Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு அலுவலகங்களில் வாரம் ஒரு நாள் மரபு ஆடை: அமைச்சர் ராஜ்மோகன்

Tamil_News_lrg_4365406

தலைமைச் செயலகம் உட்பட அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் பணிபுரிவோர், வாரம் ஒரு நாள் பாரம்பரிய வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து வரும் வகையில், 'மரபு ஆடை' திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 'தமிழ்நாடு நாள்' விழா, சென்னையில் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பலரின் கனவு

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்த விழாவில், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். எல்லை காவலர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை, தமிழறிஞர்களின் நுால்களுக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, தமிழறிஞர்களுக்கு, 'தமிழ் செம்மல்' விருதுகளை வழங்கினர்.விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:ஆண்டுதோறும் ஜூலை, 18ம் தேதியை, 'தமிழ்நாடு தினமாக' கொண்டாடுகிறோம். அதேபோல, தமிழ்நாடு மாநிலம் உருவான நவம்பர், 1ம் தேதியையும், 'தமிழ்நாடு நாளாக' கொண்டாட வேண்டும் என்பது பலரின் கனவு. அது, இன்று நனவாகி உள்ளது. தற்போது குழந்தைகளுக்கு பரிசளிக்க, நாம், 'ஸ்பைடர்மேன், சூப்பர்மேன்' போன்ற பொம்மைகளை வழங்குகிறோம்.அதற்கு மாற்றாக, நம் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும், தஞ்சை தலையாட்டி பொம்மையை வழங்க வேண்டும். அது எந்த பக்கம் தள்ளினாலும், தானாக எழுந்து நிற்கும். அதுபோல, வாழ்க்கையில் நம்மை யார் தள்ளி விட்டாலும், மீண்டும் தன்னம்பிக்கையுடன் எழுந்து நிற்க வேண்டும். பொம்மை, உணவு, உடை, பேசும் மொழி என, அனைத்திலும், தமிழர்களுக்கு தனி பண்பாடு உள்ளது.தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார். நெடுஞ்சாலை, ஆவின், நீர்வளத்துறை என, அனைத்து துறைகளிலும், அமைச்சர்கள் லஞ்சத்தை வெறுக்கின்றனர். இதுவும் ஒரு வகையான அறம் தான். இவற்றுடன் பாரம்பரியத்தை கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம். நெசவாளர்களின் உழைப்பால் உருவாகும் பருத்தி ஆடைகளுக்கும், நம் பாரம்பரியத்திற்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

வேட்டி சேலை

இதற்காக தலைமைச் செயலகம் உட்பட, அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும், வாரத்தில் ஒரு நாள் பாரம்பரிய, வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து வரும் வகையில், 'மரபு ஆடை' திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதுதொடர்பாக, நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மதுரையில் தமிழ்ச் சங்கம் அமைத்த வரலாறு நமக்கு உண்டு. அந்த வகையில், உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில், தலைமைச் செயலகத்தில், தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரே அதன் தலைவராக செயல்படுவார்.உலகத் தமிழ் மாநாட்டை மீண்டும் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் இளம் பேச்சாளர்களை அதிகம் உருவாக்கும் வகையில், 'தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு' என்ற பெயரில், பள்ளிகளில் தமிழ் சார்ந்த, பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.'ரூ.5 கோடிக்கு பேரம் பேசினர்' அமைச்சர் ராஜ்மோகன் மேலும் பேசியதாவது: 'தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவியை, எனக்கு கொடுக்கச் சொல்லுங்கள்; அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஐந்து கோடி ரூபாய் தருகிறேன்' என, ஒருவர் என்னிடம் பேசினார். இது, பாடநுால் கழக தலைவரான லயோலா மணிக்கு மட்டுமே தெரியும். ஆனால், நான் அதை ஏற்கவில்லை. மாறாக, மணியிடம் சிரித்துக் கொண்டே, '500 கோடி ரூபாய் கொடுத்தாலும், பொருத்தமில்லாத பதவியை, முதல்வர் யாருக்கும் வழங்க மாட்டார்' என்றேன். அந்த பதவியை, ஒரு ரூபாய் கூட பணம் பெறாமல், புஷ்பவனம் குப்புசாமிக்கு வழங்கி உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.தமிழகத்திற்கு தனிக்கொடிவிழாவில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: தற்போது பள்ளிகளில், தமிழ் மொழியில் பேசினால் தவறு என்கின்றனர். இந்த மனநிலை, தனியார் பள்ளிகளில் அதிகம் உள்ளது. ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே, பெரிய ஆளாக முடியும் என்ற பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். பள்ளிக்கல்வி துறை அமைச்சர், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். இந்த ஆட்சியில் அதை செய்ய வேண்டும். இதை முதலில் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். அதேபோல், நவ.,1 மற்றும் ஜூலை, 18ம் தேதிகளில், முதல்வர் கையால் தமிழகத்திற்கான ஒரு கொடியை வடிவமைத்து ஏற்ற வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும், அந்த கொடி ஏற்றப்பட வேண்டும். தேசியக் கொடிக்கு சமமாக, தமிழின் பெருமையை போற்றக்கூடிய ஒரு கொடியை, உருவாக்க வேண்டிய இடத்தில், நாம் தற்போது உள்ளோம். நாடு சுதந்திரம் அடைந்த பின், ஆகஸ்ட், 15 மற்றும் ஜன., 26ம் தேதிகள் விடுமுறை நாட்களாக உள்ளன. அதேபோல, நவ.,1 மற்றும் ஜூலை, 18ம் தேதியிலும், அரசு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive