தீயணைப்புத் துறையில் 1000 பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு

         தமிழக தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள சுமார் 1,000 பணியிடங்களை  நிரப்ப விரைவில் தேர்வு நடைபெற உள்ளது என அத்துறை இயக்குநர் ரமேஷ் குடவாலா தெரிவித்தார். 

               மதுரை திடீர்நகரில் உள்ள தீயணைப்பு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வை மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக தீயணைப்புத் துறைக்கு நுரைகள் மூலம் தீயை அணைக்கும் சாதனம் உள்ளிட்ட நவீன சாதனங்களை வாங்க அரசு ரூ.18 கோடி நிதியளித்துள்ளது. சிறப்பு பாதுகாப்புக்குச் செல்லும் உதவி மாவட்ட அலுவலர்களுக்கான படி ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அலுவலர்களுக்கு இணையதள வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. 350 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு செல்போன்கள் அளிக்கப்பட்டுள்ளன. மாநிலத்திலுள்ள 380 தீயணைப்பு நிலையங்களில் 72 வாடகைக் கட்டடமாகும். படிப்படியாக அவற்றுக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும். தீயணைப்புத் துறை வீரர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. வீரர்களுக்கு 1980 சிறப்புக் கவச உடைகள் அளிக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் "மாஸ் டிரில்லிங்' ஒத்திகை நடத்தினால், விபத்துகளின்போது விரைந்து செல்ல ஏதுவாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து நிலையங்களுக்கும் 100 என்ற தொலைபேசி எண் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தீயணைப்புத் துறையில் உள்ள சுமார் 1000 காலிப் பணியிடங்களை நிரப்ப இன்னும் 3 மாதங்களில் சீருடைப்பணியாளர் தேர்வு நடத்தப்படவுள்ளது. சிவகாசியில் பட்டாசு ஆலை அமைக்கும்போது தீயணைப்புத் துறையினரும் ஆய்வு குழுவில் இடம் பெறவேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய குடியிருப்புகள் உள்ளிட்டவற்றில் கட்டாயம் தீயணைப்புச் சாதனம் இருக்குமாறு கண்காணித்துவருகிறோம். அந்தந்த ஊராட்சி, மாநகராட்சி நிர்வாகத்துடன் சேர்ந்து தீயணைப்புத் துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி கட்டடங்களில் விதிமீறல் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாம்பரத்தில் தீயணைப்பு பயிற்சி மையம் உள்ளது. தற்போது திருப்போரூரில் பயிற்சி மையம் நவீன முறையில் அமையவுள்ளது. அதன் பின் மதுரை போன்ற இடங்களில் மண்டல அளவிலான பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது மதுரை மண்டல தீயணைப்புத்துறை இணை இயக்குநர் பொன்னுச்சாமி, மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் சரவணகுமார் (மதுரை), கருப்பையா (தேனி) ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive