Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளை நூலகமாக மாற்றுவதில் பயனென்ன?

தமிழகத்தில் 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், ஏற்கனவே உள்ள நூலகங்களில் கட்டிடம், கழிப்பறை துவங்கி காலிப்பணியிடங்கள் வரை உள்ள அவலங்களை அரசு போக்க வேண்டும் என்று நூலகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்களை கொண்ட அரசு பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இப்படி மூடப்படும் பள்ளிகள் ஒவ்வொன்றையும் படிப்படியாக நூலகங்களாக மாற்றி, ஒவ்வொரு நூலகத்திற்கும் ஆயிரம் புத்தகங்களை வைத்து முழுநேர நூலகங்களாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 46 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படுகிறது எனவும் அரசு அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 4 பள்ளிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பள்ளிகள், நீலகிரி மாவட்டத்தில் 6 பள்ளிகள், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா 3 பள்ளிகள், விழுப்புரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, கரூர், தர்மபுரி மாவட்டங்களில் தலா 2 பள்ளிகள், திருவள்ளூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி நூலகமாக மாற்றப்படுகிறது. நூலகமாக மாறும் பள்ளிகள் பட்டியலில் தென்மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டத்தில் 4 பள்ளிகள், விருதுநகர் மாவட்டத்தில் 3 பள்ளிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பள்ளிகள், தேனி மாவட்டத்தில் ஒரு பள்ளி இடம் பெற்றுள்ளது.

இவ்வகையில் தமிழகத்தில் மொத்தம் 46 பள்ளிகள் நூலகமாக மாற்றப்படும் என்று கடந்த ஜூலை 31ல் முதன் மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி, இதற்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் நூலகம் அமைக்கும் பணியை நூலக ஆணைக்குழு மேற்கொண்டிருக்கிறது. இந்த பள்ளி பகுதியில் வாடகை கட்டிடத்தில் ஏதேனும் நூலகம் செயல்பட்டால், இப்பள்ளிக்கு மாற்றிடவும், நூலகம் இல்லாத பகுதியில் அப்பகுதி பள்ளி கட்டிடத்தில் நூலகம் திறப்பதற்காக 500 புத்தகங்கள் தயார்படுத்தி வைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

நூலகத்தில் பிளஸ் 2 அல்லது சர்டிபிகேட் ஆப் லைப்ரரி சயின்ஸ் முடித்தவர்கள் தினம் ரூ.315 ஊதியத்தில் நியமிக்கப்படுகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்நூலகத்தை திறந்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே காலியிடங்கள் பிரச்னை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் நூலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, கூடுதல் சுமையாக அரசு பள்ளிகளையும் நூலகங்களாக மாற்றும் அறிவிப்புக்கு நூலகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பொதுநூலகத்துறை மாநில பொதுச்செயலாளர் இளங்கோ மதுரையில் கூறியதாவது: பொதுநூலகத்துறை ஏற்கனவே மிகுந்த இன்னலுடன் செயல்பட்டு வருகிறது. நூலக பராமரிப்பிற்கு நிதியில்லை. பல இடங்களில் சொந்த கட்டிடம் இல்லை. கட்டிடத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை, புத்தகத்தை அடுக்கி வைக்க இரும்பு அலமாரிகள் துவங்கி, அதனை அடுக்கி வைப்பதற்கான நூலக பணியாளர்கள் வரை பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது.

இப்படி நூலகங்கள் அழிவின் விளிம்பில் இருக்கும் நிலையில், பள்ளிகளை நூலகங்களாக மாற்றுவதில் பெரிய பலன் கிடைக்கப்போவதில்லை. திமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி நூலகம் துவக்கப்பட்டு, சொந்த கட்டிடம் கட்டித்தந்து, ஓய்வுபெற்ற ஒருவரை ஆயிரம் ரூபாய் மாதச்சம்பளத்தில் அமர்த்தி, பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் பார்த்தனர். ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இந்த நூலகங்களை மூடி விட்டது. அவற்றை சீரமைத்து, நடைமுறைப்படுத்தினாலே போதும்.

பொது நூலகத்துறையிலேயே திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களையும் ஒரே ஒரு மாவட்ட நூலகர்தான் கவனித்து வருகிறார். இதேபோல், மதுரை மாவட்ட நூலகர், விருதுநகரையும், தேனி மாவட்ட நூலகர் திண்டுக்கல்லையும் சேர்த்து கவனிக்கும் நிலை இருக்கிறது. பணியாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும். பொதுநூலகத்துறையில் மட்டுமே மாநிலம் முழுக்க குறைந்தது 800 காலிப்பணியிடங்கள் உள்ளன. பதவி உயர்வின்றி பலர் தவித்து வருகின்றனர். எல்லா பள்ளிகளிலும் இருக்கும் நூலகத்தை, பள்ளியிலேயே மேம்படுத்தும் திட்டத்தையும், பள்ளிகள் மூடப்படாமல் மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்து பாதுகாக்கும் திட்டத்தை அரசு மேற்கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு, பள்ளிகளை நூலகங்களாக மாற்றுவது சரியான நடவடிக்கை இல்லை. இவ்வாறு கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive