நாட்டில் உள்ள, 25 மண்டலங்கள் மற்றும் வெளிநாடுகள் என, 1,287 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்குகின்றன. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த பள்ளிகளில், 1.36 கோடி மாணவர்கள் பயில்கின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக, இந்த பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது, புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஒப்பந்த அடிப்படையில், 11 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அதிலும், பல பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதனால், இந்த பள்ளிகளில் பயிலும், மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, கே.வி., பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
மத்திய கல்வித் துறை கீழ் இயங்கும் கே.வி., பள்ளிகள் மட்டுமின்றி, ஜவஹர் நவோதயா பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இது தற்போது, 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது, நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பள்ளிகளிலும், 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், மாநில அரசு பள்ளிகள், சுயநிதி பள்ளிகளும் அடங்கும்.
சமீபத்தில், டில்லியில் நடந்த கல்வி அமைச்சக கருத்துகேட்பு கூட்டத்தில், மத்திய அரசு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து விவரிக்கப்பட்டது. புதிய கல்வி கொள்கை, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அம்சங்களை பின்பற்றி, இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளதால், தாமதம் ஆவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அடுத்த கல்வியாண்டுக்குள், காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாகவும், அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...