கூலித்தொகையைக் கொண்டு அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் கல்விச்சீர் வழங்கிய கிராம மக்கள்!ஒரு குக்கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளி வளர்ச்சிக்காக 3 லட்சம் மதிப்பிலான பொருள்களை அன்றாடம் கூலி வேலைக்குப் போய் கிடைக்கும் சொற்ப வருவாயில் கல்விச்சீராக வழங்கி ஆசிரியர்களை நெகிழ வைத்து இருக்கிறார்கள் ஊர்மக்கள்.

கல்விச்சீர் வழங்கிய மக்கள்
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது வெள்ளியணை. இந்த கிராமத்தில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மனோகரன் உள்ளிட்டவர்களின் முன்முனைப்போடு, இந்தப் பள்ளியில் பல நல்ல விசயங்களைச் செய்து வருகிறார்கள். இயற்கை விவசாயம், பள்ளி வளாகம் மற்றும் ஊர் முழுக்க மரக்கன்றுகளை நட்டு, அதற்கு நடுபவர்களின் பெயர்களை வைப்பது என்று கலக்கி வருகிறார்கள்.

அதோடு, தொழில்நுட்ப ரீதியிலும் மாணவர்களைப் பற்றி அத்தனை அப்டேட்டுகளையும் தெரிந்துகொள்ள ஏதுவாக க்யூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை, சமூக வலைதளங்களில் பிரபலமான மீடு கேஷ்டேக்கைப் பயன்படுத்தி, பள்ளிக்குத் தேவையான நிதி வசூல் பண்ணுதல் என்று பல புதிய முயற்சிகளைச் செய்து வருகிறார்கள். தமிழகப் பள்ளிக்கல்வித்துறையோடு இணைந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு டெக்னாலஜி ரீதியாக மேம்படுத்த பாடுபட்டுவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமே இந்தப் பள்ளி ஆசிரியர் மனோகரனை சமீபத்தில் அழைத்து டெல்லியில் பாராட்டியது. அந்த அளவுக்கு எல்லா வகையிலும் இந்தப் பள்ளியை மேம்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில்தான், குக்கிராமமான இந்த வெள்ளியணையில் இயங்கி வரும் பள்ளியை இன்னும் வளர்ச்சிப்படுத்த ஏதுவாக 3 லட்சம் மதிப்பிலான பொருள்களை கல்விச்சீராக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் கிராம மக்கள்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம், ``எல்லா ஆசிரியர்களின் கூட்டு முயற்சியில் இந்தத் தொடக்கப்பள்ளியைத் திறம்பட மேம்படுத்தி வருகிறோம். இந்த கிராமமே குக்கிராமம். ஏழ்மையானவர்கள் அதிகம் நிறைந்த கிராமம். வறட்சியான ஊரும்கூட. அதனால், இங்குப் படிக்கும் ஏழை மாணவர்களை எல்லா வகையிலும் கல்வியில் உயரச் செய்ய வேண்டும் என்பதற்காகக் கல்வி, தனித்திறமை, இயற்கை மீதான விழிப்புஉணர்வு, தகவல் தொழில்நுட்பம் என்று எல்லா வகையிலும் அவர்களை ஆற்றல்மிக்கவர்களாக மாற்றி வருகிறோம். இருந்தாலும், பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு, பேன், கூடுதல் கம்ப்யூட்டர்கள்ன்னு பல பொருள்கள் தேவைப்பட்டது. அதைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் 3 லட்சம் மதிப்பிலான பொருள்களை தங்கள் செலவில் வாங்கி, அதைக் கொண்டு கல்விச்சீர் வழங்கி இருக்கிறார்கள்.

கல்விச்சீர் வழங்கிம் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர்
சாதாரண துப்புரவுத் தொழிலாளர்கள் தொடங்கி, ஆட்டோ ஓட்டுநர், கூலி வேலைக்குச் செல்பவர்கள் எல்லாம் பணம் போட்டு இந்தக் கல்விச்சீரை வழங்கியிருக்கிறார்கள். இந்த விழாவில் கரூர் பிரபல தொழிலதிபர் அட்லஸ் நாச்சிமுத்து தன் பங்குக்கு 25,000 ரூபாய் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தங்கள் அன்றாட கூலித்தொகையைக் கொண்டு எங்களுக்கு கல்விச்சீர் வழங்கிய மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் இந்தப் பள்ளியில் படிக்கும் அவர்களின் குழந்தைகளை கல்வியில் சிறக்க வைப்போம்" என்றார் முத்தாய்ப்பாக!.

Share this

2 Responses to "கூலித்தொகையைக் கொண்டு அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் கல்விச்சீர் வழங்கிய கிராம மக்கள்! "

  1. Ungalukku vera vela illaiya. oru jana nayaga naattula govt seyya vendiya velaiya nenga seiringa.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...