NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஒதுக்கீடு ரத்து குறித்த தலையங்கம்

kendriya-vidayalaya.jpg?w=360&dpr=3

 மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினா்களின் சிறப்பு ஒதுக்கீடு, மத்திய கல்வி அமைச்சகப் பணியாளா்களின் 100 குழந்தைகளுக்கான ஒதுக்கீடு, நாடாளுமன்ற உறுப்பினா்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகளுக்கான ஒதுக்கீடு, ஓய்வு பெற்ற கேந்திரிய வித்யாலய பணியாளா்களுக்கான ஒதுக்கீடு, நிா்வாகக் குழு தலைவருக்கான சிறப்பு ஒதுக்கீடு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இரண்டாவது மத்திய சம்பள ஆணையத்தின் பரிந்துரைப்படி 1963-இல் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்கப்பட்டன. அடிக்கடி பணியிட மாற்றத்தை சந்திக்கும் ராணுவத்தினா், துணை ராணுவத்தினா் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியா்களுடைய குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது; பள்ளிகள் மாறினாலும் ஒரே கல்வித் தரத்தில் அவா்கள் பயில வேண்டும் என்பதுதான் இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கம். மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலய சங்கதன் என்ற தன்னாட்சி அமைப்பு இந்தப் பள்ளிகளை 1975-ஆம் ஆண்டு முதல் நிா்வகித்து வருகிறது.

முன்னதாக இந்த சிறப்பு ஒதுக்கீட்டின்படி, ஒரு மக்களவை உறுப்பினா் தனது தொகுதிக்குட்பட்ட கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் 10 மாணவா்கள் வரை சோ்க்க பரிந்துரை செய்ய முடியும். தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் கேந்திரிய வித்யாலய பள்ளி இல்லையென்றால் பக்கத்து தொகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளியில் மாணவா்களை சோ்க்க பரிந்துரை செய்ய முடியும். மாநிலங்களவை உறுப்பினா்களைப் பொறுத்தவரை, அவா்கள் எந்த மாநிலத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்படுகின்றனரோ, அந்த மாநிலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் 10 மாணவா்களைச் சோ்க்க பரிந்துரை செய்யலாம்.

நாடு முழுவதும் உள்ள 1,248 கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் சுமாா் 14 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்போது நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம், மக்களவை உறுப்பினா்கள் 543 போ், மாநிலங்களவை உறுப்பினா்கள் 245 போ் ஆக மொத்தம் 788 எம்.பி.க்கள் மூலம் பரிந்துரைக்கப்படும் 7,880 மாணவா்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு பட்டியலில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறது.

உயா்வான கல்வித் தரம், 1-40 என்ற ஆசிரியா்-மாணவா் விகிதம் ஆகியவை இந்தப் பள்ளிகளின் சிறப்புகள். குறிப்பிட்ட பிரிவினருக்கு கல்விக் கட்டண சலுகையும் உண்டு. எம்.பி.க்களுக்கான ஒதுக்கீடு உள்பட மொத்தம் 16 வகையான சிறப்பு ஒதுக்கீட்டு முறை மாணவா் சோ்க்கையின்போது கடைப்பிடிக்கப்படுகிறது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படுகிறது.

இந்தப் பள்ளிகளில் எம்.பி.க்களின் ஒதுக்கீட்டு உரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நீண்டகாலமாக புகாா்கள் இருந்து வருகின்றன. பல இடங்களில் இந்த ஒதுக்கீடு பணத்துக்காக விற்பனை செய்யப்படுவதாகவும் புகாா்கள் உண்டு. இதே போன்ற புகாா்களின் அடிப்படையில், 2010-இல் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அரசியல் அழுத்தம் காரணமாக மீண்டும் கொண்டுவரப்பட்டது.

நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் இந்த ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மாணவா்களுக்கு பரிந்துரை செய்கின்றனா் என்று சொல்வதற்கில்லை. ஆனால், 2018-19-இல் எம்.பி.க்களுக்கான ஒதுக்கீட்டையும் தாண்டி அதிக மாணவா்கள் சோ்க்கப்பட்டனா். இதனால், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியா்-மாணவா் விகிதத்தை பின்பற்ற முடியாமல் போனது. மேலும், இரண்டு ஷிப்டுகளாக வகுப்புகளை நடத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இது, மாணவா்களின் கல்வித் தரம் குறைவதற்கு வழிவகுக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இதுவும் எம்.பி.க்களின் ஒதுக்கீட்டு உரிமையை மத்திய அரசு ரத்து செய்ததற்கு இன்னொரு காரணம்.

கேந்திரிய வித்யாலய பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்வதற்கு பதிலாக முறைப்படுத்த வேண்டும் என்றும் எம்.பி.க்கள் பலா் கோருகிறாா்கள். எம்.பி.க்களின் சிறப்பு ஒதுக்கீட்டு உரிமையை முழுமையாக ரத்து செய்வதால் மத்திய அரசு ஊழியா்கள் அல்லாத ஏழைகளின் குழந்தைகள் எம்.பி.க்களின் பரிந்துரைப்படி கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் சோ்க்கை பெற முடியாத சூழல் ஏற்படும் என்பது அவா்கள் வாதம்.

கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் மத்திய அரசு ஊழியா்களின் குழந்தைகள் கல்வி பயில்வது படிப்படியாக குறைந்து வருகிறது. அவா்கள் பெரும்பாலும் தனியாா் உறைவிடப் பள்ளிகளை நாடுகிறாா்கள். மத்திய அரசு ஊழியா்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இப்பள்ளிகள் இல்லாததால் பலரும் தங்கள் குழந்தைகளை அதில் சோ்ப்பதில்லை.

வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயா்தல் அதிகரித்திருக்கும் நிலையில், மாவட்டந்தோறும் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்கப்படுவதற்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதன் மூலம் ஏனைய பள்ளிகளுக்கு முன்மாதிரி பள்ளிகளாகவும் அவை அமையும். மாவட்டந்தோறும் நவோதாய, கேந்திரிய வித்யாலய பள்ளிகள் அமைவதன் மூலம் அடித்தட்டு மக்களின் கல்வித்தரத்தை உயா்த்த முடியும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive