அரசுப் பள்ளிகளில் செயல்படும் ஆங்கில வழி வகுப்புகளில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவர்களை அருகிலுள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்கள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி கணக்கெடுக்கப்படும். அதேபோல் இந்தாண்டும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நிர்ணயம் செய்வதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே அந்த எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒவ்வொரு 30 மாணவருக்கும் ஓர் ஆசிரியரை அனுமதிக்கலாம். 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என நிர்ணயம் செய்யலாம். 60 மாணவர்களுக்கு கூடுதலாக இருந்தால் 2 பிரிவாகப் பிரித்து ஆசிரியர் நிர்ணயிக்கலாம்.மேலும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்விக்குஇணையாக ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட வேண்டுமெனஅறிவுறுத்தப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும் பொழுது தமிழ் வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்வது போலவே, ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தனித்தனியாக ஆசிரியர் நிர்ணயம் செய்ய வேண்டும்.ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால், அந்த வகுப்பில் உள்ள குறைந்தபட்ச மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் செயல்படும் ஆங்கில வழிப் பிரிவுகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் மற்றும்மாணவர் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறைக்கு டிச.29-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments