NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொறியியல் கல்லூரிகளில் 2500 பேராசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: ஏஐசிடிஇ சலுகை எதிரொலி

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அளித்துள்ள சலுகை காரணமாக, குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 பேராசிரியர்கள் வேலை இழக்க வாய்ப்பு உள்ளதாக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஏஐசிடிஇ-யின் இந்தச் சலுகை, பொறியியல் கல்வியின் தரத்தை மேலும் குறைக்கவே வழிவகுக்கும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நாடு முழுவதும் 3 ஆயிரத்து 224 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 927 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை 523 பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 78 ஆயிரத்து 845 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தக் கல்லூரிகளை ஏஐசிடிஇ கட்டுப்படுத்தி வருகிறது. இந்தக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெற்ற பின்னரே, மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். இதற்கென ஒவ்வொரு ஆண்டும், அனுமதி வழிகாட்டுதலை ஏஐசிடிஇ வெளியிடும்.
அதுபோல, 2018-19 கல்வியாண்டுக்கான அனுமதி நடைமுறைகளை ஏஐசிடிஇ இப்போது தொடங்கியுள்ளது. இதற்காக அண்மையில், அனுமதி வழிகாட்டுதலை வெளியிட்டது. அதில், கல்லூரிகளின் கோரிக்கைகளை ஏற்று ஆசிரியர்-மாணவர் விகிதத்தை 1:20 ஆக நிர்ணயித்து, ஏஐசிடிஇ அறிவித்திருந்தது. இதற்கு, பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், பொறியியல் கல்லூரி பேராசிரியர்களும், கல்வியாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியரும், தனியார் கல்வி நிறுவன ஊழியர் சங்க நிர்வாகியுமான கார்த்திக் கூறியது:-

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் இதுவரை 1:15 என்ற அளவில் இருக்க வேண்டும் என ஏஐசிடிஇ நிர்ணயித்த போது, பெரும்பாலான கல்லூரிகள் அதைப் பின்பற்றவில்லை. பல கல்லூரிகள் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், சில கல்லூரிகள் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவிலேயே விகிதத்தை அமல்படுத்திவந்தன.
இப்போது இந்த விகிதாசாரத்தை 1:20 ஆக ஏஐசிடிஇ குறைத்து சலுகை அளித்துள்ளது. இது கல்லூரிகளின் நிலையை மேலும் மோசமடையச் செய்யும். இதனால், மாணவர்களை கவனிக்கும் அளவு குறைந்து, கல்வித் தரம் பாதிக்கப்படும்.

இப்போது தமிழகத்தில் உள்ள 523 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் படிப்படியாக மூடப்பட்டு, ஒருசில ஆண்டுகளில் 300 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே நிலைத்திருக்கும். எனவே, ஏஐசிடிஇ-யின் இந்தச் சலுகையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில், ஏஐசிடிஇ ஏற்கெனவே 1:15 என்ற அளவில் ஆசிரியர்-மாணவர் விகிதத்தை நிர்ணயித்திருந்தபோதே, பெரும்பாலான பொறியில் கல்லூரிகள் 30 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் (1:30) என்ற அளவில்தான் நிர்ணயித்து வந்தன.
எனவே, ஏஐசிடிஇ இப்போது இந்த விகிதத்தை 1:20 ஆக நிர்ணயித்திருப்பதால், எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. பொறியியல் கல்வியின் தரம் இப்போது உள்ளதைப் போலவேதான் நீடிக்கும் என்றார்.

கல்வித் தரம், ஆராய்ச்சி நிச்சயம் பாதிக்கும்

ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:20 ஆக ஏஐசிடிஇ குறைத்திருப்பது, பொறியியல் கல்வியின் தரத்தை மட்டுமின்றி, உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மேம்பாட்டையும் கடுமையாகப் பாதிக்கும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறினார்.

இதுகுறித்து தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டி:

பொறியியல் கல்லூரிகளை, மாணவர் சேர்க்கை எண்ணிக்கையின் அடிப்படையில் ஏ,பி,சி என பிரித்து, அதில் -சி- பிரிவில் வரும் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் ஆசிரியர்-மாணவர் சேர்க்கை விகிதத்தை 1:20 ஆக அறிவித்திருக்க வேண்டும். ஏ, பி பிரிவில் வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு முன்பிருந்தது போல 1:15 என்ற விகிதத்தையே நிர்ணயித்திருக்க வேண்டும்.

ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்து கல்லூரிகளுக்கும் 1:20 என ஏஐசிடிஇ அறிவித்திருப்பது துரதிஷ்டவசமானது. ஒரு சில தனியார் பொறியியல் கல்லூரிகளின் அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவே தெரிகிறது. இந்தச் சலுகை காரணமாக, பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு மட்டுமே நேரம் இருக்கும். ஆராய்ச்சி அல்லது ஆராய்ச்சி ஊக்குவிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு பேராசிரியர்களுக்கு நேரம் இருக்காது. எனவே, பொறியியல் கல்லூரியின் தரம் மேலும் மோசமடையும் என்பதோடு, ஆராய்ச்சி மேம்பாடும் பாதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பலர் வேலை இழக்க நேரிடும் என்றார் அவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive