அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம், மகிழ் முற்றம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்றங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மேலும், 'லெவல் அப்', 'திறன்', 'ஸ்லாஸ்' போன்ற கற்றல் அடைவு சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. அதோடு, வினாடி-வினா, சிறார் திரைப்படம், இணையதளப் பயன்பாடு விழிப்புணர்வுக்கான 'அகல்விளக்கு' ஆகியவற்றையும் செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் தலைமையில் 5 முதல் 6 மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மன்ற செயல்பாடுகளுக்காக வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த நேரத்தில் அனைத்து செயல்பாடுகளையும் முழுமையாக நிறைவு செய்ய முடிவதில்லை.
மேலும், மாணவர்களின் கற்றல் அடைவு மற்றும் மன்ற செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பாட வகுப்புகளை நடத்த முடியாத சூழல் உருவாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'வெளியிடப்படும் அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கே அதிக நேரம் செல்கிறது. இதனால் பாடங்களை முழுமையாக எடுக்க முடியவில்லை. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால், அறிவிப்புகளை செயல்படுத்தவும், பாடங்களை நடத்தவும் முடியும். இல்லையெனில் செயல்பாட்டில் தொய்வு ஏற்படும். மாணவர்களின் நலனுக்காக புதிய அறிவிப்புகளை வெளியிடும் அதேசமயம், போதியளவில் ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்' என தெரிவித்தனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...