பள்ளிக் குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர்!
இரண்டு நாட்கள் பயணமாக வாரணாசிக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, தனது 68ஆவது பிறந்த நாளை பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாட உள்ளார்.
இரண்டு நாட்கள் பயணமாக வாரணாசிக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, தனது 68ஆவது பிறந்த நாளை பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாட உள்ளார்.
1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்த பிரதமர் நரேந்திர மோடி, 67 வயது முடிந்து 68ஆவது வயதில் இன்று (செப்டம்பர் 17) அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி இரண்டு நாட்கள் பயணமாக, வாரணாசிக்கு இன்று செல்லும் பிரதமர், தனது பிறந்த நாளை வாரணாசி தொகுதியிலுள்ள நரூரில் சுமார் 5,000 பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடுகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கும் அவர், பயணத்தின்போது புகழ்பெற்ற காசி விசுவநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
இதுகுறித்து வாரணாசி மாவட்ட பாஜக ஊடகப் பொறுப்பாளர் க்யானேஷ் ஜோஷி கூறுகையில், “மாணவர்களுடன் உரையாடவுள்ள பிரதமர் மோடி, மாணவர்களின் வாழ்க்கை நிலை குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அவர்களுடன் பேசவுள்ளார். பிரதமரின் வாழ்க்கைப் பயணம் குறித்து, ‘சலோ ஜீதே ஹெயின்’ என்ற திரைப்படம் திரையிடப்படவுள்ளது. அதை அவர் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கவுள்ளார்” என்று குறிப்பிட்டார். பிரதமரின் 68ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வாரணாசி மாவட்டத்தில் 68 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தவும், 68 கோயில்களில் சிறப்பு வழிபாடும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து நாளை வாரணாசியில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, சில நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். வாரணாசியின் புறநகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ள மோடி, அன்றிரவு டெல்லி திரும்புகிறார்.
Happy birthday to my honourable Prime minister Modiji.
ReplyDelete