ரேஷன் கார்டில், திருத்தங்கள் செய்த பின், 'டூப்ளிகேட்' எனப்படும், மாற்று கார்டுக்கு பதில், இணைய தளத்தில் ஆவணமாக, பதிவிறக்கம் செய்யும் வசதியை, உணவு துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், மத்திய அரசின், 'ஆதார்' விபரங்கள் அடிப்படையில், கையடக்க வடிவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. அதில், குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை செய்த பின், அரசு, 'இ - சேவை' மையங்களில், மாற்று கார்டுகளை வாங்கி கொள்ளும் வசதி இருந்தது. இதற்கு, 30 ரூபாய் கட்டணம் நிர்ணயித்த நிலையில், சேவை மைய ஊழியர்கள், கூடுதல் பணம் வசூல் செய்வது, இஷ்டத்திற்குகார்டுகளை அச்சிட்டு தருவது உள்ளிட்ட, முறைகேடுகளில்ஈடுபட்டனர். இதனால், அந்த மையங்களில், மாற்று ரேஷன் கார்டுகள் வழங்குவதை, சில மாதங்களுக்கு முன், உணவுத்துறை நிறுத்தியது. பிழை திருத்தங்கள் செய்வோர், மாற்று கார்டுகளை வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொது வினியோக திட்ட இணையதளம், 'மொபைல் ஆப்' செயலியில், கார்டுதாரர்கள், திருத்தங்கள்செய்யும் முன், பதிவு செய்த மொபைல் போன் எண்ணை குறிப்பிட வேண்டும். பின், அந்த எண்ணிற்கு அனுப்பப்படும், உள்ளீட்டு எண்ணை பதிவிட்டு, விரும்பிய திருத்தங்களை செய்யலாம். பின், அந்த விபரம், மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும். அதை, இணையதளம் வாயிலாகவே, வட்ட வழங் கல் அலுவலர், உதவி ஆணையர் ஆய்வு செய்து ஒப்புதல் தருவர்.
தவறான விபரங்கள் இருந்தால் நிராகரிப்பார். அந்த விபரமும், எஸ்.எம்.எஸ்.,சில் அனுப்பப்படும். அதிகாரி ஒப்புதல் அளித்த ஒரு வாரத்திற்குள், சரி செய்த விபரங்கள் இணையதளத்தில், பி.டி.எப்., எனப்படும்,கையடக்க ஆவண வடிவத்தில் இருக்கும். அதை, 'பிரின்ட்' எடுத்து, ரேஷன் கார்டு கேட்கும் இடங்களில் சமர்ப்பிக்கலாம். அரசு ஒப்புதல் கிடைத்ததும், ஏற்கனவே இருந்தது போல், மாற்று கார்டுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...