அரசு பள்ளிகளில் AA, SSA & RMSA(BC, KH) போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்களில் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவற்றில் AA தலைப்பானது மாநில அரசு நிதியில் வழங்கப்படும் நிரந்தர பணியிடங்களாகும். அவற்றிற்கு தனியே சம்பளம் பெறும் ஆணைகள் வழங்கப்படுவதில்லை. எனவே அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டுவருகிறது.
ஆனால் SSA & RMSA தலைப்புகளானது மத்திய அரசு வழங்கும் அனுமதியின் பேரில் சம்பளம் வழங்கும் தற்காலிக பணியிடங்களாகும். மத்திய அரசின் நிதி அனுமதி கிடைப்பதில் தாமதமானால் அதனை ஈடுகட்ட மாநில நிதியிலிருந்து முன் தொகை எடுத்துக்கொள்ளப்பட்டு சம்பளம் வழங்கிவிட்டு பிறகு மத்திய அரசின் நிதியில் சமப்படுத்திக்கொள்ளப்படுகிறது.
எனவே SSA & RMSA(BC, KH) போன்ற தலைப்புகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பெறும் விரைவு ஆணை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கோ, 3 மாதத்திற்கோ அல்லது ஆண்டு இறுதி வரையிலுமோ அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வாணைகள் வெளியிடுவதில் ஏற்படும் நிர்வாக தாமதங்களால் தமிழகம் முழுதும் உள்ள ஆசிரியர்கள் மாதக்கடைசியில் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல ஆசிரியர்கள் மார்ச் மாத சம்பளமே பெறாமல் உள்ள நிலையில் தற்போது ஏப்ரல் மாத சம்பளமும் பெறுவது தள்ளிப்போகிறது.
கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு செலவுகள் உள்ளன. உதாரணமாக குழந்தைகளின் கல்விக்கட்டணம், குடும்பத்துடன் சுற்றுலா செல்லுதல் மட்டுமல்ல மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது எனக்கருதி தங்கள் உடல் உபாதைகளுக்கான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வதனை கூட ஏப்ரல் இறுதியில் மேற்கொண்டு மே மாதம் ஓய்வெடுத்துக்கொண்டு ஜுன் மாதம் மீண்டும் பள்ளிக்கு வர நினைக்கும் முன்மாதிரி ஆசிரியர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிபர்வரி சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் காரணமாக பெருமளவு சம்பளம் குறைந்துவிட்ட நிலையில் தொடர்ந்து மார்ச் மாத சம்பளம், ஏப்ரல் மாத சம்பளம் போன்றவையும் உரிய நேரத்தில் கிடைக்காமல் ஆசிரியர்கள் சமூகத்தில் படும் அவதி சொல்லி மாளாது.
மாதா, பிதாவிற்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் உரிய நேரத்தில் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் கல்வித்துறை கனிவுடன் பரிசீலித்து, விரைந்து சம்பள ஆணைகள் வெளியிட வேண்டும் என பாடசாலை கோரிக்கை வைக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...