தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (NCTE) 50வது பொதுக்குழு சமீபத்தில் கூட்டப்பட்டது. இதில், ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்பு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், அந்தச் சான்றிதழை வைத்து 7 ஆண்டுகள் வரை பணிவாய்ப்பு பெறலாம் என்ற விதிமுறை இருந்தது. தற்போது, இச்சான்றிதழை வாழ்நாள் முழுக்க, பணி வாய்ப்புக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலின் துணைச் செயலாளர் அனில்குமார் ஷர்மா வெளியிட்டார். இதை பின்பற்றி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் (TTEU) அக்டோபர் 21ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசின் சுற்றறிக்கையை மேற்கோள்காட்டி, மாணவர்களை டெட் தேர்வு எழுத ஊக்கப்படுத்தும்படி அதில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இனிமேல் டெட் தேர்வு எழுதுவோர் மட்டுமே இச்சலுகை பெற முடியும் என விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதுதான் பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கடந்த ஆண்டுகளில் டெட் தேர்வு எழுதி வேலைக்காகக் காத்திருக்கும், லட்சக்கணக்கான பட்டதாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
டெட் தேர்வும் பின்னணியும்
கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம் (RTE) 2009ன் படி, தொடக்க, நடுநிலை வகுப்புகளுக்கு கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவோரின் தகுதியை நிர்ணயிக்க, ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என, கடந்த 2010 ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இத்தேர்வில் வெற்றி பெற்றால், வழங்கப்படும் தகுதி சான்றிதழ், ஏழு ஆண்டுகள் செல்லத்தக்கதாகும். இக்காலக்கெடுவுக்கு பணி வாய்ப்பு பெறாதவர்கள் மீண்டும், டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த டெட் தேர்வை முதலில் எதிர்த்த தமிழக அரசு பின்பு, 2011, நவம்பர் 15ஆம் தேதி ஏற்றுக் கொண்டு அதற்கான அரசாணையை வெளியிட்டது. இதன்படி, 2012ல் முதல் டெட் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடக்கும் இத்தேர்வில், 90 மதிப்பெண்கள் பெறுவோர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், 2013க்கு பிறகு, வெயிட்டேஜ் முறை அமல்படுத்தப்பட்டது.
இதில், டெட் தேர்வு மதிப்பெண்கள் 60 சதவீதமாகவும், பள்ளி, கல்லுாரிகளில் பெற்ற மதிப்பெண்கள் 40 சதவீதம் என்ற அடிப்படையிலும் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதோடு, டெட் தேர்வில் தேர்ச்சிக்கான 90 மதிப்பெண்களில், 5 சதவீத தளர்வு வழங்கப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பாட திட்டம் தாமதமானதாக குற்றச்சாட்டு - உண்மை என்ன?நீட் தேர்வில் சாதித்த ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகன் – சாத்தியமானது எப்படி?
ஆனால் இந்த முறையில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இதையடுத்து 2018 ஜூலை மாதம் முதல் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக, அரசுப்பணியில் சேர, டெட் தேர்வுடன், மீண்டும் ஒரு போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற புதிய முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற குழப்பங்களால், ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட டெட் தேர்வு, தற்போது வரை 2013, 2017, 2019ல் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. இதில், 2013ல் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற 94 ஆயிரம் பேரில், 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 80 ஆயிரம் பேர், ஏழு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். டெட்டில் தேர்ச்சி பெற்று ஏழாண்டுகள் முடியப்போவதால் இவர்களின் தகுதிச் சான்றிதழ் காலவதியாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
இதற்குப் பிறகு வைக்கப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கும் பணிவாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, டெட் தேர்வு அறிவித்தது முதல், தேர்வெழுதிய அனைவருக்கும், தகுதிச் சான்றிதழ் கால அளவை, வாழ்நாள் முழுக்க நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கையை டெட் தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி கிடைக்காதவர்கள் எழுப்புகிறார்கள்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
தமிழ்நாடு அரசு சில காலம் கடைப்பிடித்த 'வெயிட்டேஜ்' முறையால் பாதிக்கப்பட்ட பலர் தங்களுக்கு நிவாரணம் வேண்டுமென்கிறார்கள். கிருஷ்ணகிரியை சேர்ந்த சக்திவேல் 2013லேயே 150க்கு 93 மதிப்பெண்களைப் பெற்று டெட் தேர்வில் தேர்ச்சிபெற்றுவிட்டார். பிறகு வெயிட்டேஜ் முறை அறிமுகப் படுத்தப்பட்டதையடுத்து, தரவரிசை பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டார்.
"இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை சென்றும் எனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. பின்பு தமிழக அரசே, கடந்த 2018ல் 'வெயிட்டேஜ்' முறையை ரத்துசெய்தது. இம்முறையை நடுவில் கடைபிடிக்காமல் இருந்திருந்தால், பலர் 2013ம் ஆண்டிலேயே அரசுப் பணிக்கு சென்றிருப்போம். புதுச்சேரி, கேரளாவில், டெட் மதிப்பெண்களுடன் வேலைவாய்ப்பு பதிவு மூப்பையும் சேர்த்து பணிவாய்ப்பு வழங்கப்படுகிறது. தமிழக அரசும் இம்முறையை பின்பற்றலாம். இதோடு, டெட் தேர்வு துவங்கியது முதல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், தகுதிக் காலத்தை வாழ்நாள் முழுக்க நீட்டிக்க வேண்டும்'' என்கிறார்.
தான் நடத்தும் தகுதித் தேர்வை நம்பாமல் மீண்டும் ஒரு தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்துவது குறித்தும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். "தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கலாம். ஆனால், அரசே நடத்திய டெட் தேர்வில் வெற்றிபெற்றாலும், மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. முறையாக காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளிட்டு மூப்பு அடிப்படையில், டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டில் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆசிரியர் - மாணவர் விகிதத்தைக் கணக்கிட்டு, காலியிடங்களை நிரப்ப வேண்டும்" என்கிறார் கல்வியாளர் சங்கமம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சதீஷ்குமார்.
தமிழ்நாடு அரசின் ஆசிரியர் பணியில் சேர, பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 40 வயதும் பிற பிரிவினருக்கு 45 வயதும் நிர்ணயித்து சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 20 சதவீதம் பேருக்கு, இந்த வயது வரம்பு தாண்டிவிட்டது. மேலும், ஆறு ஆண்டுகளாக புதிய நியமனங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான் டெட் தேர்ச்சி சான்றிதழை வாழ்நாள் தகுதியுள்ளதாக்க வேண்டுமென எழுந்திருக்கிறது..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...