Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெல்ல வேண்டியது வீராப்பா? கோரிக்கையா?

220529 
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது ஆசிரியர் சமூகத்திற்கு இன்று சாலப் பொருத்தம். பள்ளிக் கல்வித்துறையில் அண்மைக்காலமாக மலிந்து காணப்படும் பல்வேறு குளறுபடிகள், ஊதிய இழப்புகள், நம்பிக்கையின்மை பேச்சுகள், விரக்தி மனநிலைகள், முரட்டுத்தனமான எதிர்ப்புகள், அவதூறுகள், தலைமைக்குக் கட்டுப்படாத தான்தோன்றித்தனங்கள் என இப்படிக் கூறிக்கொண்டே போக முடியும். 

குதிரையை விட்டுவிட்டு லாயத்தைப் பூட்டுவதால் பயனுண்டோ? எல்லாவிதமான செயத் தகா செயல்களை வேண்டுமென்றே செய்து விட்டு கடைசியில் ஆப்பசைத்த குரங்கு போன்று அல்லல் படுவதே வேலையாகிப் போய்விட்டது. இது மிகையல்ல. உண்மை.  

இது தேர்தல் காலம். அதேவேளையில் போராட்டக் காலமும் கூட. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விடாப்பிடியான முரண்டு பிடிக்கும் தொடர் போர். எப்படியாவது அன்று ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டும் என்ற அரசியல் நெருக்கடியில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத, குறுகிய, தன்னலமிக்க கோரிக்கையை முன்வைத்து போராடிய போராட்டக்காரர்கள் மத்தியில் நியாயத்தின் சாத்தியக்கூறுகள் பற்றி கிஞ்சிற்றும் ஆராயாமல் நேரடியாக ஒவ்வொரு போராட்டக் களத்திற்கும் சென்று வாரியிறைத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வழியின்றி தற்போது விழிபிதுங்கித் தவித்து வருவது கண்கூடு.

இந்நிலையில், இன்றைய முக்கிய எதிர்க்கட்சிகள் எதுவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எந்தவொரு உறுதிமொழியோ அல்லது பொய்யான போலியான வாக்குறுதி எதையும் தப்பித்தவறி முனகியதாகக் கூட காணக் கிடைக்கவில்லை. அப்படியும் ஓரிரு கட்சிகள் எதிரிக்கு எதிரி நண்பர்கள் என்பது போல நேசக்கரம் நீட்டியதில் யாதொரு பலனும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில், அவர்களால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாத நிலை. அதாவது அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும் எனக் கருதும் மனோபாவம் உலைக்கு ஒருபோதும் அரிசியாகாது.

ஆற்றிடம் கோபித்துக் கொண்டு அழுக்கைக் கழுவாமல் போனால் யாருக்கு நட்டம் என்பதை உணரும் தருணம் இது. எல்லாவற்றிற்கும் நீதிமன்றம் படியேறுதல் என்பதும் அதன்மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுத்தல் என்பது ஒருநாளும் நல்லதொரு நிறைவேற்றத்தக்க வெற்றிகரமான தீர்வாக அமையாது. நியாயத்திற்கு புறம்பாகப் பெற மற்றும் பெறப்பட்டவற்றிற்கு நியாயம் கேட்பதில் என்னவகை நியாயம் இருக்க முடியும் என்று தெரியவில்லை. முன்வைக்கும் அத்தனைக் கோரிக்கைகளையும் இறுதியாக நிறைவேற்றும் இடத்தில் மக்கள் மன்றம் தான் உள்ளது என்பதை ஆத்திரத்தில் புத்தி மழுங்கி மறந்துவிடக் கூடாது.

அரசிடம் வாதாடிப் பெறுவதைத் தான் முன்னத்தி ஏர்கள் வழக்கமாக்கி வைத்திருந்தார்கள். வேறெந்த துறைகளிலும் இல்லாத அளவிற்கு இங்கு தான் வழக்குகள் குவிந்துள்ளன. அதன் காரணமாக ஆசிரியர் பெருமக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பல சலுகைகள் கிணற்றில் போடப்பட்ட பாறாங்கற்களாகக் கிடக்கின்றன. அவ்வளவு அவசரம். எதுவாக இருப்பினும் அரசு மனம் வைத்தால் தான் எதுவும் இங்கு சாத்தியம். இது சத்தியம். அதைவிடுத்து வீண் முரண்டு பிடிப்பதால் நட்டம் அரசுக்கு இல்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கே!

அதுபோல், இயக்கப் பற்றும் தலைமைக்குக் கட்டுப்படுதல் மற்றும் கீழ்ப்படிதல் என்பன ஒவ்வொரு ஊழியர் கடமையாகும். அது தற்போது காற்றில் பறக்கும் நிலைக்கு ஆளானது வேதனைக்குரியது. அவர்கள் மீதான வரைமுறையற்ற பேச்சுகளும் ஏச்சுகளும் மட்டுமல்லாமல் அநாகரிக, சுடு சொற்களும் அவமரியாதை ஒருமையில் சபிக்கப்படும் வசவுகளும் மலிந்து போனது காலத்தின் கொடுமை! ஒரு மாநில தலைமையை மாடு மேய்க்கும் நபரை விட கீழாக நடத்துதல் என்பது ஏற்க இயலாத ஒன்று. நடக்கும் தவறுகளுக்குக் காரணங்களை ஆராய வேண்டுமேயொழிய நபர்களைப் பலி ஆடுகள் ஆக்குதல் கூடாது.

இயக்கத்தில் தனித்தன்மை; ஒருங்கிணைப்பில் தோழமை என்பது ஓர் இயக்கவாதியின் வெற்றியின் தாரக மந்திரம் ஆகும். இயக்கத்திற்குள் தனிக்குடித்தனமும் தோழமைக்கு மாற்றாக நரித்தனமும் மேலோங்கிக் கோலோச்சும் காலத்தில் எதைச் சாதிக்க இயலும்? தற்கால போராட்டத்தில் பொதுநலம் கானல் நீராக மாறி சுயநலம் காட்டாறாகப் பாயும் சூழலில் எதை வென்றெடுக்க முடியும்? சமூக ஊடகங்கள் முழுவதும் வீர உணர்ச்சிக்கு மாற்றாக ஒரே ஒப்பாரி! 

முன்பெல்லாம் போராட்டக் களத்திற்கு செல்லும் போராளிகளின் கைப்பையில் எப்போதும் ஒரு மாற்று உடை இருக்கும். நவீன போராளிகளிடம் நல்ல விலையுயர்ந்த கைப்பேசி மட்டுமே இருப்பது சாபக்கேடு. இயக்கங்களின் ஆகப் பெரும் பின்னடைவிற்கு அதுவே முழுமுதற் காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இழப்பதற்கு எதுவுமில்லை என்று கூப்பாடு போட்டுக் கொண்டே இருக்கின்ற சிலவற்றையும் இழப்பது என்பது அறிவுடைமை ஆகாது. 

போருக்குப் போகும் ஒவ்வொரு சிறந்த வீரனும் தம் வாளோடு தமக்கான தடுப்புக் கவசத்தையும் கூடவே கட்டாயம் எடுத்துப் போவான். கால் முன்னோக்கி அடி வைத்தாலும் புத்தி பின் விளைவுகள் குறித்து ஆராய்வதும் அதன்படி முன்னேறுவதும் கூடவே நிகழ்வது நல்லது. பேச வாய் இருக்கிறது, தடித்த வார்த்தைகள் இருக்கின்றன என்பதற்காக எதை வேண்டுமானாலும் கொப்பளித்துத் துப்பி விடலாம் என்று எண்ணுவது பேதைமை. 

பங்களிப்பு ஓய்வூதியம் இருந்த வரை பழைய ஓய்வூதியம் வேண்டும் என்றார்கள். உறுதியளிப்பு ஓய்வூதியம் அறிவிக்கப்பட்ட பின்னர் பங்களிப்பு ஓய்வூதியமே சிறந்தது என்று கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அதற்காக அரசை வசைபாடுவதும் நன்றி அறிவிப்பை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதும் ஒருபோதும் சரியாகாது. ஆட்சியாளர்களுக்குத் தோல்வியைப் பரிசளித்து வேண்டுமானால் ஓர் ஐந்து ஆண்டுகள் மட்டும் தான் உட்கார வைக்க முடியும். அதேவேளையில், எந்தவொரு கோரிக்கையும் நிறைவேறாமல் பணிநிறைவு காலத்திற்குப் பின்னும் துன்பப்பட போவது யார் என்பதை முடிவு செய்ய வேண்டியதும் அவசியம்.

இரு தரப்புக்கும் இடையே எப்போதும் இணக்கம் இருப்பது என்பது இன்றியமையாதது. அப்போதுதான் புதிய கோரிக்கைகளை வெல்லவோ, பழையவற்றைத் திருத்தியமைக்கவோ, ஒழுங்குபடுத்தவோ இயலும். அவ்வாறின்றி எதிரி மனப்பான்மையோடு வெறுமனே முரண்டு பிடித்துக் கொண்டே இருந்தால் நட்டம் அரசுக்கு அல்ல என்பதை ஆழ நினைவில் கொள்வதும் தேவை. ஒன்றை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம். இங்கு யாரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஒன்று விடாமல் நிறைவேற்றித் தருவதற்கு அடித்துப் பிடித்துக் கொண்டு நிற்கவில்லை. 

இந்த நிலையில் மூத்தோர் சொல்லும் செயலும் முதிர்ச்சியானது என்பதைப் புரிந்து நடப்பது என்பது அவசியமாகிறது. இஃது ஒரு தொடர் ஓட்டம் போன்றது. எப்போதும் முன்னத்தி ஏர்களை மதிப்பதும் அவர்தம் தியாகங்களைப் போற்றுவதும் இன்றியமையாதது என்பதை உணராமல் அவர்களையும் விட்டு வைக்காமல் வசவு பாடுவதும் கடுஞ்சொற்கள் மொழிவதும் தூற்றுவதும் இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பொய் பரப்புரை செய்ததும் என்பது எதிர்வரும் காலங்களில் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. 

அரசையும் முதல்வரையும் துறை சார்ந்த அமைச்சர் பெருமக்களையும் மிகவும் துச்சமாக நினைத்துப் பல்வேறு பதிவுகள் பதிவிடுவது என்பது ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக அமையாது. தாம் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் அதிகாரம் அவர்களுக்கே உண்டு. யார் யாரை இங்கு மிரட்டுவது? வெறுங்கை வீரம் வெற்றியைத் தேடித் தந்து விடுமா என்ன?செயல்படுத்துபவர்களை முழுவதுமாகப் பகைத்துக் கொண்டு கோரிக்கைகளை யாரிடம் போய் கேட்பது? அதிகாரத்தாலும் அவமதிப்பாலும் சரி ஒருக்காலும் ஒரு புல் பூண்டைக் கூட முளைக்க வைக்க முடியாது என்பதை பாதிக்கப்பட்ட தரப்பு இங்கு புரிந்து கொள்வது நல்லது.

நன்றி அறிவிப்பு என்பது கிடைத்தத்தற்கானது மட்டுமல்ல. இனி மேற்கொண்டு கிடைக்கப் போவதற்கும் என்பதைப் புரிந்து கொள்ளல் அவசியம். அதைவிடுத்து குய்யோ முறையோ என்று ஓலமிடுவதும் எகத்தாளமிடுவதும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிப்பதும் கலந்து கொள்வோரை இழிவாக நினைப்பதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைப் புழுதி வாரித் தூற்றுவதும் என்பன அருவருக்கத்தக்க செய்கைகள் ஆகும். இதனால் ஏற்பட இருக்கும் இழப்புகள் யாருக்கு என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டியது அவசர அவசியமான ஒன்று.

நடந்தவற்றை மறந்தும் கடந்தும் நல்லனவற்றை நினைந்தும் ஒருங்கிணைந்தும் செயல்படுவது ஒன்றே ஆகச் சிறந்ததொரு தீர்வாக அமையும். தாம் வெல்வது முக்கியமா? தம் கோரிக்கைகள் வெல்வது முக்கியமா? என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தாம் முடிவெடுக்க வேண்டும். 

எழுத்தாளர் மணி கணேசன்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive