ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

        தமிழகத்தில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறைச் செயலாளர் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.

        தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வானது கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு-ஆசிரியர் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும் ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, நிதித் துறைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவு:

           ஓய்வூதியதாரர்கள்-குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆறு சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். இதன் மூலம், அகவிலைப்படி உயர்வானது 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயரும். இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.

உடனடியாக அளிக்க வேண்டும்: அகவிலைப்படி உயர்வை அளிக்க முதன்மை மாநிலக் கணக்காய்வுத் தலைவரிடம் இருந்து முறைப்படியான அனுமதி பெறும் வரை காத்திருக்க வேண்டாம். சென்னையில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி, கருவூல அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பொதுத்துறை வங்கிகள் உடனடியாக திருத்திய அகவிலைப்படியை வழங்கலாம்.

யார் யாருக்கு பயன்? அகவிலைப்படி உயர்வானது பல்வேறு தரப்பினருக்கும் பொருந்தும். அதன்படி, அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும், உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் ஏனைய ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தமிழ்நாடு சிறப்பு ஓய்வூதிய விதிகளின் கீழ், சிறப்பு ஓய்வூதியம், கருணைப்படி பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு பொருந்தும் என்று தனது உத்தரவில் நிதித் துறைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive