நாடு சுதந்திரம் அடைந்து
முதல் 10 ஆண்டுகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு மத்திய அரசிடமே நிதி இல்லாததாக சொல்லபட்டபோது, தமிழகத்தில் 3 கி.மீட்டருக்கு ஒரு பள்ளி தொடங்கும் அளவுக்கு கட்டமைப்பில் நாம் முன்னேறி இருந்தோம். இப்படி பள்ளிகள் கொண்ட கட்டமைப்பை உருவாக்குவது கடினம். ஆனால் உருவாக்கிய கட்டமைப்பில் உள்ள பள்ளிகளை மூடுவது எந்த வகையில் நியாயம். 1980ம் ஆண்டுகளில் இருந்து தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேராமல் போவதற்கு 2 காரணங்கள் உள்ளன. தேவைக்கும் அதிகமான தனியார் பள்ளிகளை திறக்க அனுமதித்தது, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளியில் 25 சதவீத இடஒதுக்கீடு ேகாருவதும் தான்.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் பிரிவு 12(1)(சி)ன்கீழ் 6 வயது நிரம்பிய குழந்தைக்கு, தனியார் பள்ளிகளில் அரசு இடஒதுக்கீடு கோர வேண்டும். ஆனால் மூன்றரை வயது நிரம்பிய குழந்தைகளுக்கு அரசு இட ஒதுக்கீடு கோருகிறது. அந்த குழந்தை 8ம் வகுப்பு வரை குறிப்பிட்ட தனியார் பள்ளியில் படிக்க அரசே செலவு செய்கிறது.
கல்வியை வழங்க வேண்டியது அரசின் கடமை, அரசுப்பள்ளிகளில் சேர ஆளில்லை என்ற நிலை வந்துள்ளதால், தனியார் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்துவிட வேண்டியது தான். கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் நிரம்பிய பின்னரே தனியார் பள்ளிகளில் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று கர்நாடகாவில் சட்டம் உள்ளது. கேரளாவில் நிலைமை வேறாக உள்ளது. அங்கு இதுதொடர்பான சட்டம் எதுவும் இல்லை. ஆனால் அங்கு அரசியல்வாதிகளே தங்களின் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.
எளிதில் அனுக முடியாத பகுதிகள், மலை கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கட்டாயம். ஒரு குழந்தை இருக்கிறது என்பதற்காக பள்ளியை அரசு மூடினாலோ அல்லது வேறு பள்ளிக்கு அந்த குழந்தையை அனுப்ப முயன்றாலோ அது நம் அரசியலமைப்பு சட்டத்தின் சமத்துவ கோட்பாட்டுக்கு எதிரானது. அதனால் ஒரு குழந்தை இருந்தாலும் அந்த பள்ளியை நடத்த வேண்டியது அரசின் கடமை.நிர்வாக ரீதியாக நிதி ஆயோக் முடிவெடுக்கிறது. மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் எதற்கு இத்தனை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறையுங்கள் என்கிறது.
ஒரு குழந்தை இருந்தாலும் அந்த பள்ளி செயல்படுவதற்கு என்னவெல்லாம் தேவையோ அதை வழங்க வேண்டும். கல்வியை பொறுத்தவரை நிர்வாக ரீதியாக முடிவெடுக்கக்கூடாது, கல்வித்துறையில் இன்புட் மெத்தேடு, அவுட்புட் மெத்தேடு என்ற பதங்கள் புழக்கத்தில் உள்ளது. ஒரு பள்ளி செயல்படுவதற்கு என்னவெல்லாம் தேவையோ அதை வழங்குவது இன்புட் மெத்தேடு.
எத்தனை மாணவர்கள் உள்ளார்கள், அவர்களுக்கான கற்றல் திறன் வெளிப்பாடு எப்படி உள்ளது என்று பார்த்து அதற்கேற்ப செயல்படுவது அவுட்புட் மெத்தேடு. இன்புட் மெத்தேடை பின்பற்றுவதற்கு பதிலாக, நிதி ஆயோக் அவுட்புட் மெத்தேடை கையில் எடுத்துள்ளது. சுற்றியுள்ள தனியார் பள்ளிகளால் அரசுப்பள்ளிகள் பலவீனப்படுகின்றன. சுற்றியுள்ள தனியார் பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக, அரசுப்பள்ளியை மூடுவதற்கு என்ன அவசியம் வந்தது. விதிகளை மீறியுள்ள தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுங்கள். அப்போது அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேருவார்கள்.
அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் நிரம்பிய பின்னரே தனியார் பள்ளிகளில் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று கர்நாடகாவில் சட்டம் உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...