மூன்று நொடிகளுக்கு நில அதிர்வு!

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகள் முதல் கேரளாவின் சில பகுதிகள் வரை நேற்று இரவு சில நொடிகள் நில அதிர்வு உணரப்பட்டதால் தென் மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு 9 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த மக்கள், அப்படியே போட்டுவிட்டு அவசர அவசரமாக வெளியே ஓடிவந்துவிட்டனர். அச்சன்புதுார், வடகரை, மேலகரம், பைம்பொழில் மற்றும் கேரளாவில் ஆரியங்காவு, தென்மலை, புனலூர் ஆகிய இடங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதில் வீடுகளிலிருந்த பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. .

நேற்று இரவு முழுவதிலும் இந்தக் கிராமத்தினர் வீட்டுக்குள் செல்லாமல் பனிகொட்டிய நிலையிலும் வீதிகளிலேயே இருந்துவிட்டனர்.

தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்தியாளரிடம் பேசுகையில், “செங்கோட்டை, கடையநல்லூர், தென்காசி தாலுகாக்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டிருக்கிறது. இந்த அதிர்வு இரண்டு முதல் மூன்று நொடிகளுக்கு மட்டும் நீடித்துள்ளது. இதுவரை எந்த சேதம் பற்றிய தகவலும் இல்லை. சம்பந்தப்பட்ட தாசில்தார்களும் வருவாய் துறை அதிகாரிகளும் உடனடியாக இப்பகுதிகளுக்குச் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.

நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை தொடங்கி நெல்லை வழியாக தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரை வரையிலும் பூமியின் அடுக்குகளில் பிளவு இருப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. தவிர 2005ஆம் ஆண்டில் செங்கோட்டை மேக்கரை அருகே அடவிநயினார் அணை அருகே நில அதிர்வு சுமார் 2 ரிக்டர் அளவுக்கு இருந்தது. சமீபத்தில்தான் குமரியை ஓகி புயல் உலுக்கிய நிலையில், இப்போது நெல்லையை நில அதிர்வு அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விஞ்ஞான ரீதியிலான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive