அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு தயாராகு’ (Future Ready) எனும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாதம்தோறும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு சார்ந்த பாடங்களில் மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் படித்த பாடப் பொருட்களை ஒட்டி உயர் சிந்தனை வினாக்களை வடிவமைக்கும் பணி எஸ்சிஇஆர்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஆங்கிலப் பாடத்தில் பத்திகள் வாசித்தல் மற்றும் இலக்கணம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் சிந்தனை திறனை மேம்படுத்தும் வினாக்கள் ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பப்படும். அதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கும், பொது அறிவு வினாக்களை வகுப்பு ஆசிரியருக்கும் தரவேண்டும். இந்த வினாக்களைக் கொண்டு மாதம்தோறும் மாணவர்களிடம் மதிப்பீடு நடத்த வேண்டும். இதை தலைமை ஆசிரியர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.
இதன்மூலம் திறன் அடிப்படையிலான கேள்விகளில் மாணவர்கள் நிபுணத்துவம் பெறுவதுடன், பல்வேறு அடைவுத் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். பாடங்களை மாணவர்கள் நன்கு புரிந்து படிக்கவும் வழிசெய்யும். ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார, மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பொறுப்பு அலுவலர்கள் தங்கள் பள்ளி ஆய்வின்போது இந்த செயல்பாடுகளின் நிலை குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாட வேண்டும். கலந்தாய்வுக் கூட்டங்களின் போதும் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலங்களில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எழுத இது உதவிகரமாக இருக்கும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தெரிவித்தனர்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...