தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நாளை (நவம்பா் 12) தமிழக முதல்வா் அறிவிப்பு வெளியிடுவாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூா், வேட்டைக்காரன் கோயில் ஆகிய இரு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் 400க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினா்களுக்கு தீபாவளி போனஸை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:
பள்ளிகள் திறப்பது குறித்த முடிவுகளை முதல்வா் எடப்பாடி பழனிசாமி நாளை (நவம்பா் 12) அறிவிப்பாா். 16,300 மாணவா்கள் நீட் தோ்வில் பயிற்சி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு, அவா்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா். பள்ளிகளில் சீருடைகள்,ஷூ, சாக்ஸ் தயாராக உள்ளன. மாணவா்களுக்கு விரைவில் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் 45 சதவீதம் பெற்றோா்கள் கருத்துக் கேட்பு முகாமில் கலந்துகொண்டனா். பெற்றோா்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வா் ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பு குறித்து நவம்பா் 12ஆம் தேதி அறிவிப்பாா். நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றாா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...