NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதார், கறுப்புப் பேனா, ட்ரெஸ் கோட்... நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் கவனத்துக்கு!!!

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை (மே 6) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க இருக்கிறது.
இந்தத் தேர்வை எழுதப்போகும் தமிழக மாணவர்களுக்கான தேர்வு மையத்தைத் தமிழகத்திலேயே ஒதுக்கும்படி, சி.பி.எஸ்.சி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



சென்ற வருடம் நடந்ததுபோல குழப்பம் மற்றும் பதற்றமின்றி, நீட் தேர்வை எழுதவும் கிராமத்து மாணவர்களும் நீட் தேர்வில் வெல்லவும், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் உயிரியல் ஆசிரியரும், நீட் தேர்வு பயிற்சியாளருமான எஸ்.என்.ராஜன் வழிமுறைகள் சொல்கிறார்.


* பெரும்பாலும் பெற்றோர்கள் பதற்றமடைந்து, அதைப் பிள்ளைகளுக்கும் கடத்திவிடுகிறார்கள். எனவே, பெற்றோர்கள் நிதானமாக இருந்தாலே, மனக் குழப்பத்தில் மாணவர்கள் செய்யும் தவறுகளைத் தடுக்கலாம். 

நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டில் எதையெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது எனக் கொடுத்திருக்கும் அறிவுறுத்தல்களை, கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். சென்ற வருடம், முழுக்கைச் சட்டை அணியக் கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது. முழுக்கைச் சட்டை அணிந்துவந்தால், தேர்வு எழுத அனுமதியில்லை அல்லது சட்டையை அரைக் கையாக வெட்டிவிட்டு எழுத அனுமதிக்கலாம் என்று சொல்லப்பட்டதால், அப்படியொரு சம்பவம் நடந்தது.

* கண்களால் பார்த்து கண்டுபிடிக்க முடியாதபடி, மிகச்சிறிய கேமராக்கள் தற்காலத்தில் வந்துவிட்டன. அவற்றை மறைத்துவைக்கும் வகையிலான அணிகலன்களைக் கண்டிப்பாக அணியக்கூடாது. உதாரணத்துக்கு, பெரிய பட்டன்கள் வைத்த ஆடை, கால்களை மூடிய செருப்புகள், ஷூ, பெரிய சைஸ் நகைகள், பெரிய டாலர், தலையில் போடும் பெரிய பேண்டு, பெரிய கிளிப்ஸ், பெரிய தோடு, வாட்ச் இவற்றையெல்லாம் முற்றிலும் தவிர்க்கவும். மூக்குக் கண்ணாடியைப் பரிசோதித்தே அனுமதிப்பார்கள்.

* இந்த வருடம், தேர்வுக்கு இடையில் கழிப்பறைக்குச் செல்லவேண்டுமானால், அட்டெண்டர் ஒருவர் வருவார். 3 நிமிடங்களுக்கு மேலாக பாத்ரூமில் இருந்தால், பரிசோதிக்க வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறது. எனவே, பதற்றமாகாதீர்கள். தவறு செய்கிறவர்களைத் தடுக்கவே இந்த நிபந்தனை.

* வெளியூரிலிருந்து வரும் மாணவர்கள், தேர்வு மையத்தில் தங்கள் உடைமைகளை வைப்பதற்கு இடம் தருவார்கள் என்று நம்பி வர வேண்டாம். அப்படிப்பட்ட வசதிகள் எதுவும் இல்லை. எனவே, பொறுப்பான யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு வரவும்.
* ஐ.டி.கார்டு (அட்மிட் கார்ட்), ஒரு போட்டோ, ஆதார் கார்டு போன்றவற்றைக் கண்டிப்பாக எடுத்துச்செல்லுங்கள்.


* சென்ற வருடம் அம்மாவின் பெயரை எழுதவேண்டிய இடத்தில், பல மாணவர்கள் அம்மாவை வீட்டில் அழைக்கும் பெயரை எழுதிவிட்டார்கள். இதைப் பரிசோதிக்கும் கண்காணிப்பாளர் கேள்வி கேட்பார். ரேஷன் கார்டு, பேன் கார்டு, ஆதார் போன்றவற்றில் எப்படி இருக்கிறதோ அந்தப் பெயரைத்தான் எழுத வேண்டும். இதையும் நினைவில் வையுங்கள்.

* சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு, ஓ.எம்.ஆர். ஷீட்டைப் பூர்த்திசெய்த அனுபவம் இருப்பதால் பதற்றமில்லாமல் செய்துவிடுகிறார்கள். ஆனால், ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு அந்த அனுபவம் இல்லாததால்,  நிறையத் தவறு செய்கிறார்கள். கண்காணிப்பாளர், அதைப் பலர் முன்னிலையில் சொல்லித் திருத்தச் சொல்லும்போது, கிராமத்திலிருந்து வந்திருக்கிற மாணவர்கள் பயம், டென்ஷன், வெட்கம் போன்றவற்றால்  தவித்துவிடுகிறார்கள். இதுபோன்ற விஷயத்தைத் தடுப்பது,  நீட் கோச்சிங் தரும் சென்டர்களின் கையில்தான் இருக்கிறது.

* நீட் எக்ஸாம் நடக்கும் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்புகள் செய்கிறார்கள். அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத கிராமத்து மாணவர்கள், சில அறிவுறுத்தல்களைத் தவறவிடுகிறார்கள். ஹாலுக்குள் வந்ததும், 'நாங்கள் ஏற்கெனவே அறிவித்தோமே கவனிக்கலையா?' என்று கண்காணிப்பாளர் கேட்கும்போது கூச்சப்பட்டுப் போகிறார்கள். சென்ற வருடம், எங்கள் பள்ளிக்கூடத்தில் தமிழிலும் அறிவிப்பு செய்தோம். இதை மற்றவர்களும் செய்தால் நன்றாக இருக்கும்.

* கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் வரும் கணிதக் கேள்விகளை, அதற்காகத் தரப்பட்டுள்ள ரஃப் ஷீட்டில் பேனாவால் போட்டுப் பார்க்கிறார்கள். பிறகு, பேப்பர் போதாமல் மறுபடியும் கேட்கிறார்கள். அந்த ரஃப் பேப்பரும் கேள்வித்தாளுடன் இணைக்கப்பட்டு வருவதால், அதைத் தாண்டி எங்களிடம் வேறு பேப்பர் கிடையாது. அதனால், கணக்குகளைப் போட்டுப் பார்த்து பதில் எழுத முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். பேனாவுக்குப் பதில் பென்சிலால் கணக்குகளைப் போட்டுப் பார்த்தால், ஒன்றை அழித்துவிட்டு அடுத்த கணக்கைப் போடலாம்.

* கறுப்பு பால் பாயின்ட் பேனாவைப் பயன்படுத்தி மட்டுமே ஓ.எம்.ஆர். ஷீட்டில் பதில்களை ஷேட் செய்ய வேண்டும்.

* ஓ.எம்.ஆர். ஷீட்டில் தங்களுடைய பெயர் மற்றும் ரோல் நம்பரை ஷேட் செய்யும்போது, நிறையத் தவறுகள் செய்கிறார்கள். உதாரணத்துக்கு ' UMA' என்கிற பெயரின் முதல் எழுத்தை, முதல் வரிசையில் இருக்கும்  U-விலும், அடுத்து,  M-ஐ அடுத்த வரியிலும்,  A-வை அதற்கடுத்த வரியிலும் ஷேட் செய்ய வேண்டும். ஒரே வரிசையில் இரண்டு தடவை ஷேட் செய்துவிட்டால், கண்காணிப்பாளர் அதைச் சரிசெய்தால், அடித்தல், திருத்தல் வருகிறது, கண்காணிப்பாளர், 'அங்கே சைன் செய்யுங்கள்' என்று சொல்லும்போது, பதற்றம் தொற்றிக்கொள்கிறது. கிராமத்து மாணவர்கள், பாடவாரியாக வலுவாக இருக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற விஷயங்களில் அனுபவமின்மை காரணமாக, பலவீனமாக இருக்கிறார்கள். 

''இதை ஆசிரியர்களும், நீட் கோச்சிங் சென்டர்களும்தான் சரிசெய்ய முடியும். செய்யவேண்டியது அவர்களின் கடமை. நமக்கான மருத்துவர்கள், கிராமங்களிலிருந்தும் உருவாக வேண்டும்'' என்று அழுத்தமாகச் சொல்லி முடித்தார், ஆசிரியர் ராஜன். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive