பள்ளி மேம்பாட்டுக்காக ரூ.1.7 கோடி திரட்டிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!
அரியானா மாநிலம், மீவாட் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் ஸ்ரீ பஸ்ருதின் கான் என்ற 54 வயதுடைய ஆசிரியர். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை எடுத்து வருகிறார். இந்த ஆண்டுக்கான சிறந்த தேசிய நல்லாசிரியர் விருதைப் பெற்றுள்ள பஸ்ருதின், பெண் கல்வியை ஊக்குவிக்கப் பல முயற்சிகளை எடுத்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் மீவாட். இங்கு, குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர் அவ்வளவாக விருப்பம் காட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பள்ளிப்படிப்பைப் பாதியிலே இடை நிறுத்தம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அரசுப் பள்ளிகளில் மட்டும் 20 சதவிகிதப் பெண் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கின்றனர். இதைச் சரிசெய்யவும், ஆசிரியராகத் தனது பணியைச் சிறப்பாக செய்யவும் ஸ்ரீ பஸ்ருதின் கான் எடுத்த முயற்சிகள் ஏராளம்.

இஸ்லாமிய மக்கள் அதிகம் நிறைந்திருக்கும் மாவட்டத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்க நேரடியாகச் சென்று பெற்றோர்களிடம் விழிப்பு உணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். அதோடு, பல தன்னார்வல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பெண் கல்வி தொடர்பான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ஆசிரியரின் தொடர் முயற்சியால், பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. இவரது, முயற்சியால் பல பெண் குழந்தைகளின் கல்வி கனவில் தீபச் சுடரை ஏற்றியிருக்கிறார் பஸ்ருதின் கான்.
காலை 7 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்துவிடும் பஸ்ருதின் மாலை 7 மணிக்குத்தான் வீடு திரும்புவார். கடந்த 25 ஆண்டுகளாக இதையே தன் வழக்கமாக வைத்திருக்கிறார் பஸ்ருதின். தனது ஆசிரியர் பணியைக் கடந்த 1993-ம் ஆண்டு ஜர்புரி கிராமத்தில் தொடங்கினார். அன்றைய காலத்தில், 20 குழந்தைகள் மட்டும் படித்த அரசுப் பள்ளி ஒன்றில் 5 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார். அப்போதே, பஸ்ருதினின் முயற்சியால் 2 ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 57 ஆக உயர்த்தினார். இப்போது வரை, பல தன்னார்வல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பிரசாரம் செய்து வருகிறார். மேலும், தன்னார்வல தொண்டு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு ரூ.1.7 கோடியை பள்ளி மேம்பாட்டுக்காக செலவிடச் செய்துள்ளார்.
ஸ்ரீ பஸ்ருதின் கான் கூறுகையில், `கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் பல விளையாட்டுகளை அரங்கேற்றலாம். குழந்தைகளுடன் முழுவதுமாக ஈடுபட வேண்டும். புத்தகங்களில் இருப்பதை அப்படியே கற்றுத்தராமல், செய்முறை கல்வியாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தால், குழந்தைகள் ஆர்வமாகப் படிக்க தொடங்கி விடுவார்கள்' என்றார்.
ஆசிரியர் தினமான இன்று, சிறந்த தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஆசிரியர் பஸ்ருதினும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.

Share this