NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிள்ளைகளை பந்தாடுது பெற்றோரின் தற்பெருமை!

          கல்வி கற்றால் நல்ல வேலை கிடைக்கும். கார், அபார்ட்மென்ட் வாங்கலாம். வளமாக வாழலாம். இதுதான் கல்வியா? அப்படித்தான் நினைக்கிறது இன்றைய தலைமுறை. 
 
          கல்வி வணிகப்பொருள் என்ற நிலை வந்து விட்டது. இந்தப் பள்ளியில் முதலீடு செய்தால் பிள்ளைகள் நாளைக்கு நல்ல வேலைக்குப் போய் லாபம் சம்பாதித்துத் தருவார்கள் என்று பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். படி, கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகு, சம்பாதி, வீடு, கார் வாங்கு, செத்துப்போ என்றே இன்றைய தனியார் பள்ளிகளின் கல்வி போதித்துக் கொண்டிருக்கிறது.

            கல்வி நுகர்வு சார்ந்த விஷயமாக மாறிவிட்டது. கல்வி என்பது ஆளுமையை, வளர்ச்சியை, தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கிற ஒன்றாக கருதப்படவில்லை. அது தேசத்தின் எதிர்காலத்தையே பாதிக்கிற அளவுக்கு விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கிறது. சமூகப் பிரச்னைகள், உறவுகள், தோழமைகள் என எந்தத் தொடர்பும் இல்லாத வேலை, உணவு, உறக்கம் என சுய செயல்களுக்குள்ளான ஒரு வாழ்க்கைக்குள் சிக்கியே நிறைய இளைஞர்கள் தொலைந்து போய் கொண்டிருக்கிறார்கள்...’’
 
            இப்படி அதிரடியாகத் தொடங்குகிறார் குழந்தை உரிமை செயற்பாட்டாளரும் தோழமை அமைப்பின் இயக்குநருமான தேவநேயன்... ‘‘அரசுப் பள்ளி என்றால் தரமாக இருக்காது என்ற எண்ணம் இங்கே திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது. அரசுப் பள்ளியில் பணியாற்றுகிற 90 சதவிகிதம் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்தான் சேர்க்கிறார்கள். ஆங்கிலம் என்பது மொழி... அது அறிவல்ல. ஆனால், ஆங்கிலத்தில் பேசினாலே வேலை கிடைத்துவிடும் என்ற அதீத மூடநம்பிக்கை நம் மக்களிடம் இருக்கிறது. படிப்புக்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பேருண்மை பலருக்குப் புரிவதில்லை. 10ம் வகுப்பில் 500க்கு 498 எடுத்து தேர்ச்சிப் பெற்றவர்கள், பிளஸ்டூவில் 1,198 மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றவர்கள் எல்லாம் இன்று எங்கே இருக்கிறார்கள்?
 
                   ஒரு ஆய்வு செய்து பார்த்தால் உண்மை தெரியும். ஆபரேஷன் சக்சஸ்... நோயாளி..? ஒரு பாடத்தை புரிந்து கொள்ளாமல் வெற்று மனப்பாடம் செய்து எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் அதனால் துளியளவும் பயனில்லை. அது தேக்கம்தான். எப்படியாவது அடித்துப் பிடித்து, காத்துக் கிடந்து பிரபலமான ஒரு தனியார் பள்ளியில் சீட் வாங்கி பிள்ளையைத் தள்ளிவிட்டால் போதும்... வகுப்பறைக்குள் பிள்ளை என்ன பாடுபடுகிறது என்பது பற்றி எல்லாம் கவலை இல்லை. வீட்டுக்கு வந்து ஒரு ரைம்ஸ் பாடிவிட்டால் கட்டிய பணத்துக்கான பலன் கிடைத்துவிட்டது என்று கருதுகிறார்கள். உண்மையில் தனியார் பள்ளிகளில் குழந்தைகளின் உரிமைக்கு துளியளவும் மரியாதை இல்லை. எந்திரம் போலத்தான் வார்க்கப்படுகிறார்கள்.
 
            பெரும்பாலான கல்வித் தந்தைகள் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள். அதனால் அரசின் நடவடிக்கைகளும் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே இருக்கின்றன... என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறார் தேவநேயன். ‘‘அங்கன்வாடி திட்டம் உலகம் முழுவதும் செயல்பாட்டில் இருக்கிற அற்புதமான செயல்திட்டம். அதை தமிழகத்தில் திட்டமிட்டு அழித்து விட்டார்கள். 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் வளர்ச்சியையும் பராமரிப்பையும் உள்ளடக்கிய இடமாக அங்கன்வாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
           அதை சோறு வழங்கும் மையமாக மாற்றி சிறுமைப்படுத்தி விட்டார்கள். அங்கன்வாடிகளின் தனி பாடத்திட்டமே இருக்கிறது. கல்வி, மருத்துவ சோதனைகள், நோய் தடுப்புகள், சரிவிகித சத்துணவு எல்லாமே ஒரே கூடத்தில் கிடைக்கிறது. ஆனால், அதை ஏழைக் குழந்தைகளின் மதிய உணவுக்கூடமாக மாற்றி வைத்திருக்கிறது அரசு. அங்கிருக்கும் பணியாளர்கள் எவருக்கும் குழந்தைகளின் உளவியல் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. அங்கன்வாடிகள் மட்டும் சிறப்பாக செயல்படுமேயானால், நர்சரி பள்ளிகளை நோக்கி பெற்றோர் ஓடமாட்டார்கள்... என்கிற தேவநேயன் தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான செயல்பாடுகளையும் விதிமீறல்களையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
 
           ‘‘ஒரு பெரிய நிறுவனம் தமிழகம் முழுவதும் 750 நர்சரி பள்ளிக்கூடங்களை நடத்தியது. அந்த நிறுவனத்தின் பெயரின் மீதிருந்த மயக்கத்தில் ஆயிரக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அங்கே சேர்த்தார்கள். பள்ளிக்கு அங்கீகாரமே வாங்கப்படவில்லை என்ற உண்மை நீதிமன்றத்தின் மூலம் வெளிவந்தபோது தமிழகமே அதிர்ந்து போனது. ஏ.சி. வகுப்பறை, தனித்தனி டாய்லெட் என்றெல்லாம் ஆசைகாட்டி ஒரு மோசடி கல்வி நிறுவனத்தை அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். இப்போது அங்கு படித்த குழந்தைகளின் எதிர்காலம் என்னவானது? பெற்ற பணத்தை திருப்பிக் கொடுத்தார்களா என்று எதுவும் தெரியவில்லை.
 
          தனியார் பள்ளிகளின் பாடத்திட்டங்களின் தரத்தை யார் அளவிடுவது? குழந்தைகள் உடனான அணுகுமுறைகளை யார் கண்காணிப்பது..? தனியார் பள்ளிகளில் பெற்றோர் ஒருநாளாவது ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து பிள்ளைகள் எப்படி நடத்தப்படுகிறார்கள், பாடம் எப்படி நடத்தப்படுகிறது என்பதை சோதிக்க முடியுமா? பெற்றோரோடு சேர்த்து பிள்ளையையும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிற கண்காணிப்பு குழுக்கள் எந்த தனியார் பள்ளியிலேனும் நேர்மையாக அமைக்கப்பட்டுள்ளதா? சில பள்ளிகளின் பாடத்திட்டங்கள் இந்தியாவின் இறையாண்மைக்கே சவால் விடுகின்றன. ஒரு பள்ளியில் மதுரையின் பெயரை மதுரை என்கிற மதுராபுரி என்று புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள். மக்கள் சார்ந்த, மனிதம் சார்ந்த கல்விக்குப் பதிலாக குறுகிய மனப்பாங்கை உருவாக்கும் கல்வியை சில தனியார் பள்ளிகள் போதிக்கின்றன.
 
           தனியார் பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பதன் மூலமும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்தி பெற்றோரை ஈர்ப்பதன் மூலமுமே மாற்றத்தை கொண்டு வரமுடியும்... என்கிறார் தேவநேயன். தனியார் பள்ளிகள் நடத்தும் மாணவர் விடுதிகள் எவ்வித கண்காணிப்புக்கும் உட்படுத்தப்படுவதில்லை. விடுதிக்கென்று பெருந்தொகையை கேட்டு வாங்கும் பள்ளிகள், போதிய தண்ணீர், படுக்கை வசதி, உணவு வசதி கூட செய்து தருவதில்லை. படி, படி என்று எந்நேரமும் விரட்டும் கொட்டடி போலவே விடுதிகள் செயல்படுகின்றன. விடுதிகளில் தங்கிப் படிக்கும் குழந்தைகளை அழைத்து தலைகோதி விசாரித்துப் பாருங்கள்... கதறி அழுவார்கள்.
 
         ஆனால், ரெண்டு வருஷம் தானே... அட்ஜஸ்ட் செஞ்சுக்கோ என்று சிறிதும் இரக்கம் இல்லாமல் பெற்றோர் மீண்டும் அந்தக் கொட்டடிக்கு அனுப்புகிறார்கள். குழந்தைகளில் படிக்கும் குழந்தை, படிக்காத குழந்தை என்ற எந்தப் பிரிவும் இல்லை. படிப்பென்பது பாடப் புத்தகம் மட்டுமல்ல... ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. அதைக் கண்டறிந்து வளர்த்தெடுக்கும் இடம்தான் பள்ளிக்கூடம். அரசுப் பள்ளிகளில் அதற்கு ஏகப்பட்ட ஏற்பாடுகள் உள்ளன. நன்றாக பேசக்கூடிய மாணவனுக்கு இலக்கிய மன்றம், எழுதக்கூடிய மாணவனுக்கு கட்டுரைப்போட்டி, பாடக்கூடிய மாணவனுக்கு பாட்டுப்போட்டி, விளையாடும் மாணவர்களுக்கு அதற்கான பயிற்சிகள் என சகல வாய்ப்புகளும் அரசுப் பள்ளியில் கிடைக்கிறது. இத்தனை ஏற்பாடுகள் இருந்தும் அரசுப்பள்ளியை பெற்றோர் மனம் விரும்புவதில்லை.
 
            ‘‘அதற்குக் காரணமே அரசுதான்... என்கிறார் மாணவர் பெற்றோர் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் ந.வீரப்பெருமாள்.‘‘அரசு திட்டமிட்டு கல்வியை வணிகர்கள் கையில் தள்ளிவிடுகிறது. தன்னுடைய பொறுப்பில் இருந்து தட்டிக்கழித்து அதை பெற்றோரின் பொறுப்பாக மாற்றுகிறது. ஒரு பக்கம் 1 முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி என்று சட்டம் கொண்டு வந்துவிட்டு, மறுபக்கம் ‘25 சதவிகிதம் மட்டும் ஏழைகளுக்குக் கொடுங்கள்’ என்று தனியாரிடம் மன்றாடுகிறது. தனியார் பள்ளிகள் இதை சாதகமாக பயன்படுத்துகின்றன. அதிகாரிகள் மாதந்தோறும் பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். கண்காணிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் கல்வி அதிகாரிகள் டேபிள் ஒர்க்தான் செய்கிறார்கள்.
 
              பள்ளியின் மீது பெற்றோருக்கு ஒரு குறை இருக்கிறதென்றால் அதை அதிகாரிகள் மூலம் தீர்க்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம். நீதிமன்றத்தைத் தான் நாடவேண்டும். பள்ளி வாகனங்கள் மூலம் எத்தனையோ விபத்துகள் நடக்கின்றன. விபத்து நடந்த நாளன்று வீராவேசமாக செயல்படுகிற அதிகாரிகள் அதன்பிறகு மீண்டும் அலுவலகத்துக்குள் முடங்கிப்போகிறார்கள். இன்றும் இயங்கத் தகுதியற்ற, உச்சநீதிமன்றம் வகுத்துத் தந்த விதிமுறைகளை மதிக்காத பலநூறு பள்ளி வாகனங்கள் நம் தெருக்களில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்போதைய தமிழகத்தின் கல்விச்சூழலைப் பொறுத்தவரை பெற்றோர் நுகர்வோராகவே கருதப்படுகிறார்கள்.
 
           அதே நேரம் நுகர்வோருக்கு இருக்கும் உரிமைகளைக் கூட அரசும் பள்ளி நிர்வாகமும் பெற்றோருக்குத் தர மறுக்கின்றன. கல்விக் கட்டணத்தைப் பொறுத்தவரை நிலை மிகவும் மோசமாகவே இருக்கிறது. அரசு கமிட்டி போட்ட பிறகு நிலை இன்னும் மோசமாகி விட்டது. ஆண்டுக்கு 15 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம், கட்டணம் குறைவென்று கருதினால் மேல்முறையீடு செய்யலாம் என பல்வேறு விதிமுறைகளை பள்ளிகளுக்கு சாதகமாக வைத்தே இந்த கமிட்டிகள் செயல்படுகின்றன. முறையாக கட்டணம் வாங்கிக் கொண்டிருந்த பள்ளிகள் கூட இந்த விதிமுறைகளை பின்பற்றி தங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டன.
 
           தனியார் பள்ளிகள் பற்றிய குறையை யாரிடமுமே சொல்லமுடியாது. எந்த இடத்திலும் நியாயம் கிடைக்காது. இந்த யதார்த்தம் உணர்ந்தும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியுமே பெரும்பாலான பெற்றோர் அமைதி காக்கிறார்கள். அரசுப் பள்ளிகளை அங்கு பணிபுரியும் ஆசிரியர் மட்டுமல்ல... அரசும் கூட நம்பத் தயாரில்லை. அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை தேர்வு செய்து மிகச்சிறந்த தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று ஒரு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதைவிட, அரசுப் பள்ளிகள் மீதான அரசின் அவநம்பிக்கைக்கு வேறு சாட்சியே தேவையில்லை... என்கிறார் வீரப்பெருமாள்.
 
            அரசுப் பள்ளி பிடிக்கவில்லை. அரசு மருத்துவமனை பிடிக்கவில்லை. அரசு வேலை..? அரசுப் பள்ளி மீது வெறுப்பு... அரசே நடத்துகிற அண்ணா பல்கலை மீது..? மாற வேண்டியது அரசுப் பள்ளிகள் மட்டுமல்ல... அரசு மற்றும் பெற்றோர் மனோபாவமும்தான்!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive