தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ்37,431 அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில் 48லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.30 லட்சம்ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே, தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும்.ஆனால், இந்த கல்வி ஆண்டில் கரோனாபரவல், நீதிமன்ற வழக்குகளால் கலந்தாய்வு நடைபெறுவதில் தாமதமானது.
இந்நிலையில், பணி ஓய்வு, பதவி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தமிழகம்முழுவதும் 950-க்கும் அதிகமான அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அப்பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் தொடக்கத்தில்தான் மாணவர் சேர்க்கை தொடங்கி நிர்வாகப் பணிகள் அதிக அளவில் இருக்கும். பெற்றோர் ஆசிரியர் கழகம், மேலாண்மைக் குழுக்கள் மூலம் தேவையான நிதி ஆதாரங்களை சேகரித்து பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அரசின் நிதியுதவிக்கான ஆவணங்களை தயார் செய்தல் போன்ற பணிகளையும் கவனிக்க வேண்டும்.
பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு முழு அதிகாரம் இல்லாததால் அவர்கள்முழுமையாக நிர்வாகம் செய்ய இயலாது. தலைமை ஆசிரியர் கையொப்பம் இல்லாமல் பள்ளி வங்கிக் கணக்கில் இருந்து நிதியை எடுப்பதில்கூட பல சிரமங்கள் உள்ளன. ஒவ்வொரு முறையும் மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும். இதனால் கட்டுமானம், பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் இப்போதுதான் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதைத் தக்கவைக்க பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம். பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வதற்கான அவகாசம் குறைவாகவே உள்ளது. இந்த சூழலில், தலைமை ஆசிரியர் இல்லாமல் இருப்பது கற்பித்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நீதிமன்ற வழக்குகளை முடித்து கலந்தாய்வை அரசு விரைவாக நடத்தி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து, தகுதியானவர்கள் பட்டியலும் தயாரானது. ஆனால், பட்டதாரி ஆசிரியரில் இருந்து பதவி உயர்வில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள் மற்றும் நேரடியாக முதுநிலை ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் என இரு தரப்பினரும் முன்னுரிமை கோருகின்றனர்.
இதுதொடர்பாக சிலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளதால் கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது. இவை விரைவில் சரிசெய்யப்பட்டு, இம்மாதத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும்’’ என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...