கையடக்க கணினியில் கல்வி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்

கற்றலை எளிமைப்படுத்தி, அதே நேரத்தில் அவர்களை கற்றலில் ஈடுபாடு கொள்ள செய்யும் வகையில்
தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கையடக்க கணினி மூலம் விருப்ப முறையிலான கற்றல் கற்பித்தலை தொடக்கப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தி வருகிறது தொடக்கக் கல்வித் துறை. இந்த கல்வி முறைக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்திருக்கிறது.ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே புத்தகங்கள் வந்த நிலை மாறி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றலை அறிமுகப்படுத்திய கல்வித் துறை, தற்போது விருப்பக் கற்றலை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் முழுமையாக தொடக்கப் பள்ளிகளில் இந்த முறையை அமல்படுத்துவதற்கு முன்பு பரிட்சார்த்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் இந்த கல்வி முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 
முழு புத்தகமாக வந்த நிலை மாறி, மூன்று பருவங்களுக்குத் தனித்தனியே புத்தகங்களை வழங்கி, தனித்தனி பருவத் தேர்வுகளையும் நடத்தி, அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்ற நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, அடுத்த வகுப்புக்கு தரம் உயர்த்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், தொடக்க நிலை வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதை அதிகப்படுத்துவதற்கும், மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் விருப்பக் கற்றல் முறை கையடக்க கணினி கொண்டு நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கல்வி முறையில் பாடங்கள் அலகு அலகுகளாகப் பிரித்து நடத்தப்படுகின்றன. முதல் அலகில் ஆசிரியர் 30 நிமிஷங்கள் வகுப்பறையில் பாடம் நடத்துவார். அதன் பின்னர் மாணவ, மாணவிகள் குழுவாக கற்கும் முறையும், தன் மதிப்பீடும், கேள்வி- பதிலும் இடம்பெறும் வகையில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
5 மாணவர்களுக்கு ஒரு கணினி: திருச்சி மாவட்டத்தில் விருப்பக் கற்றல் கல்வி முறை மணிகண்டம் மற்றும் மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களில் 10 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பிராட்டியூர், கொழுக்கட்டைக்குடி, ஓலையூர், கொத்தமலை, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, திருமலைச்சமுத்திரம், கே.கே.நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளிலும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் சென்னகரை தொடக்கப்பள்ளியிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
1,2,3 வகுப்புகளில் இந்த கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. 5 மாணவர்களுக்கு ஒரு கணினி வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட கணினி மூலமாக மாணவ, மாணவிகள் பாடப்பொருளை வலுவூட்டப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆசிரியர் தான் பாடம் நடத்தி முடிந்தவுடன், மாணவர்கள் செய்ய வேண்டிய செய்முறைகளை எந்த பக்கத்தில் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு கூறியவுடன், கணினி மூலமாக அந்த பக்கத்தில் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால், மாணவர்கள் செய்ய வேண்டிய செய்முறைகள் கொண்ட பக்கம் வருகிறது. அந்த பக்கத்தில் மாணவ, மாணவிகள் கேள்விகளுக்குரிய பதிலை பதிவிடுகிறார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு மாணவரும் செய்ய வேண்டிய செய்முறைகளுக்குப் பின்னர், அவர்களுடைய விடைவிவரங்கள் பதிவாகிவிடும். இந்த விவரங்கள் அனைத்தும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நேரடியாக கையடக்க கணினி வழியாகப் பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருப்பதால், இந்த கற்றல் முறையில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது என்கிறார் மணிகண்டம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கா. மருதநாயகம்.
கையடக்க கணினி மூலமாக பாடப்பொருள்களை காணொலிக்காட்சியாக பார்ப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் மிகுந்த கவனத்துடன் மாணவர்கள் உள்வாங்குகின்றனர். இதனால் பாடப்பொருள்களை எளிதில் புரிந்து கொள்வதுடன், அவர்கள் மனதில் பாடப்பொருள் நன்கு பதிந்து வருகிறது. கையடக்க கணினி மூலம் மாணவர்களின் மதிப்பீடு சோதித்து அறியப்படுகிறது. மேலும், அவர்கள் பெறும் மதிப்பெண்கள் குறித்த விவரங்களும் சோதித்து அறியப்படுகின்றன. இந்த மதிப்பீடு கருவி வண்ணமயமாகவும், படங்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளதால் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு விருப்பமான கற்றல் கற்பித்தல் வகுப்பறைகளில் நிகழ்கின்றன என்கிறார் எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்
பள்ளித் தலைமையாசிரியை 
பூ.ஜெயந்தி.
மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது: பொதுவாக தொடக்க வகுப்புகளுக்கு மாணவர்கள் வருகை என்பது குறைந்தே காணப்படும். அவர்கள் வீட்டுச் சூழலிலிருந்து பள்ளிச் சூழலுக்கு மாறுவதற்கு 2 மாதங்கள் ஆகும். அதன் பின்னர், அவர்களுக்கு கற்பிக்கவே முடியும். ஆனால், இந்த கணினி மூலமாக கல்வி கற்பிப்பதன் மூலம், மெல்ல கற்று வந்த மாணவர்கள் கூட தற்போது ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். இதுபோல, பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. தாங்களும் கையடக்க கணினி பயன்படுத்தப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கிறது. எங்கள் பள்ளியில் கடந்தாண்டைக் காட்டிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், நிகழாண்டில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆசிரியைகளின் பணிச்சுமையும் குறைகிறது என்கிறார் இப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை புஷ்பலதா.
புத்தக மூட்டைகளைச் சுமந்து சென்ற மாணவ, மாணவிகள் இனி ஒவ்வொருவரும் கையடக்க கணினியை மட்டுமே பள்ளிக்கு எடுத்துச் சென்று கல்வி பயிலும் நிலையை நோக்கிய பயணத்துக்கு தற்போது அடித்தளமிடப்பட்டிருக்கிறது. முழுமையான பயணத்தை விரைவில் காணும் நிலையை நோக்கி கல்வித்துறை பயணிக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

Share this

0 Comment to "கையடக்க கணினியில் கல்வி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...