ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் பள்ளி இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் வரும் 18 - ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சின்ன கொடுங்கையூரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னையை அடுத்துள்ள புழல் அருகே கன்னடப்பாளையத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு பாதுகாப்பான கட்டடங்கள் இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் இந்த பள்ளிக்கூடம் குறித்து திருவள்ளூர் மாவட்ட தலைமை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பள்ளிக்கூடத்தின் தற்போதைய நிலை தொடர்பான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. புகைப்படங்களை பார்த்த நீதிபதி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து போல் மற்றொரு சம்பவம் நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன்கூடிய பள்ளிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? மேலும் இந்த பள்ளிக்கு எப்படி ஆண்டுதோறும் அங்கீகாரம் நீட்டிக்கப்படுகிறது? எனக் கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் வரும் 18 -ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

1 comment:

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments