பார்வை 1 & 2 ல் உள்ள அரசாணை மற்றும் செயல்முறைகளின்படி, 2026-2027 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி சார்ந்த போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகளை வழங்கும் வகையில், 13.06.2026 முதல் வாரந்தோறும் விருப்பமுள்ள மாணவர்களுக்கு வெற்றிப் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இப்பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் சார்ந்த பாடவாரியான பயிற்சிகள், பயிற்சித் தாள்கள், மாதிரித் தேர்வுகள், மதிப்பீடுகள் மற்றும் தேர்வு உத்திகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சி வகுப்புகளின் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சித் தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளை முறையாகப் பயிற்சி செய்து, அவற்றில் எழும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை மாணவர்கள் சார்ந்த பள்ளி அளவிலேயே உறுதி செய்திடல் அவசியமாகிறது. எனவே, வெற்றிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் விருப்பமுள்ள மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை தினமும் மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெறும் நேரங்களில் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை, சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாணவர்கள் பயிற்சித் தாள் வினாக்கள் மற்றும் அதனைச் சார்ந்து எழும் ஐயங்களைத் தீர்க்கவும், முந்தைய ஆண்டுத் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளைப் பயிற்சி செய்யவும், மணற்கேணி செயலி போன்ற இணையவழி கற்றல் வளங்களைப் பயன்படுத்தவும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை தலைமையாசிரியர்கள் வாயிலாக உறுதி செய்ய வேண்டும்.
இதன் மூலம் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான தங்களது தயாரிப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும், உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளவும், வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் நோக்கங்களைச் சிறப்பாக அடையவும் இயலும்.
மேற்கண்ட நடவடிக்கைகளை அனைத்துத் தலைமையாசிரியர்களும் தவறாது செயல்படுத்துவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...