Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TAPS ஆடும் மங்காத்தா! - செல்வ.ரஞ்சித் குமார்

TAPS

 TAPS ஆடும் மங்காத்தா! ✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

TAPS எனும் Tamilnadu Assured Pension Scheme அறிவிப்பு வெளியான நாள் தொடங்கி அதற்குண்டான சங்கத் தலைமைகளின் வரவேற்புகள் தாண்டி பெரும்பான்மை ஊழியர்கள் மத்தியில் ஐயங்களும், கேள்விகளும், எதிர்ப்புகளும் எழுந்த வண்ணமே உள்ளன. TAPSஐ முன் வைத்து உள்ளே - வெளியே என்று ஒரு மங்காத்தா ஆட்டமே நடைபெற்று வருகிறது.

TAPSற்கு வெளியே, பெரும்பான்மை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் விகற்பமாகக் கருதுவது சங்கங்களின் போக்கைத்தான். பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய உரிமைக்காகக் களம் கண்ட சங்கத் தலைமைகள், அவ்வுரிமையைத் தவிர்த்துவிட்டு, ஊதியம் & பணிக்காலத்தில் பல்வேறு படி நிலைகளில் உள்ள இலட்சக்கணக்கான ஊழியர்களுக்கான ஒரு புத்தம்புதிய திட்டமான TAPS என்ற திட்டத்தை அறிவித்தமாத்திரத்தில், அதன் சாதகபாதகங்கள் குறித்து கூட்டமைப்பாகக் கலந்து ஆராயும் நேரங்கூட ஒதுக்காது தங்களது அளவுகடந்த மகிழ்ச்சியை இனிப்பைப் பகிர்ந்து வெளிப்படுத்தினர். ஒருசில நிமிடங்களில் TAPSஐ பகுப்பாய்வு செய்யும் தொழிற்நுட்ப வல்லமை அப்போது அவர்களிடம் இருந்தது என்றால், அந்நிகழ்வில் பங்கேற்ற தலைமைச் செயலக சங்கம் பின்னர் வெளியிட்ட தனது அறிக்கையில் TAPS ஒரு சவலைக்குழந்தை (தாய்ப்பால் எனும் அடிப்படை உணவூட்டமே இல்லாது  மெலிந்த குழந்தை) என்று குறிப்பிடவேண்டிய தேவை என்ன? என்ற கேள்வியும் ஊழியர்கள் மத்தியில் தொக்கி நிற்கிறது. தலைமைச் செயலக சங்க சுட்டிக்காட்டலைத் தொழிற்சங்கப் பார்வையோடே பார்ப்போமெனில், பறிக்கப்பட்ட முழுமையான ஓய்வூதிய உரிமையைக் கேட்டுப் போராடிய களத்தில், ஊட்டமே இல்லாத ஒரு திட்டத்திற்காகக் கொண்டாடவேண்டிய தேவையே இல்லையே.

எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன / ஆளும்கட்சிகள் அறிவித்துவிட்டன என்ற காரணத்திற்காக தமது உறுப்பினர்கள் சார்ந்த எந்தவொரு அறிவிப்பையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதோ / எதிர்ப்பதோ தொழிற்சங்க இலக்கணமாகாது. கோரிக்கையை வடிவமைத்துக் களம் காண்பது சங்கங்களே அன்றி கட்சிகள் அல்ல.

ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தாலும் அதைத் தர்க்கரீதியாக ஆதாரத்துடன் மறுத்துத் தமது உறுப்பினர்களைத் தெளிவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள சங்கங்கள், TAPS குறித்த மாற்றுச் சிந்தைக்குள்ளாகச் செல்ல வேண்டாம், எதிர்க்கருத்துகளுக்குச் செவிமடுக்க வேண்டாம், இதை எதிர்ப்போரெல்லாம் சமூகவிரோதிகள், TAPSஐ விமர்சிக்க வேண்டாம், விமர்சனங்களை அனுமதிக்கவும் வேண்டாமென அறிவுறுத்தி வருவதெல்லாம் தொழிற்சங்க இலக்கணத்திலேயே இல்லாத புதுவித நடைமுறையாக இருக்கிறது.

இவையெல்லாம், உறுப்பினர்களால் உறுப்பினர்களுக்காக உறுப்பினர்களே இயக்கும் சங்கங்கள் அதிகாரத்தின் பக்கம் சாய்க்கப்பட்டுவிட்டனவோ என்ற ஐயத்தை மிக வலுவாக அடிப்படை உறுப்பினர்கள் மத்தியில் எழுப்பியுள்ளதால் TAPS அதன் அறிமுக நிலையிலேயே தொழிற்சங்க நடைமுறைகளுக்கு உள்ளே 100% பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, TAPS குறித்த எந்தவித விதிமுறைகளும் தற்போதுவரை வெளியாகாத நிலையில், விதிமுறைகளே இல்லாத / வெளியிடப்படாத TAPS ஊழியர்களுக்குச் சாதகமானதுதான் என்று அறிக்கைக்கம்புகள் சுற்றிவரும் சூழலில் TAPS குறித்த ஐயங்களை ஊழியர்களின் எதிர்கால நலனை முன்வைத்து விவாதித்துத் தெளிய வேண்டியது TAPSஐ எதிர்கொள்ளப் போகும் ஒவ்வொருவருக்குமான தேவையாக உள்ளது.

பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறு ஊழியர் உரிமைகள் - சட்டங்கள். தமிழ்நாட்டில் NPSஐ முன்வைத்து 2003ல் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு CPS அறிவிக்கப்பட்டபோது பணிக்கொடையும் எவ்வித சட்டப்பூர்வ அறிவிப்புமின்றி உடன் பறிக்கப்பட்டுவிட்டது. அதே நேரம், NPSல் உள்ளோருக்கு அன்று முதல் இன்று வரை பணிக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியமும் பணிக்கொடையும் வெவ்வேறானது என்பதை அதைப் பறிகொடுத்து 23 ஆண்டுகள் ஆகியும் நாம் உணரவேயில்லை என்பதும், இப்போதும் அதை உறுப்பினர்களுக்கு உணர்த்த சங்கங்கள் விரும்பவேயில்லை என்பதும் பெருங்கொடுமைதான்.

ஆம். ஊழியரது 10% சொந்தப் பணத்தை பணிக்கொடைக்கு ஈடாகக் கருதி TAPSல் பெற்றுக்கொள்ளலாம் என்றெல்லாம் சில மாமேதைகள் உருட்டி வருவது தொழிற்சங்கம் வலியுறுத்தும் ஊழியர் நலனிற்கு 100% எதிரான முரட்டு முடக்குவாதமே அன்றி வேறென்ன!?

பணிக்கொடைச் சட்டம் 1972ன் படியான கணக்கீட்டுகளின் அடிப்படையில் பார்த்தோமெனில், ரூ.25 இலட்சம் பணிக்கொடை என்பது அனைவருக்கும் கிடைக்கக்கூடியது அல்ல. தனிப்பட்ட ஊழியரின் பணிக்காலம் & அடிப்படை ஊதியம் சார்ந்தது. எனவே ரூ.25 இலட்சம் என்பது 90% ஊழியருக்கு ஒரு மாய எண் தான். மேலும், இந்த பணிக்கொடைச் சட்டம் குறித்து TAPS அரசாணையின் பார்வையில் மேற்கோள் காட்டப்படாததால், எந்த விதிமுறைகளின் அடிப்படையில் பணிக்கொடை நிர்ணயம் செய்யப்படப்போகிறது என்பது தற்போதுவரை உறுதியாகவில்லை.

TAPSல் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் அவர்களது 10% பிடித்தத்தில் இருந்துதான் வழங்கப்படும் என்றும் கூடுதல் தொகையை அரசு ஓய்வூதிய நிதியத்திற்கு வழங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இதுவரையிலான CPS பிடித்தத்தொகை சுமார்  ரூ.1,00,000 கோடி குறித்தோ அதன் எதிர்கால நிலை குறித்தோ எந்தவித குறிப்பும் அரசாணையில் இல்லை. மேலும், இந்திய ஓய்வூதியச் சட்டம் குறித்த பார்வையோ மேற்கோளோ அரசாணையில் இல்லை என்பதால், எந்தவிதமான கணக்கீடுகளின் அடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்படப்போகிறது என்பதும் இன்றைய சூழலில் விடை தெரிந்தாக வேண்டிய வினாவே.

இவற்றையெல்லாம்விட ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பு ஓய்வூதிய நிதியத்திடம் இருக்குமென்றே அரசாணையின் வழி அறிய முடிகிறது என்பதால் அரசின் ஓய்வூதியப் பொறுப்பில் இருந்து தன்னைத் தளர்த்திக்கொள்ள வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய நிதியத்தில் யார் யார் எல்லாம் இடம் பெறுவர் என்ற எந்தவிதக் குறிப்பும் அரசாணையில் இல்லை. நடைமுறையில் போக்குவரத்து & கூட்டுறவுத் துறைகளுக்கு இதே போன்ற ஓய்வூதிய நிதியங்கள் உள்ளன. இந்த ஓய்வூதிய நிதிய நடைமுறைகள் என்பது இந்திய ஓய்வூதியச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவையே. அதாவது ஓய்வூதியத்தை நிறுத்திவைக்கவோ தாமதப்படுத்தவோ ஓய்வூதிய நிதியத்தால் முடியும். உதாரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒத்த ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்குக்கூட பணி ஓய்வின் போது முழுமையான ஓய்வூதியமோ பணிக்கொடையோ வழங்காது, பல கட்ட தவணைகளிலும், காலம் தாழ்த்தியும் வழங்கி வருவதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நாளை இதே நிலை TAPSஐக் கையாளவுள்ள ஓய்வூதிய நிதியத்திற்கும் வராது என்று எவராலும் உறுதியளிக்க இயலாது.

ஊழியர்களின் 10% பிடித்தமானது பணிக்டை & ஓய்வூதியம் வழங்கப் போதுமானதாக இல்லாத சூழலில் கூடுதல் தொகையை அரசு ஓய்வூதிய நிதியத்திற்கு வழங்கும் என்பதும் அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதே. வரும் காலங்களில் ஆட்சியாளர்களின் அவ்வப்போதைய முடிவைப் பொறுத்து மாறும் அபாயம் உள்ளது. மேலும், ஓய்வூதிய நிதியம் ஊழியர்களின் பங்களிப்பை என்ன செய்யப்போகிறது என்பதும் இதுவரை தெளிவுபடுத்தப்படப்படவில்லை. 

போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதியம் ஓய்வூதியத்திற்கு என ஒதுக்கப்பட்ட நிதியான சுமார் 9000 கோடியை மாற்றுப் பணிகளுக்குப் பயன்படுத்தி மடைமாற்றிக்கொண்டதே ஊழியர்களுக்கு உரிய காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்படாததற்கான காரணமாகத் தொழிற்சங்கங்களால் கூறப்பட்டு வருகிறது. ஓய்வுதிய நிதியத்திற்கு என போக்குவரத்துக் கழகங்கள் ஒதுக்கிக் கொள்ளும் நிதியே இவ்வாறு இருக்கும் சூழலில் ஊழியர்களின் 10% பிடித்தத்தை வைத்துப் பராமரிக்கப்போகிற TAPSன் ஓய்வூதிய நிதியம் குறித்ததோ, அந்நிதி எவ்வாறு கையாளப்படப்போகிறது என்பது குறித்தோ எவ்வித ஆக்கப்பூர்வ கேள்விகளும் சங்கங்களிடம் இருந்து எழுப்பப்படாமல் இருப்பது பெரும் வியப்பாகத்தான் உள்ளது.

மேலும், 23 ஆண்டுகளாக எதிர்த்த CPSம் தற்போது அறிவித்த TAPSம் விருப்பத் தேர்வாக பணியிலுள்ள CPS பாதிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதில் இருந்தே இந்த இரு திட்டங்களும் எந்த அளவில் ஒப்புநோக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. இத்தகைய விருப்பத் தேர்வுமுறை மத்திய அரசுப்பணிகளில் NPS & UPS இடையே உள்ளதையும், NPSஐவிட மேலானது என்று மலர்தூவப்பட்ட UPSற்கு ஊழியர்களில் 80%ற்கும் மேல்  விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. தொழிற்சங்கங்களின் 23 ஆண்டுகால ஓய்வூதிய உரிமை மீட்புப் போராட்டப் பயணம் என்பது 10% பிடித்தமற்ற - ஊழியர்களின் உழைப்பிற்கேற்ற கொடுபடா ஊதியமான - ஓய்வூதியச் சட்டப்பாதுகாப்புள்ள 'பழைய ஓய்வூதியத் திட்டம்' வேண்டித்தானே அன்றி ஊழியர்களிடமிருந்தே பிடித்து ஊழியர்களுக்குக் கொடுக்கும் திட்டங்களுக்காக அல்ல என்பதைத்தான் UPS விருப்பத் தேர்வின் தோல்வி வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

2003ல் நடைமுறைக்கு வந்த CPSல் Settlementற்கான விதிமுறைகளையே இடதுசாரி தொழிற்சங்கங்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி 2016ல் தான் பெற முடிந்தது. TAPSற்கான விதிமுறைகள் எப்போது வருமெனத் தெரியவில்லை. நாளையே கூட வெளிவரலாம். வெளிவரட்டும் அதன் பின்பு அது குறித்தத் தீர்க்கமான சாதகபாதகங்களைப் பொதுவெளியில் விவாதித்துத் தெளிவோம். சாதகமெனில் தாராளமாக மகிழ்வோம்.


அதுவரையில் உறுப்பினர்கள் உள்ளத்தில் எழுந்த ஐயங்களைக் கேள்வியாக அரசிடம் முன்வைப்பதே சங்கங்களுக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக இருக்க வேண்டுமே அன்றி, சொல்லாத விதிகளை கற்பனை செய்து ஊழியர்களைச் சமரசம் செய்துகொள்ள நிர்பந்திப்பது அல்ல. ஒருவேளை பின்னாளில் வெளிவரும் விதிமுறைகளில் அநேக பாதகங்கள் இருக்கும் சூழலில் சங்கங்களின் மீதான மிச்ச சொச்ச நம்பிக்கையும் அற்றுப்போய்விடும் அபாயம் உள்ளது.


TETOJAC போராட்டத்தின் போது 2010ல் தரப்பட்ட 750 தனி ஊதியத்தோடே (PP) 99% சங்கங்கள் தங்களைச் சமரசம் செய்து கொண்டதன் விளைவு 16 ஆண்டுகள் கடந்தும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினை பேசுபொருளாக மட்டுமே நீடித்துக்கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் கொடுத்த அந்த PPயும் Incrementற்கு இல்லாது, Promotion Fixationக்கு இல்லாது, EL Surrenderக்கு இல்லாது, 'PP இருக்கு ஆனா அது POயா இல்ல' என்று மாற்றப்பட்டுவிட்டது. இதைக் கேட்கக்கூட நாதியத்துக் கிடக்கிறது இடைநிலை ஆசிரிய இனம்.


இன்று இதை விடக் கொடுமையாக TAPSன் வகைதொகை தெரியாத போதே கட்டவுட்டிற்கு பாக்கெட் பால் பீச்சும் ரசிக மனநிலைக்குள்ளாக தொழிற்சங்கங்க மூளைகள் ஆணியடிக்கப்பட்டுவிட்டன. ஓரிரு சங்கங்கள் மாத்திரமே எதிர்ப்பை / மாற்றத்தை வலியுறுத்தித் தங்களது உறுப்பினர்களுக்கு உண்மையாக இருக்க முன்வந்துள்ளன. வேறு சில விழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது வாயடைத்துக் கிடக்கின்றன. 750PPயைவிட மிகக் கொடிய வரலாற்றை எழுதிவிடாதபடி சங்கங்களின் கரங்களைத் தடுக்கப் போவது யாரோ!?


ரிலீஸ் ஆகாத படங்களுக்கு விருது கொடுப்பதும், வெளியிடப்படாத விதிகளுக்கு நன்றிக் கூடுகைகள் நடத்துவதும் தேவையற்ற வகையில் - வலிந்து ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தியை உருவாக்கிவிட்டுள்ளன என்பதை இதில் ஈடுபட்டுள்ளோர் உணர்ந்தாலும் உணர்த்த வேண்டிய இடத்தில் உரைக்காது சாலையில் சேலைகட்டி சோலைத் தீயை மறைக்கப் பார்க்கின்றனர். இத்தகைய அதீத மதிநுட்பம் சோலை, சேலை, சாலை, சாலையில் பயணிப்போர் என அனைவருக்கும் தீங்கைத்தான் விளைவிக்கும்.


10 இலட்சம் குடும்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் TAPS, தனது மங்காத்தாவை சங்கங்களைத் தாண்டி சபையிலும் விளையாடும் வல்லமை மிக்கது. அவையோர் இக்கள எதார்த்தத்தை உணர்ந்து காலத்தே செயல்பட முன்வந்தால் மட்டுமே யாவருக்கும் நன்மை தொடரும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive