இது தொடர்பாக ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாறிவரும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப சென்னை ஐஐடிபுதிய படிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது தொழில்நுட்பம், உற்பத்தி, ஆளுமை ஆகிய துறைகளில் தேவையான மனிதவளத்தை உருவாக்கும் வகையில் எம்ஏ (பொது கொள்கை), எம்டெக் செமிகண்டக்டர் மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி, எம்டெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எம்டெக் ரொபோட்டிக்ஸ் ஆகிய 4 புதிய முதுநிலை பட்டப் படிப்புகளை இந்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிக தேவை உள்ளது
புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி கூறும்போது, “தொழில் துறையினரின் தேவைகளையும் நாட்டின் தொழில்நுட்பத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பணியை ஐஐடி தொடர்ந்து செய்து மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், வளர்ந்து வரும் துறைகளுக்கு தேவைப்படும் நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் புதிதாக இந்த 4 முதுநிலை படிப்புகளை இந்த ஆண்டு தொடங்குகிறோம். இந்த படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் மாணவர்கள் சேரலாம்” என்றார்.
ஐஐடி உலோகவியல் மற்றும் மெட்டீரியல் இன்ஜினியரிங் துறையின் தலைவர் வி.சுப்ரமணிய சர்மா கூறுகையில், “இந்திய செமிகண்டக்டர் இயக்கத்துக்கு செமிகண்டக்டர் தொழில்நுட்ப அறிவு கொண்ட நிபுணர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர்.
இதைக் கருத்தில்கொண்டு, எம்டெக் செமிகண்டக்டர் மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி படிப்புக்கான பாடத்திட்டமானது செமிகண்டக்டர் துறையின் தேவையையும் செமிகண்டக்டர் நிபுணர்களை உருவாக்கும் நோக்கத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...