வீடியோ அழைப்புகள் பெண்களுக்கு பாதுகாப்பானதா?..
முன்பெல்லாம் வெகு தொலைவில்
இருக்கும் ஒருவர் முகம் பார்த்து பேச வேண்டும் என்றால் நேரில் தான் சந்தித்து பேச
வேண்டும். ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் அது மிகவும் எளிமையாகிவிட்டது.
ஸ்கைப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் போன்ற சேவைகளை பயன்படுத்தி தொலைவில் இருக்கும்
நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வீடியோ காலில் முகம் பார்த்து பேசி
கொள்கிறோம். தற்போது பெரும்பாலான மக்கள் அனைவரும் வீடியோ காலில் தான்
பேசுகிறார்கள். இந்த தொழில்நுட்பம் நமக்கு இவ்வளவு வசதிகளை கொடுத்தாலும் நம்
அறியாமையாலும், அலட்சியத்தினாலும் சில இன்னல்களை சந்திக்கிறோம் என்பது தான்
நிதர்சனமான உண்மை. சில வருடத்திற்கு முன்பு கனடா நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு
இணையத்தில் ஒருவன் நண்பனாக அறிமுகம் ஆகிறான், பிறகு அவனுடன் வீடியோ காலில் அந்த
பெண் பேசுகிறாள்.
ஒரு நாள் அந்த வீடியோ காலில் அவனை நம்பி அவனிடம் தனது
அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்கிறாள். வீடியோ காலில் அந்த பெண்ணின் அந்தரங்கத்தை
புகைப்படமாக எடுத்த அந்த கொடூரன், அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை
பேஸ்புக்கில் வெளியிட்டான்.
ஒரு கட்டத்தில் இது அந்த பெண்ணுக்கு தெரிய
வந்துவிடுகிறது. பிறகு அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படம் எல்லோரிடமும் பரவுகிறது.
அவமானங்கள், கிண்டல், கேலிகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் இறுதியில் அந்த பெண்
யூ-டியூப்பில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாள்.அந்த வீடியோவில் அவளுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை பற்றி அந்த பெண் கூறியிருப்பாள்.
அதை பார்க்கும்போது மனம் உடைந்து கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிடும். இதுபோன்ற
பல சம்பவங்கள் வெளியே தெரியாமல் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இன்றைக்கு
இணையத்தில் நல்லவன்போல் நாடகமாடி நம்பவைத்து பெண்களின் வாழ்க்கையை அழிக்க சில
ஓநாய்கள் ஒளிந்து இருக்கிறது. பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் இதில்
இருந்து தப்பிக்க முடியும். நுட்பங்களை பயன்படுத்த தெரிந்த மக்களுக்கு அவற்றுள்
இருக்கும் சில பாதுகாப்பு நுணுக்கங்களை பயன்படுத்த தெரிவது இல்லை.
இதுவே பல
பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. இன்றைக்கு நம் வீடியோ காலுக்காக பயன்படுத்தும் சில
சேவைகள் ஒரு முறையாவது ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது நாம்
பயன்படுத்தும் சேவைகள் எவ்வளவு பாதுகாப்பானது என்று! ஒரு சில சேவைகளில் ஹேக்
செய்வதற்கான வாய்ப்பை நாமே ஏற்படுத்தி கொடுக்கிறோம். இன்றைக்கு பெரும்பாலான மக்கள்
வீடியோ கால் வசதிக்காக பயன்படுத்தும் சேவை வாட்ஸ்-அப் தான்.இது மிகவும்
பாதுகாப்பானது என்று அனைவரும் கருதுகின்றனர். ஆனால் இதிலும் சில சிக்கல்
இருக்கிறது. இன்றைக்கு பெண்கள் முன் பின் தெரியாத நபருடன் நட்பு கொண்டு
வாட்ஸ்-அப்பில் அவர்களுடன் வீடியோ காலில் பேசுகிறார்கள்.
