NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்


சென்னை: அசுர குருவான சுக்ராச்சாரியாருக்கு ஒரு கண் தெரியாது ஏன் தெரியுமா? அவராகவே வலிய போய் வாங்கிக் கொண்ட தண்டனைதான் இது. திருவோணம் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள இந்த நேரத்தில் " தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்" இந்த விடுகதை பற்றியும் அறிந்து கொள்வோம். இது என்ன விளையாட்டுத்தனமாக இருக்கே என்று நினைக்க வேண்டாம். ஓணம் பண்டிகைக்கும் இந்த விடுகதைக்கும் உள்ள தொடர்பை பற்றியும் அற்புதமாக அறிந்து கொள்வோம்.
ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக இன்று கொண்டாடப்படுகிறது. தற்போது 'கேரளா' என அழைக்கப்படும் மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. கேரள மக்கள் இன்றளவும் மதித்து போற்றும் அளவுக்கு உன்னத அரசனாக இருந்தவன், அந்த தேசத்தை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி.
தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான். தட்டான் என்பவர் இங்கே மகாபலிச் சக்கரவர்த்தி. தட்டானுக்கு சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள். தட்டான் என்றால் கமண்டலம் என்றும் சொல்வார்கள்.
கேரளாவை ஆண்ட மன்னன் மகாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்து அதன் முடிவில் தானம் கொடுக்க முடிவு செய்தார். இதை அறிந்த தேவர்கள் வெலவெலத்து போனார்கள். மகாபலியின் புகழ் அதிகரித்து விடுமே, மூவுலகையும் ஆட்சி செய்யும் அதிகாரம் வந்து விடுமே என்று அஞ்சினர் தேவர்கள் பகவான் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
அவரும் சின்ன பையன் போல வாமன ரூபத்தில் அவதாரம் எடுத்தார். குட்டை பையன் - வாமன அவதாரத்தை குறிக்கிறது. 3 அடி உயரமே கொண்ட வாமனர் ஒரு கையில் தாழம்பூ குடையும், மற்றொரு கையில் கமண்டலமுமாக மகாபலி சக்கரவர்த்தி வேள்வி நடத்தும் இடத்திற்குச் சென்றார். வேள்வி தொடங்கி, தான தருமங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் அங்கு தாமதமாக வந்து சேர்ந்தார் வாமனர்.
வாமனரைப் பார்த்ததும் வேள்வியில் இருந்து எழுந்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, 'அந்தணரே! தான தருமங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வந்துள்ளீர்களே!' என்று கேட்டான். அதற்கு வாமனர், 'நான் வர சற்று தாமதம் ஆகி விட்டது. இருப்பினும் எனக்கு பெரிய தானங்கள் எதுவும் தேவையில்லை. என் உயரத்தை போன்றே இந்த உலகில் மூன்று அடி மண் கொடுத்தால் போதும்' என்றார். அவரது வேண்டுதலை தட்டமுடியாமல் தானம் கொடுக்க ஒப்புக்கொண்டான் மகாபலி.
ஆனால் அசுர குரு சுக்ராச்சாரியாருக்கு வந்திருப்பது மகாவிஷ்ணு என்று தெரிந்து விடுகிறது. உடனே மகாபலியை எச்சரிக்கிறார் சுக்கிராச்சாரியார். 'மகாபலி! வந்திருக்கும் அந்தணரின் மேல் எனக்கு சந்தேகமாக உள்ளது. அவர் திருமாலின் அவதாரமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. எனவே தானம் கொடுப்பதில் அவசரம் வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
உடனே மகிழ்ச்சியில் திளைத்தான் மகாபலி. 'குருவே! என்னிடம் தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரம் என்றால், இதைவிட பெரிய பேறு எனக்கு என்ன இருக்கப் போகிறது!' என்று கூறியவன், அத்துடன் நில்லாமல், கமண்டலத்தை எடுத்து நீர் வார்த்து தானத்தைக் கொடுக்க முன்வந்தான். மகாபலி தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்கொண்டார் சுக்கிராச்சாரியார்.
அப்பொழுது நம் குட்டைப் பையன் வாமனர் என்ன செய்யறார்? ஒரு தர்ப்பை புல்லை எடுத்து கமண்டலத்தில் அடைபட்டிருந்த பகுதியை குத்தி விடுகிறார். இதில்தான் சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி போய்விடுகிறது.
மகாபலி சக்கரவர்த்தி நீர் வார்த்து தானத்தை கொடுத்தார். பின்னர் தங்களுக்கு உரிய நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று வாமனரை நோக்கி கூறினான். இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்து வானுயரத்திற்கு உயர்ந்தார். இதைப் பார்த்து ஆச்சரியத்தில் மலைத்துப் போய் நின்றான் மகாபலி சக்கரவர்த்தி. உயர்ந்து நின்ற வாமனர் முதல் அடியைக் கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்து முடித்தார். பின்னர் மகாபலியிடம், 'சக்கரவர்த்தியே! நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது' என்று கேட்டார். 
'இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்' என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான். மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலை மீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார். மகாபலியின் பெருமையை உலகறியச் செய்தார்.
அப்புறம் என்ன பின் சுக்ராச்சாரியார் தன் தவறை உணர்ந்தார். அவரை மன்னித்து, கொடுப்பதில் வள்ளலான மகாபலிச் சக்கரவர்த்தியின் புகழை உலகறிய செய்தவர் பெருமாள். இது தான் "தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்..." என்பதற்கான விளக்கம்!!





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive