியாது. ஏனெனில், அவர் வெறும் அம்பு. அதை எய்தவர் சி.இ.ஓ. அவரையாவது நாம் குறை கூற முடியுமா எனில் அதுவும் முடியாது. அவரும் கல்வி இயக்குனரிடம் இருந்து, "உன் மாவட்டம் மட்டும் ஏன் கடைசியாக இருக்கிறது? அடுத்த முறை ஐந்து இடங்களாவது முன்னேறியிருக்கவேண்டும்" என்று தன் மீது வீசப்பட்ட சொல் அம்பை பிடுங்கி தனக்குக் கீழ் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மீது வீசியவர் அவ்வளவே. அவர் வீசியதை தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது வீச, அவர்கள் மாணவர்களை நோக, இப்படித்தான் அம்பு வீச்சு தொடர்கதையாய் நீள்கிறது.
'அப்படியெனில் இயக்குனரையாவது நொந்துக்கொள்ளலாமா அல்லது கல்விச் செயலரையும் கல்வி அமைச்சரையும் நொந்துகொள்ளலாமா அல்லது நாம் குற்றச்சாட்டை முதல்வரை நோக்கி நேரடியாக வீசிவிடலாமா?' என்று நாம் யோசிக்கும்போது நம் விரலை வேறு திசையை நோக்கி வீசுவதை விட நம்மை நோக்கி காட்டிக்கொள்வதே சாலச் சிறந்தது. ஆம். இங்கு அனைவரும் ஒன்றை கவனிக்க மறந்து போகின்றோம்.
முதலில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. அது உளவியல் வல்லுனர்கள் அடிக்கடி வலியுறுத்தும் வார்த்தைகளான, 'தனியாள் வேற்றுமை'. ஆனால் இதைப்பற்றி யாரேனும் கவலை கொள்கின்றனரா எனில், நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டும். அப்படி கவலைகொள்ளும் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் யாரும் அனைத்து மாணவர்களும் 40 மதிப்பெண் வாங்கி விட வேண்டும் என்றோ, தனியார் பள்ளி முதல்வர்கள் அனைத்து மாணவர்களும் குறைந்த பட்சம் இரண்டு 100 மதிப்பெண்களாவது வாங்கிவிட வேண்டும் என்றோ கூற மாட்டார்கள் .
ஒவ்வொரு வகுப்பிலும் பல வகையான நுண்ணறிவுத் திறன் கொண்ட மாணவர்கள் இருப்பர். அவர்களில் சிலர் அறிவியலில் ஆர்வம் உள்ளவர்களாகவும் சிலர் கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பர். மற்றும் சிலர் நுண்கலைகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர். சமூக அறிவியலில் 80 மதிப்பெண் பெரும் மாணவன் தமிழில் வெறும் 35 மதிப்பெண் பெற்று பாஸ் ஆகி இருக்கிறான் எனில், அவனுக்கு வரலாற்று துறையில் ஆர்வம் அதிகமாக இருப்பதை உணர்ந்து அவனை அந்த வழியில் தொடந்து ஊக்கப்படுத்த வேண்டும். இதை தான் உளவியல் அறிஞர்கள் APTITUDE, ATTITUDE என்கின்றனர்.
இந்தியாவின் மிகச் சிறந்த கல்வியாளரும் கவிஞருமான தாகூர், தன் பள்ளிப் படிப்பைப் பற்றி கூறும்போது, தான் பள்ளியில் இருக்கும்போது கூண்டுப் பறவையாய் உணர்ந்ததாக கூறுகிறார். ஆசிரியர்களால் ஒன்றுக்கும் உதவாதவர் என்று எண்ணப்பட்டதால், பள்ளிப்படிப்பை இடையில் விடுத்த அவர்தான் தன் நாற்பதாவது வயதில் உலகம் போற்றும் சாந்திநிகேதன் என்ற பள்ளியை நிறுவி, அதை விஸ்வபாரதி எனும் பல்கலைக்கழகமாக உருவாக்கினார் .
தனக்குப் பிடிக்காத பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு தன் ஆழ் மனம் கூறிய பாதையை தேர்ந்தெடுக்க தாகூரால் முடிந்தது. காரணம், அவருடைய வீட்டு சூழ்நிலை அதற்கேற்றவாறு இருந்தது. அவருடைய தந்தை கல்வி என்பதன் முழுப்பொருளை உணர்ந்திருந்தார். ஆனால் இப்போதைய பெற்றோர்களிடம் பிள்ளைகளின் ஆர்வத்துக்கும் உள் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் போக்கு குறைந்து போய்விட்டது. அதனால் தான் அரசுப் பள்ளிகள் வெறும் ஆவரேஜ்பொருள்களை உற்பத்தி செய்யும் இடமாக மாறிக்கொண்டிருக்க, இதற்கு நேரெதிராக தனியார்ப் பள்ளிகளும், கல்லூரிகளும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிய தங்கள் மாணவர்களை தயாரித்துக்கொண்டிருக்கின்றன.
ஆனால், நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி ஒரே மாதிரியான ஆவரேஜ் ஸ்டூடன்ட்ஸை அரசுப் பள்ளிகள் உருவாக்கிக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் வருங்கால சமுதாயத்திற்கு நல்லதல்ல. சமுதாயக் கட்டமைப்பு என்பது பல்வேறு தொழில்நிலைகளைச் சார்ந்தது. அதை நிலைநிறுத்த வெவ்வேறு ஆட்கள் வெவ்வேறு வித பணிகளை மேற்கொள்வது அவசியம். ஆனால் அரசுப் பள்ளிகள் செய்துகொண்டிருக்கும் இந்த ஆவரேஜ் உற்பத்தி நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதோடு, தனிமனிதனின் உளவியலையும் கடுமையாக பாதிக்கிறது. சமூக அமைப்பைப் பற்றிய விரிவான பார்வை மாணவர்கள் முன் வைக்கப்படுவதில்லை. இந்நிலை நீடித்தால் என்ன ஆகும் பெற்றோர்கள் அவசியம் யோசிக்கவேண்டும்!




3 Comments:

  1. அனைத்து ஆசிரியர்களும் பெற்றோரும் படித்துணர வேண்டிய நல்ல பதிவு.

    ReplyDelete
  2. It is a open statement of Today education system. Nobody is bothered about the attitude and aptitude of a student. The govt. bothered about passing percentage. The trs are compled to produce average mechine to the society. Even talented trs are become lazy and become a agent of govt. to produce so called result. The trs are left to scarifies their innovative idea to produce best students

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive