NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

2017-18-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி, ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த பொதுத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 903 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் என மொத்தத்தில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுத உள்ளனர்.

சென்னை மாநகரில் 407 பள்ளிகளில் இருந்து 156 தேர்வு மையங்களில் மொத்தம் 50 ஆயிரத்து 584 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் 147 பள்ளிகளில் இருந்து 38 தேர்வு மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 142 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருக்கின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக 278 புதிய தேர்வு மையங்கள் மாணவர்களின் நலன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு

இந்த ஆண்டு தமிழ் வழியில் பயின்று மேல்நிலை தேர்வினை 5 லட்சத்து 32 ஆயிரத்து 243 பேர் எழுத இருக்கின்றனர்.

இந்த தேர்வுக்காக மொத்தம் 45 ஆயிரத்து 380 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபட இருக்கின்றனர். பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்-லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் தேர்வர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களில் வழக்கமாக அச்சிடப்படும் அறிவுரைகளை, தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின் வாயிலாக படித்து அறிந்து கொள்ளலாம்.

பறக்கும் படை

இந்த தேர்வுக்காக 296 வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த இடங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திடவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மை கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலுவலர்கள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செல்போனுக்கு தடை

தேர்வு மைய வளாகத்திற்கு செல்போன் எடுத்துவருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை மீறி செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிமுறைகளின்படி, உரிய தண்டனைகள் வழங்கப்படும். மேலும் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்தும், தேர்வு மையத்தினை ரத்து செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 103 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு கட்டுப்பாட்டு அறை

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் குறித்த புகார்களை தெரிவிக்க தேர்வுக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு 8012594105, 8012594115, 8012594120, 8012594125 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பேசலாம்.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive