Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

வேடிக்கை பார்ப்பதா? -------------------------------------------------தீக்கதிர் தலையங்கம்

         தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுமுடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக் கிறது. அதே நேரம் மாநகரங்கள் உள்ளிட்டு தமிழகத்தில் உள்ள நகர்புறப் பள்ளிகளில் விறுவிறுப்பாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதுவும்தற்போது நடைபெறும் சேர்க்கையில், பணமே பள்ளியையும், பாடப்பிரிவையும் தீர்மானிக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவு இன்னும் வெளிவரவில்லை.


          அதற்குள், 11ம் வகுப்பிற்கான சேர்க்கை துவங்கியிருக்கிறது. கல்லூரிகளில் முதலாமாண்டிற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இது எப்படி சாத்தியம் என்றால், அதற்கும் விளக்கம் வைத்திருக்கிறார்கள். அதாவது முன்பதிவு அடிப்படையில் சேர்க்கை என்கிறார்கள். மாணவர் சேர்க்கை எப்போது துவங்கும், எப்போது முடியும், விண்ணப்பங்கள் அனுப்ப வேண் டிய தேதி என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு வெளி யிட்ட அரசாணை தனியார் பள்ளிகளின் குப்பை தொட்டிகளில் கிடக்கிறது. அரசே அதற்கு உடந்தையாக இருக்கிறதோ என்ற சந்தேகம்தான் எழுகிறது.
காரணம் ஒவ்வொரு பள்ளியும், ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் தேதிக்குள் கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். மே 2ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெற்று, மே 11ம் தேதி மாலை 6 மணிக்குள் சேர்க்கை விபரங்களை வெளியிட வேண்டும். அதிக விண்ணப் பங்கள் வரும் பட்சத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மே 14ம் தேதிக்குள் சேர்க்கையை முடித்து அதன் விபரத்தை வெளியிட வேண்டும்.
ஆனால் பெரும்பகுதி தனியார் பள்ளிகள்கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர் சேர்க்கை குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய கல்வித்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்களின் சேர்க்கையை முடித்து விட்டனர். அந்த பள்ளிகளில் இனி எப்படி கல்வி உரிமை சட்டம் அமலாகும்? இடஒதுக்கீடு எப்படி அமலாகியிருக்கும்? மேலும் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அடுத்த வகுப்பிற்கான சேர்க்கையை துவங்குவது என்பது சட்டவிரோதம் ஆகும். இதைவிட கொடுமை என்னவென்றால் அரசிற்கே சவால் விடும் அமைப்புகளாக இந்த கல்வி நிறுவனங்கள் உரு வெடுத்து நிற்கின்றன.
மெட்ரிக், நர்சரி, பிரை மரி மற்றும் சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார்பள்ளிகளின் உரிமையாளர்கள் ஆளுநர் முன்னி லையிலேயே அரசின் சட்ட விதிமுறைகளையும், உத்தரவுகளையும் செயல்படுத்த முடியாது என முடிவெடுக்கிறார்கள். அதாவது கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவிகித ஒதுக்கீட்டில் சேர்க்கை நடத்த முடியாது. பள்ளிகளின் அங்கீகாரத்திற்கு விதிமுறைகளை உருவாக்கி, நிபந்தனைகள் விதிக்கக்கூடாது. விதிமீறி கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இதெல்லாம் ஆளுநர் பிறப்பித்த அரசு உத்தரவிற்கு எதிரான நடவடிக்கையாகும். இதையெல்லாம் பார்க்கும் போது, தமிழகத்தில் அரசு நிர்வாகம் என்று ஒன்று இருக்கிறதா ? என்ற கேள்விதான் எழுகிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கே சவால் விடுவதால் அரசு விரைந்து செயல்பட்டு கட்டாயக் கல்வி உரிமை சட்டம் அமலாவதை உறுதி செய்ய வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive