பள்ளி வாகனங்களுக்கு 2 நாள், 'கெடு' : தகுதி சான்றை ரத்து செய்ய முடிவு

ஆய்வுக்கு உட்படுத்தாத, 10 ஆயிரம் பள்ளி வாகனங்களை, இரண்டு நாட்களில், ஆய்வுக்கு உட்படுத்தாவிட்டால், தகுதிச்சான்று ரத்து செய்யப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, தாம்பரத்தை சேர்ந்த பள்ளி மாணவி, 2012ல், பள்ளி வாகனத்தில் இருந்த, ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்தார். அதன்பின், பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, அதை கண்காணிக்க, கலெக்டர் தலைமையில், பல்வேறு துறையினர் இடம்பெற்ற குழு உருவாக்கப்பட்டது.இந்தக் குழுவினர், ஆண்டுதோறும், கோடை விடுமுறையில், பள்ளி வாகனங்களில், பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளதா என, ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டும், ஏப்., 20க்குப் பின், கலெக்டர், ஆர்.டி.ஓ., போலீஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், மாவட்டம் தோறும், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும், தனியார் பள்ளிகளில், 30 ஆயிரத்து, 457 வாகனங்கள் உள்ளன. அவற்றில், 22 ஆயிரம் வாகனங்கள், இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 8,457 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. ஆய்வு செய்யப்பட்டதில், 1,550 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, மறு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை, நாளை மறுநாளுக்குள் ஆய்வுக்கு உட்படுத்தி, ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு, ஒப்புதல் பெறாத வாகனங்களை, மாணவர்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்; அவற்றின் தகுதிச்சான்றும் ரத்து செய்யப்படும். பள்ளி வாகன சிறப்பு சட்டத்தின்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share this

0 Comment to " பள்ளி வாகனங்களுக்கு 2 நாள், 'கெடு' : தகுதி சான்றை ரத்து செய்ய முடிவு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...