ஒரு கட்டத்திற்கு பிறகு
அந்த நபரை நம்பி அந்த பெண் அவளுடைய அந்தரங்கத்தை வீடியோ காலில் பகிருவாள். இந்த
உரையாடல் இத்துடன் முடிந்துவிடும். இதை யாராலும் தவறாக பயன்படுத்த முடியாது. இது
மிகவும் பாதுகாப்பானது என நினைத்து தைரியமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவாள். ஆனால்
அந்த பெண்களிடம் வீடியோ கால் பேசும் நபர் நினைத்தால் அந்த உரையாடலை உங்களுக்கே
தெரியாமல் பதிவு செய்ய முடியும்.
வீடியோ கால் பேசும்போதும் 'ஸ்கிரீன் ரெக்கார்டிங்'
போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி தனிமையில் இருக்கும்போது எடுக்கப்படும் காட்சிகளை
பதிவுசெய்து பின்னர் எடிட்டிங் செய்து மற்றவர் களுக்கு அனுப்பலாம் என்பது நிறைய
பெண்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு தனிமையில் எடுக்கப்படும் படங்கள் அல்லது வீடியோ
கைமாறி அந்த பெண்ணுக்கு விபரீதத்தை உருவாக்கிவிடுகிறது. தனக்கு விருப்பமான அவர்
மட்டும்தான் பார்ப்பதாக பெண்கள் நினைத்து விடுகிறார்கள். அறியாமையால் செய்யும் சில
செயல் களினால் பல பெண்களின் வாழ்க்கை இருண்டுவிடுகின்றது.
மேலும் விஷக்கிருமிகள்
நம் வீடியோ கால் சேவை இடையே நுழைந்து நாம் நம் உறவுகளிடம் பரிமாறி கொள்ளும்
அனைத்தையும் பதிவு செய்து ஆபாச இணையதளத்தில் விற்றுவிடுகின்றன. இவற்றில் இருந்து
நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது? என்று பார்ப்போம். முதலில் பொது இடங்களில் உள்ள
இலவச வை-பையை பயன்படுத்தி வீடியோ கால் செய்யாதீர்கள்.
அது மிகவும் ஆபத்தானது.
பெண்கள் அறிமுகம் இல்லாத யாரையும் நம்பி வீடியோ காலில் பேச வேண்டாம். இதனால் பல
பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாட்ஸ்-அப்பில் யாராவது ஏதேனும் லிங்க் அனுப்பினால் அதை
கிளிக் செய்துவிடாதீர்கள். ஏனென்றால் அந்த லிங்க் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருட
மற்றும் உங்களை உளவு பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு ஏதேனும் லிங்க்
வந்தால் பாதுகாப்பானதா? என்று உறுதி செய்த பிறகே செல்லுங்கள். வீடியோ கால்
பேசும்போது சற்று கவனத்துடன் பேசுங்கள் எதை பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அதை மட்டுமே
பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் தனிமையில் இருப்பவற்றை யாருடனும் வீடியோ காலில்
பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது பல பிரச்சினைக்கு வழிவகுக்கும். இந்த நவீன உலகில்
நாம் அடிப்படையான கல்வி அறிவு பெற்றுவிட்டோம், ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும்
தொழில்நுட்பங்களில் இருக்கும் சில முக்கியமான நுணுக்கங்களை கற்றுக்கொள்ள
மறந்துவிட்டோம்.
நம் சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை விட அவர்களை
அவதூறாக பேசும் மக்கள் தரும் வலிகளே அதிகம். அந்த வலியே ஒரு பெண்ணை தற்கொலை செய்ய
வைக்கிறது. எனவே மக்கள் ஓர் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ வைத்து ஒரு பெண்ணை
அவதூறாக பேசிவிடாமல், அந்த வீடியோவுக்கு பின்னால் இருக்கும் பெண்ணின் வலியையும்,
வாழ்க்கையையும் பற்றி சிந்திக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...