'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது' என்பது இப்போது உலகெங்கும் நிரூபணமாகி வருகிறது.
நம் தமிழ் மக்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது தெரியுமா? முன்பெல்லாம் எதிரே சந்தித்தால், தங்கள் சொந்தக் கதைகள் தான் பேசப்படும். ஆனால் இப்போது பொதுநலம் தான் அதிகம் பேசப்படுகிறது. அதுவும் இந்த 'கஜா' புயலின் கோரத்தாண்டவத்திற்குப் பிறகு, எப்போதும் நம் தமிழ்நாட்டு மக்களின் ஞாபகங்கள் அதிகம். வெறும் பேச்சோடு அல்லாமல் பல நல்ல செயல்களில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.
அப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் நிரம்பிய டல்லாஸில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் சீரமைப்பிற்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 8000 அமெரிக்கா டாலர்கள் கொடுக்க முன்வந்துள்ளார்கள் ! இதன் மூலம் விவசாய நிலங்களில் வீழ்ந்து கிடைக்கும் மரக்கன்றுகளை அகற்றி, விவசாயிகளுக்கு தென்னை, மா, பலா, எலுமிச்சை கன்றுகளை வழங்கிட முன்வந்துள்ளனர்.
இத்தொகையை 'தமிழ்நாடு பவுண்டேசன் டாலஸ்' மூலம், தமிழ்நாட்டில் 'கல்வியாளர்கள் சங்கமம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புதுக்கோட்டை சதீஷ்குமார் வழியாக வழங்கிட திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளின் கண்ணீர் துடைக்க கரம் நீட்டிய பெரும் மனது கொண்ட டாலஸ் தமிழ் மக்களின் உயரிய எண்ணத்திற்கு மிகுந்த பாராட்டுக்கள் !
இதற்கு அருண்குமார், நம்பி, முனிராஜ், தாரகராம், சக்திகுமார், சிவகுமார் ஆகியோர் மிகுந்த முயற்சி எடுத்து திறம்பட செயலாற்றினர். இதுகுறித்து அருண்குமார் பேசியபோது - பாதிக்கப்பட்ட நம் மக்களோடு நேரடியாக எங்களால் களத்தில் நிற்க முடியவில்லை, ஆனாலும் எங்கள் சார்பில் வைக்கப்போகும் மரங்கள் அவர்களோடு துணை நிற்கும் என்பதில் திருப்தி அடைகிறோம்' என்றார்.
இவர்களோடு,பல நல்ல சமூக சேவைகள் செய்து வரும் பிரவீணா வரதராஜனின் பங்கு மிக முக்கியமானது. இவரும் கல்வியாளர்களின் சங்கமத்துடன் இணைந்து செயலாற்றி வருகிறார்.
வரும் 16 ஆம் தேதி,டல்லாஸில் உள்ள 'தமிழ் மலரும் மையம்' எனும் தமிழ்வழிப்பள்ளியில் 'மொய் விருந்து' நடைபெற உள்ளது. இதில் வரும் தொகையைக் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முத்தன்பள்ளம் எனும் கிராமத்தை சீரமைக்கும் பணிக்கு பயன்படுத்த உள்ளனர். இம்மொய் விருந்து நிகழ்விற்கான ஏற்பாட்டை, ஜெய் நடேசன், கீதா சுரேஷ் செய்து வருகின்றனர். இதில் டல்லாஸில் உள்ள தமிழ்ச் சங்கங்கள், தமிழ்ப் பள்ளிகள் மற்றும் தமிழ் அமைப்புகளும் பங்குகொள்ள உள்ளனர்.
இதுகுறித்து, புதுக்கோட்டை சதீஷிடம் பேசியபோது,' விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என கரம் கொடுத்த அத்தனை பேரும் கடவுள்கள் ! அமெரிக்க தேசத்திலிருந்து வரும் ஒவ்வொரு நிதியும்,ஒரு ஏழை வீட்டுக்கு குடிசையாகவோ, தெருவிளக்காகவோ, மரக்கன்றாகவோ, ஒரு ஏழையின் சிரிப்பாகவோ உருமாறும்' என அக்கறையுடனும் நெகிழ்ச்சியுடனும் தெரிவித்தார்.
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்(USA)
&
Thanks to Mr. Munisamy, Teacher
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...