மாணவிகளே தன்னெழுச்சியாக கற்பித்தல் பயிற்சிபெற்று, ஆசிரியைகளுக்கு இணை யாகப் பாடமெடுக்கும் திட்டம், மதுரை புதூர் லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வகுப்பறையில் பாடமெடுக்கும் ஆசிரியர்கள் போல மாணவர்களே பிற மாணவர்களுக்கு பாடமெடுக்கும் முன்மாதிரி பயிற்சித் திட்டம் ஜூனியர் ஐஏஎஸ் அகாடமி, புதூர் லூர்தன்னை பள்ளி நிர்வாகம் ஆகியவை இணைந்து கரோனா காலத்தில் 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவிகள் 12 பேர் கொண்ட குழுவுக்கு இணையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜூனியர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் அகஸ்திய பாரதி வழிகாட்டுதலுடன், பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.சகாயமேரி மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்களை போன்று பாடக் குறிப்பு எடுத்தல், ஒரு பொருளின் அனைத்து தகவல்களையும் திரட்டுதல், அதற்கான உதாரணங்களை மாதிரி படமாக காட்டி விளக்குதல் என ஆசிரியர்களே வியக்கும் வகையில் இம்மாணவியர் பாடம் எடுக்கின்றனர். இவர்கள் மூலம் மதுரையிலுள்ள அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களை அப்பள்ளி ஆசிரியை சேவியர் செல்வி ஒருங்கிணைத்து செயல்படுகிறார்.
இதுகுறித்து அகஸ்திய பாரதி கூறுகையில், இப்பயிற்சியால் சக மாணவர்கள் பயன் அடைகின்றனர். தேவைப்படும் பள்ளிகளுக்கும் இப் பயிற்சியை அளிக்கத் தயாராக உள்ளோம் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...