Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"கிரீன் கார்டு" வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன?


              அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.

              அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறும் உரிமையை அளிக்கும், "கிரீன் கார்டு" வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அமெரிக்காவில் ஏதாவது தொழிலில் முதலீடு செய்தால், இந்த உரிமையைப் பெற முடியுமா? ஏ.வி.கிருஷ்ண தேவராஜன், கோவை

              பதில்: அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவது என்பது, அதாவது சட்டப்பூர்வ நிரந்தரக் குடியுரிமை பெறுவது பல அம்சங்களைப் பொறுத்து அமையும். பலர், தங்கள் குடும்பத்தினர் வாயிலாக "கிரீன் கார்டு" பெறுகின்றனர்.

அவர்கள், அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்களின் மனைவி, பெற்றோர் போன்ற உடனடி உறவினர்களாகவோ அல்லது வேறு குறிப்பிட்ட பிரிவின் கீழ் வரும் அமெரிக்க குடிமகன்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம்.

               அமெரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமும் நிரந்தரக் குடியுரிமையைப் பெற முடியும். தகுதி வாய்ந்த 10 அமெரிக்கர்களுக்கு முழுநேர நிரந்தர வேலைவாய்ப்பளிக்கும் வகையில், ஏதேனும் தொழில் நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொழில் முனைவோர்கள் இந்த உரிமையைப் பெற முடியும்.

                இவர்கள் குறைந்த பட்சம் 5 முதல், 10 லட்சம் டாலர் வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் முதலீடு செய்ய வேண்டும். கிரீன் கார்டு பெறுவது தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய, அமெரிக்க சங்கம் மற்றும் குடியுரிமை சேவைத் துறையின் இணையதளத்தைக் காண்க: www.uscis.gov

             அமெரிக்காவுக்கு நிகராக, சீனா அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருவது போலத் தோன்றுகிறதே? இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? - அனிதா, கோவை

             பதில்: சீனாவின் பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா வரவேற்கிறது. சீனா 600 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை வறுமையிலிருந்து விடுவித்திருக்கிறது. அத்துடன் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியிருக்கிறது.

              கனடாவுக்கு அடுத்ததாக, அமெரிக்காவின் மிகப் பெரும் வர்த்தகப் பங்காளியாக சீனா திகழ்கிறது. அதேபோன்று, சீனா, இந்தியாவின் பெரும் வர்த்தகப் பங்காளியாகவும், தெற்காசியாவில் சீனாவின் பெரும் வர்த்தகப் பங்காளியாக இந்தியாவும் திகழ்கின்றன.

              வலுவான சீனப் பொருளாதாரம், அமெரிக்கா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் பலனுள்ளதாக அமையும். அது, நம் நுகர்வோருக்கு சீனப் பொருட்களை கிடைக்கச் செய்கிறது. அத்துடன் நம் பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறது.

            தனியார் டிராவல் ஏஜன்டுகளின் உதவியின்றி நான் அமெரிக்கா செல்ல விரும்புகிறேன். அமெரிக்க சுற்றுலாத் துறை எனக்கு உதவுமா? அமெரிக்க அரசே சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கிறதா? - செந்தில், பெங்களூரு

பதில்: அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வ, "சுற்றுலாத் துறை"யைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், பல மாகாணங்களும், நகரங்களும் சுற்றுலாத் துறையை இயக்குகின்றன. அது தவிர, அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணையதள விவரங்கள், அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் முறை, உங்கள் ஆர்வம், பயணக் காலம், நிதி நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப சுற்றுலாவைத் திட்டமிடுவது எப்படி என்பது குறித்து அறிய உதவும்.

சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் இணையதளத்தைப் பார்த்தால், இன்னும் கூடுதல் விவரங்கள் கிடைக்கும். விசாவுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் recreation.gov போன்ற இணையதளங்கள், உங்கள் அமெரிக்கப் பயணத்தை உரிய முறையில் திட்டமிட உதவும்.

அமெரிக்க நூலகம் மற்றும் தூதரகம் சார்பிலான இதர நிகழ்ச்சிகள் பற்றியும் அறிய, காண்க: http://chennai.usconsulate.gov

 www.facebook.com/chennai.usconsulate என்ற பேஸ்புக் பக்கத்திலும் சுற்றுலா குறித்த தகவல்களை அறியலாம்

அமெரிக்காவின் சகல சுற்றுலாத் தளங்கள் பற்றிய விவரங்களை அறிய, காண்க: www.discoveramerica.com

தமிழகத்தில் பல பள்ளிகள், அமெரிக்கக் கல்வி முறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்கின்றன. பள்ளிக் கல்வியில் அமெரிக்கா எத்தகைய பாடத்திட்டத்தை செயல்படுத்துகிறது? - ஜெயந்தி, சேலம்

பதில்: அமெரிக்காவில், மாகாண அளவிலான கல்வி நிர்வாக அமைப்புகள், பாடத்திட்டம் மற்றும் கல்வித் தரத்தை நிர்ணயிக்கின்றன. அரசு நடத்தும் பள்ளிகளில், வாசிப்பு, எழுத்து, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இதுதவிர, காட்சிக் கலைகள், இசை, உடற்பயிற்சிக் கல்வி, பரவலாக பிற நாட்டு மொழிகள் ஆகியவற்றையும் மாணவர்கள் பயில்கின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை, பள்ளிகள் தொடர்ந்து வழங்குவதை கண்காணிக்கவும் உறுதி செய்யவும் வகுப்புகள் வாரியாக தேசிய அளவிலான சோதனை முறைகளையும் அமெரிக்க அரசு செயல்படுத்தி வருகிறது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய நான்கு பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டத்தை அதிபர் ஒபாமா கூடுதலாக வலியுறுத்தி வருகிறார். அமெரிக்க கல்வி முறை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, காண்க: http://www.ed.gov

நான் ஒரு முதுநிலைப் பட்டதாரி. ஓரளவுக்கு ஆங்கிலம் தெரியும். அமெரிக்காவில் எனக்கான வேலைவாய்ப்புகள் எப்படி? அங்கு வேலை பெறுவதற்கான தகுதிகள் என்ன? - தமிழ்ச்செல்வன், மதுரை

பதில்: பல பொது மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளுக்கான விளம்பரம், அந்தந்த நிறுவனங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும். மற்றவர்கள் வேலைவாய்ப்பு ஏஜன்சிகள் வழியாகவும், வேலைவாய்ப்புள்ள நகரங்களில் வெளிவரும் உள்ளூர் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்வதன் மூலமாகவும் மற்றும் இணையதளங்களிலும் வெளியிடுகின்றனர்.

இந்திய நிறுவனங்களைப் போல, அமெரிக்க நிறுவனங்களும் தங்கள் தேவைக்கு ஏற்ப உரிய திறனும் அனுபவமும் உள்ள நபர்களையே தேடுகின்றன. அமெரிக்க வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பொதுவாக, விண்ணப்பிக்கும் நபர்கள் அந்த வேலையைப் பெறுவதற்குரிய தகுதி, அனுபவம் மற்றும் போட்டித் திறன் ஆகியவற்றைக் குறிப்பதாக இருக்கும்.

வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொள்வது, இணையதளம் மற்றும் செய்தித் தாள்களில் வெளியாகும் விளம்பரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜன்சிகள் ஆகியவையே அமெரிக்க நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அறிவதற்கான சிறந்த வழிகள்.

அவற்றின் மூலம், அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக்கு ஒருவர் எந்த அளவுக்குத் தகுதிஉடையவராக இருக்கிறார் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம். அமெரிக்க ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவோ அல்லது உங்கள் மொழியறிவை மேம்படுத்திக் கொள்ளவோ விரும்பினால், காண்க: http://americanenglish.state.gov

கேளுங்கள் அமெரிக்காவை...

தினமலர் வாசகர்களின் அமெரிக்கா குறித்த அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும், அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை பதில் அளிக்கிறது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று வெளியாகும் இந்த பிரத்யேக பகுதிக்கு உங்களது கேள்விகள் மற்றும் கருத்துக்களை அனுப்புங்கள்.

தினமலர்
கேளுங்கள் அமெரிக்காவை...
39, ஒயிட்ஸ் ரோடு,
சென்னை - 600 014.
இ-மெயில்:  askamerica@dinamalar.in




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive