வெவ்வேறு இடங்களில் இருப்பதால் வீண் அலைச்சல், குழப்பம் - திருச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வளாகம் அமைக்கப்படுமா?

திருச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், தொடக்க, இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசு தேர்வுகள் இயக்க உதவி இயக்குநர் அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம் போன்றவற்றை ஒருங்கிணைத்து பள்ளிக் கல்வி வளாகம் அமைக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 1,111 அரசுப் பள்ளிகளும், 5 மாநகராட்சி பள்ளிகளும், 48 நகராட்சி பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 பள்ளியும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 100 பள்ளிகளும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 30 பள்ளிகளும், அரசு உதவி பெறும் 317 பள்ளிகளும், பகுதி உதவி பெறும் 41 பள்ளிகளும், 3 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும், 244 சுயநிதி பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, 140 மெட்ரிக் பள்ளிகள், 62 சிபிஎஸ்இ பள்ளிகள், 4 ஐசிஎஸ்இ பள்ளிகளும் இம்மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. 

தனி கட்டிட வசதி இல்லை: இவற்றை நிர்வகிப்பதற்காக பள்ளிக்கல்வி துறை சார்பில் பல்வேறு பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கு முறைப்படி கட்டிட வசதி செய்து கொடுக்காததால் தற்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சையது முர்துசா பள்ளி வளாகத்திலுள்ள பெற்றோர், ஆசியர்கள் கழக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும், இங்கு ஒருங்கிணைந்த கல்விக்கான (சமர சிக்ஷா) மாவட்ட உதவி திட்ட அலுவலர் அலுவலகம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம், வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் போன்றவையும் இதே பள்ளியில் செயல்பட்டு வருகின்றன.

இது தவிர தொடக்கக் கல்விக்கான மாவட்டக் கல்வி அலுவலகம் மன்னார்புரம் செங்குளம் காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், இடைநிலைக் கல்விக்கான மாவட்ட கல்வி அலுவலகம் பழைய ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகம் தென்னூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், அரசு தேர்வுகள் இயக்க உதவி இயக்குநர் அலுவலகம் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு கட்டிடத்திலும், திருச்சி மாநகரத்துக்கான வட்டாரக் கல்வி அலுவலகம் உறையூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், திருச்சி மேற்கு வட்டாரத்துக்கான கல்வி அலுவலகம் சுப்பிரமணியபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், வட்டார வள மைய அலுவலகம் உறையூர் பாண்டமங்கலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும் செயல்பட்டு வருகின்றன.

பணியாளர்களுக்கு அலைச்சல்: இந்த அலுவலகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருப்பதால், அவற்றை நாடிச் செல்லும் பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த குழப்பம் ஏற்படுகிறது. மேலும் கல்வி சார்ந்த பணிகளுக்காக செல்லக்கூடிய ஆசிரியர்களுக்கும் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பள்ளிக் கல்வி சார்ந்த அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமையும் வகையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வளாகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் சங்க மாநில இணைச் செயலாளர் சிவக்குமரன் கூறும்போது, “இந்த அலுவலகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருப்பதால் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இருப்பதுபோல திருச்சியிலும் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைக்க வேண்டும்’’ என்றார்.

500 பேருக்கான கூட்டரங்கம்: இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாநகரத் தலைவர் கே.எஸ்.ஜீவானந்தன் கூறும்போது, ‘‘சில ஆண்டுகளுக்கு முன் உருவான மாவட்டங்களில்கூட பள்ளிக் கல்வி தொடர்பான அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக கருதப்படும் திருச்சியில் ஒவ்வொரு அலுவலகமும் ஒவ்வொரு இடத்தில் உள்ளதால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது.

மேலும் ஆசிரியர்களுக்கான பயிற்சி கூட்டங்கள், மாணவர்களுக்கான கலை விழாக்களை நடத்துவதற்கு ஒவ்வொருமுறையும் தனியார் பள்ளிகளிடம் அரங்கங்களைக் கேட்டுப்பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே, பள்ளிக் கல்வி சார்ந்த அனைத்து அலுவலகங்கள், 500 ஆசிரியர்கள் அமரும் வகையிலான காணொளி காட்சி வசதியுடன்கூடிய கூட்ட அரங்கம் போன்றவற்றை ஒருங்கிணைத்து கல்வி வளாகம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருப்பதால், நிச்சயம் அவரது காலத்தில் இப்பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: இது குறித்து திருச்சி மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, “திருச்சிக்கு ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தின் தேவை இருப்பதால், இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive