வாத்தியாரு வேலதான்

வசதின்னு பேசுறாக...
உக்காந்தே காசு
பாக்கிறதா
ஊரெல்லாம் ஏசுறாக...
பசங்க மனசெல்லாம்
பாழடைஞ்சு கெடக்குது
சொல்லிக்கொடுத்த
வாத்தி மனசோ
சுக்கு நூறாக்கெடக்குது .
காலையில பள்ளியில
கால் வெச்சு போகையில...
டிக் டிக் டிக் மணியடிக்க
திக் திக்குன்னு மனசடிக்குது.
பசங்க முடியெல்லாம்
பக்காவா இருக்கனுமாம்
பக்குவமா சொன்னாலும் மனசு
பக்கு பக்குனு அடிக்குது
பசங்க ஏதாச்சும்
பண்ணிடப் போரான்னு
துடிக்குது...
படிக்கச்சொன்னாலே
பசங்க
துடிச்சு போற காலமிது...
படிக்க வெக்கத்தான்
வாத்தியாரு வேலையிது..
கண்டிக்கவும் கூடாது
கட்டளையும் கூடாது
திட்டவும் கூடாது
குட்டவும் கூடாது
மார்க்கு மட்டும்
மலை போல
கொட்டனுமாம்..
ஆதாரு இருக்கான்னு
அக்கறையா கேக்கனுமாம்
அக்கவுண்டு நம்பரை
அட்ரசோட
வாங்கணுமாம்...
சீருடை இல்லைன்னா
சிரிச்சிக்கிட்டே
கேக்கனுமாம்...
அடிச்சி கிடிச்சு
போட்டாக்க
அம்புட்டுதான் வாழ்க்க...
கழியத்தொட்டதுக்கு
களிதானே வாழ்க்க...
பசங்க
கேலிப்பேச்சு
பேசினாலும்
கேக்கத்தான் வேணும்...
கத்தியாலக்குத்தினாலும்
வாங்கத்தான் வேணும்..
போசாக்கு இல்லாத
பையனையும்
பாசாக்க
வெக்கனுமாம்
பாவப்பட்ட ஜென்மம் அது
வாத்தியாரு பொழப்பிது ..
நரக வாழ்க்கையிது
நல்லபடி
நகரா வாழ்க்கையிது...
இயல்பான
ரத்த அழுத்தம்
ரெண்டு மடங்கு ஏறுது..
துடிக்கிற இதயமோ
எப்போதான்
நிற்குமோ !?
அச்சமில்லை அச்சமில்லை
சொல்லி கொடுத்த
வாத்தியாரு
சொன்னதுமே
நடுங்குறாரு..
சாக்பீசு
தேயுமுன்னே
வாத்தியாரு
தேயுராரு...
ஒத்த இதயத்த
பிளந்தெடுக்க
எத்தனை அம்புகதான்
கிளம்பி வருமோ?
பெத்தவங்க
ஒருபக்கம்
மத்தவங்க
மறுபக்கம்.
சமூகம்
ஒருபக்கம்
சங்கடங்கள்
மறுபக்கம்
அம்புகள
தொடுத்து நின்னா
அப்பாவி வாத்தியாரு
என்னதான்
பண்ணுவாரு...
வாத்தியாரை
மதிக்கும்
வசந்த காலம் போச்சு
வாத்தியாரை
மிதிக்கும்
கலி காலம் ஆச்சு...
இப்பதெல்லாம்
நெறைய வாத்தியார்கள்
கரும்பலகையை
கையால் துடைப்பதில்லை
கண்ணீரால்
துடைக்கிறார்கள்.
சாக்பீஸ்
துகள்களால்
நுரையீரலை
அடைக்கிறார்கள்..
வாத்தியாரு வேலதான்
வசதியின்னு பேசுறாக...
உக்கந்தே காசு
பாக்கிறதா
ஊரெல்லாம் ஏசுறாக...
அவங்களிடம்
சொல்லுங்க...
" வாத்தியார் பொழப்பு
வாழ்க்கையில் இழப்பு "
என்று....

1 comment:

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments